சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை குவைத் செல்லவேண்டிய விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானப் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.05 மணியளவில் குவைத் நாட்டுக்கு ஜெசீரா ஏர்லைன்ஸ் எனும் தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானத்தில் செல்ல வேண்டிய 174 பயணிகள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏற தயார் நிலையில் இருந்தனர்.
முன்னதாக, இந்த ஜெசீரா விமானம் குவைத்தில் இருந்து நள்ளிரவு 1.15 மணியளவில் சென்னைக்கு வந்து, மீண்டும் அதிகாலை 2.05 மணியளவில் குவைத்துக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு 1.15 மணியளவில் குவைத்தில் இருந்து ஜெசீரா விமானம் வந்திறங்கியது. அப்போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு உள்ளது. அவற்றை சரிசெய்தபின் குவைத் செல்லும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று தலைமை விமானி குறிப்பு எழுதிவிட்டு ஓய்வெடுக்க சென்றார். இதைத் தொடர்ந்து, குவைத் செல்லும் விமானம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை பழுதுபார்க்கும் பணி சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாகியும் முடியவில்லை. இதனால் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை 174 பயணிகளும் காத்திருந்தனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளை ஜெசீரா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, விமானத்துக்காக காத்திருந்த 174 பயணிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, குவைத் நாட்டை சேர்ந்த தனியார் ஜெசீரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு சென்னை விமானநிலையத்தில் தனி அலுவலகம் இல்லை. இதனால் பழுதுபார்ப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. இதனால் அந்த விமானத்தை ரத்து செய்துவிட்டு, அதில் செல்லவேண்டிய பயணிகளை ஓட்டல்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.