ராஜ்கோட்: இதர இந்திய அணியுடனான இரானி கோப்பை போட்டியில், ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன் எடுத்திருந்தது (90 ஓவர்).2ம் நாளான நேற்று அந்த அணி 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (94.2 ஓவர்).
சவுராஷ்டிரா பந்துவீச்சில் பார்த் பட் 5, தர்மேந்திரசிங் ஜடேஜா 3, யுவராஜ்சிங் டோடியா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. 2ம் நாள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்துள்ளது (80 ஓவர்). வாசவதா 54, சமர்த், புஜாரா, பிரேரக் தலா 29 ரன், பார்த் பட் 27 ரன் எடுத்தனர். கேப்டன் உனத்கட் (17 ரன்), டோடியா (0) களத்தில் உள்ளனர். இதர இந்தியா பந்துவீச்சில் கவெரப்பா, சவுரவ் குமார் தலா 3, முலானி 2, புல்கிட் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.