சென்னை: மாதவரம் அருகே சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி 90 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாதவரம் தபால்பெட்டி கே.கே.ஆர் கார்டன் பகுதியில் தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து சட்டவிரோதமாக விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ், அருள்மொழி, கஸ்தூரி ஆகியோர் கொண்ட 5 பேர் குழுவினர் நேற்று காலை கே.கே.ஆர் கார்டன் பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர்.
பதப்படுத்தபட்ட தாய்ப்பால் 200 மி.லி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் செம்பியன் முத்தையா (40) என்பவரிடம் நடத்திய விசாரணையில், புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடை நடத்துவதற்கு அனுமதி பெற்று, தாய்ப்பால் தானம் செய்யும் தாய்மார்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பாலை வாங்கி அதில் மூலப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பால் வராத பெற்றோர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், மணலி புதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மூலம் தாய்ப்பாலை சேகரித்து, சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை மாதவரம் பால்பண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த 23ம் தேதி புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செம்பியன் முத்தையா கடையில் சோதனை நடத்தியபோது அங்கு காலி பாட்டில்கள் இருந்தன. அப்போது தன் மீது தவறான புகார்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரியிடம் தெரிவித்ததால், அதை நம்பிய அதிகாரிகள் அவரை எச்சரித்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சமூக ஆர்வலர் ஒருவர் இங்கு தாய்ப்பாலை வாங்கி அதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நேற்று காலை அதிரடியாக கே.கே.ஆர்.கார்டன் பகுதிக்கு வந்து சோதனை நடத்தினர். தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். செம்பியன் முத்தையாவுக்கு உதவிய செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பால் பாட்டில்களை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து, அதன் அறிக்கை வந்த பின்னர் கடையின் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என தெரிவித்தனர்.
* வணிகரீதியாக விற்க அனுமதிக்க கூடாது
சென்னையில் பிறந்து 6 மாதம்கூட நிறைவடையாத குழந்தைகள் 125 பேர் பல்வேறு காப்பகங்களில் உள்ளனர். அவர்களுக்கு அரசின் தாய்ப்பால் வங்கிகளில் இருந்து தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தாய்ப்பால் கிடைக்காத குடும்பத்தார் ஆன்லைன் வழிமுறைகளில் தாய்ப்பாலை வணிகரீதியாக பெறுவதும் நடக்கிறது. இந்த முறையில் வீட்டில் இருந்தபடியே தாய்ப்பாலை பெற்றுக்கொள்ள முடியும். மிகச் சில நிறுவனங்களே இந்த சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிகளை மீறினால் எடுக்கப்படும். தாய்ப்பாலை வணிகரீதியாக விற்பதற்கு அனுமதி வழங்குமாறு பல அமைப்புகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தை அணுகியுள்ளனர். மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.