Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

லக்னோ சவாலை சமாளிக்குமா டெல்லி

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ எஸ்ஜி - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இபோட்டியில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்ற லக்னோ, அடுத்து பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி அசத்தியது . கேப்டன் கே.எல்.ராகுல், டி காக், ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணால் பாண்டியா அதிரடி பேட்டிங்கில் கலக்க... யாஷ் தாகூர், நவீன் உல் ஹக், மயாங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் முத்திரை பதித்து வருகின்றனர்.

தமிழக வீரர் மணிமாறன் முதல் ஓவரை வீசும் அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் லக்னோ அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் நடப்பு சாம்பியன் சென்னைக்கு ‘தண்ணி’ காட்டினாலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. டெல்லி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

அதிலும் தொடர் தோல்வியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மும்பை அணிக்கு முதல் வெற்றியை பரிசாகத் தந்தது டெல்லி. அணியில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வருகின்றனர். வார்னர், பிரித்வி, பன்ட், மார்ஷ், அக்சர், ஹோப் அதிரடி எடுபட்டால் மட்டுமே லக்னோவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இஷாந்த்தின் அனுபவ வேகம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. பந்துவீச்சு வியூகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் கேப்பிடல்ஸ் உள்ளது.

4வது வெற்றிக்காக லக்னோவும், 2வது வெற்றிக்காக டெல்லியும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

* இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளதில், லக்னோ 3-0 என ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

* அதிகபட்சமாக லக்னோ 195 ரன், டெல்லி 189 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 193, டெல்லி 143 ரன் எடுத்துள்ளன.