ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சநதேகத்தால், மனைவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே மாகரல் பகுதியை சேர்ந்தவர் வேலு (42). இவரது, மனைவி சுமதி (39). மரம் வெட்டும் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகளுக்கு திருமணமாகி, கணவர் குடுமபத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். இத்தம்பதியினர், ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரிடம், கான்ட்ராக்ட் அடிப்படையில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
தம்பதி உள்பட 5க்கும் மேற்பட்ட குடும்பங்களை தண்டலம், ராஜலட்சுமி நகர் பகுதியில் தனித்தனியே தங்க வைத்து, சந்துரு வேலை வாங்கி வந்துள்ளார். இதற்கிடையே, தனது மனைவியின் நடத்தை மீது வேலுவுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், தம்பதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வேலுவும், சுமதியும் காலை முதலே மது அருந்தியுள்ளனர். இரவு மதுபோதையில் மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தின்பேரில் மீண்டும் வேலு வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் தனது மனைவி சுமதியின் தலையில் மரம் வெட்டும் அரிவாளால் வேலு ஓங்கி வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். எல்லோரும் அயர்ந்து தூங்கியதால், அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு செல்ல பிற குடும்பத்தினர் சுமதியை அழைக்க வந்துள்ளனர்.
அப்போது, அவர் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அலறி சத்தமிட்டனர். அருகிலேயே எதுவும் தெரியாத நிலையில் கணவர் வேலுவும் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த சுமதியின் கணவன் வேலுவிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், மதுபோதையில் சண்டையிட்டு மனைவியை மரம் வெட்டும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, வேலுவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.