கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தண்டலச்சேரி பகுதியில் உள்ள வீரலட்சுமி திருக்கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில் 2ம் ஆண்டு வீரலட்சுமி அம்மன் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி, வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டி யாக பூஜையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தீமிதி திருவிழா அன்று நவச்சண்டி யாக பூஜை, கலச அபிஷேகமும் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் 117 பேர் வேப்பிலை அணிந்து, வேல் குத்தியும் ஆலயத்தை வலம் வந்தனர். இதனை தொடர்ந்து, பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர்.
இந்த தீமிதி திருவிழாவை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, வீரலட்சுமி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், தீமிதியும் வானவேடிக்கையும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தண்டலச்சேரி கிராம பெருந்தமைக்காரர் உள்ளிட்ட பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கவரப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.