போபால் : மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு, பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஹர்தா பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட தீ காரணமாக அதிலுள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற தொடங்கின.
இதையடுத்து பட்டாசு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் பதறியடித்து வெளியேறினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால், சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகிய நிலையில் தற்போது 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளதாவது; “ஹர்தா பட்டாசு ஆலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று சிந்த்வாரா மாவட்டத்தின் அஹர்வாடா கிராமத்தின் இரவு தங்கும் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளேன்.
தீ விபத்து சம்பவத்தின் குற்றவாளிகளை நாங்கள் விடமாட்டோம். குற்றவாளிகள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நிவாரணப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எங்கள் முன்னுரிமை” என தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.