Saturday, June 1, 2024
Home » குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Lavanya

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருவதுடன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற புதுமையான ஊரக வளர்ச்சி திட்டங்களையும் இவ்வரசு வகுத்து, அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறது.

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தல். முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 வகுப்பறைகளும், என மொத்தம் 1050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் 2022-23ம் ஆண்டில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டம் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட 1000 வகுப்பறைகள் தமிழ்நாடு முதலமைச்சர் 26.09.2023அன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போது, இன்று இரண்டாம் கட்டமாக மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1000தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு செயலாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் 22.4.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின்மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் “கிராமச் செயலகங்கள்” கட்டப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அதனடிப்படையில், கிராம ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே கிராமத்தில் அமையப்பெற்று இருப்பின், அவற்றை முதன்மைப்படுத்தி சுமார் 600 கிராமச் செயலகக் கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கிராமச்செயலகக் கட்டடங்களில் கிராம ஊராட்சித் தலைவருக்கான அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, கிராம நிர்வாக அலுவலருக்கான அறை மற்றும் கூட்ட அறை, இணையதள வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றுடன் அனைத்து துறை அலுவலர்களும் பயன்படுத்திடும் வகையில் கூட்ட அறையில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், கிராம ஊராட்சியிலுள்ள பொதுமக்கள் கிராம செயலகங்களை எளிதில் அணுகி தங்களது குறைகளைப் போக்கிட வழிவகை ஏற்படும். 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு செயலாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 24 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு செயலாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த ஊராட்சி ஒன்றியக் கட்டடங்களுக்குப் பதிலாக, நாமக்கல் மாவட்டம் – பரமத்தி, தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – கெலமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணச்சநல்லூர், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்க் கூறு நிதியிலிருந்து 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர். ஆர். காந்தி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் .பா. பொன்னையா, இ.ஆ.ப., தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi