மதுரை: மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கையை 75 நாளுக்குள் தயாரித்து வழங்குமாறு, மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியது. இத்திட்டத்திற்கு ₹8,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை உத்தேச வழித்தடத்தில், 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளை பள்ளம் அமைத்து மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.