Tuesday, May 14, 2024
Home » உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெறிநாய்க்கடி: ஆண்டுக்கு 85,000 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் உத்தரப்பிரதேசத்துக்கு முதலிடம்; ரேபீஸ் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெறிநாய்க்கடி: ஆண்டுக்கு 85,000 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் உத்தரப்பிரதேசத்துக்கு முதலிடம்; ரேபீஸ் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

by Karthik Yash

உலகளவில் வெறிநாய்க்கடி ரேபீஸ் பாதிப்பால் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 2 முதல் 5 பேர் வரை இறப்பை சந்திப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில்தான் இந்த பாதிப்பு மிக அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள் என வெறிநாய்க்கடி பாதிப்பில் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் தெருநாய்களால் கடிபட்டு ரேபீஸ் நோய் தாக்கத்துக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல் நாய்க்கடியால் பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கையும் அதிகம். 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி விலங்குகள் கடித்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முதலிடம் பிடித்திருப்பது உத்தரபிரதேசம், 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளன. 2019ல் விலங்குகள் கடித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 72,77,523. இது 2020ல் 46,33,493 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் 2022 முதல் ஏழு மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து 2022 ஆகஸ்ட் தொடங்கி கடந்த 2023 ஆகஸ்ட் வரையிலான 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில், ‘தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து பராமரிப்பவர்களே, அந்த விலங்குகள் மக்களை தாக்கினால் ஏற்படும் செலவையும் ஏற்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதோடு இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு தொல்லை அளிக்கும் தெருநாய்கள், பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அவற்றில் ரேபீஸ் பாதிப்புள்ள விலங்குகளை அழித்தும், மற்றவற்றுக்கு தடுப்பூசி போட்டும் வந்தன. உள்ளாட்சி அமைப்புகளின் இந்த நடவடிக்கைக்கு விலங்குகள் நல அமைப்புகள் பெரும் தடையாக அமைந்தன. அவற்றின் முட்டுக்கட்டையால் இன்று தெரு நாய்கள் பிரச்னை பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதே நிலைதான் மற்ற வளரும் நாடுகளிலும் நிலவுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் என வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை அங்கு தெருநாய்கள் பிரச்னை என்பது பெரிய அளவில் இல்லை. அங்கு வளர்ப்பு பிராணிகளுக்கு அதை வளர்ப்பவர்களே பொறுப்பாக்கப்படுகின்றனர். இதனால் வளர்ந்த நாடுகளில் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு முறையான பராமரிப்புடன் அவ்வப்போது அதற்கான தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. எனவே தற்போது எழுந்துள்ள வெறிநாய்க்கடி பிரச்னைக்கு மற்ற தொற்றுநோய்களுக்கு எப்படி உலக நாடுகள் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனவோ அதுபோன்றதொரு நடவடிக்கையை எடுக்க வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கர்ப்பிணி, தாய்மார்களை தடுப்பூசி பாதிப்பதில்லை
வளரும் கருவை தடுப்பு மருந்து பாதிப்பதில்லை. எனவே கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் தடுப்பூசி இடுவது பாதுகாப்பானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

* செல்லப்பிராணி விரும்புவோருக்கு குறிப்புகள்
செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி இடவும். குறிப்பாக வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிக்கு தடுப்பூசி இடாத நிலையில் அது கடித்தால்/பிராண்டினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* தடுப்பூசி எப்போது?
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த தொடங்க வேண்டும். முதல் நாள், 3, 7, 14, 28 மற்றும் 90 (கட்டாயமல்ல) ஆகிய நாட்களில் போட வேண்டும்.

* ரேபீஸ் நோய்க்கு மருந்து கண்டறிந்தவர்
ரேபீஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவர் மறைந்த நாளான செப்டம்பர் 28ம் தேதி, உலக ரேபீஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வெறிநாய்க்கடி நோய் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிகள்
* வெறிநாய்க்கடி நோயை பற்றிய விழிப்புணர்வை, குறிப்பாகக் குழந்தைகளிடம் ஏற்படுத்துதல்.
* தெருநாய்களிடம் தேவையற்ற தொடர்பை தவிர்த்தல்.
* வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களோடு தொடர்பு ஏற்படக்கூடிய நாய் பிடிப்பவர்களும், மருத்துவப்பணியாளர்களும், குறிப்பாக கிராமப்பகுதிகளில் நேரத்தை அதிகமாக செலவிடும் பயணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
* விலங்கு கடித்து விட்டால் தடுப்பூசி செலுத்துவதற்காக உடனடியாக ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
* தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல்.

வெறிநாய்க்கடி அறிகுறிகள்
* காயத்தில் வலி அல்லது அரிப்பு
* காய்ச்சல்
* 2-4 நாட்கள் நீடிக்கும் தலைவலி
* நீரை கண்டு அஞ்சுதல்
* பிரகாசமான ஒளி அல்லது சத்தத்தை பொறுத்துக்கொள்ள இயலாமை
* சித்தப்பிரமையுடன் நடத்தை மாற்றம்

* சட்டம் செயல்பாடு
இந்தியாவிலுள்ள விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு சட்டம் முழு மூச்சுடன் செயல்பட்டால் 6 மாத காலத்தில் 60 சதவீதம் தெருநாய்களை சரிசெய்துவிட முடியும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். ஆனால் இந்தியாவில் சட்டங்களுக்கும், செயல்படுத்துதலுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பவே பல தசாப்தங்கள் ஆகின்றன என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கவலை தெரிவிக்கிறது.

* விலங்கு கடித்துவிட்டால் செய்ய வேண்டியது என்ன?
விலங்குகள் கடித்த இடத்தில் காயத்தை 10-15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரை பீய்ச்சி அடித்து கழுவ வேண்டும். 70 சதவீதம் ஆல்கஹால்/எத்தனால் அல்லது பொவிடோன் அயோடின் பயன்படுத்தியும் காயத்தை கழுவலாம். கூடிய விரைவில் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* தெருநாய்கள் தோன்ற காரணம்?
பரியா நாய்கள் எனும் நாய் இனமே இந்தியாவில் தெருநாய்கள் தோன்ற காரணம் என்று கருதப்படுகிறது. சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாய் இனம் ஆசியா, வட ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வாழ்கின்றனவாம். இந்த நாய்கள் சாதாரணமாக 10 குட்டிகள் வரை ஈனும் தன்மையுடையதாக கருதப்படுகிறது. இதனால் விலங்குகளின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும் போன்ற பரிந்துரைகளும் உள்ளது. மேலும், தெருநாய்களின் பிறப்பு விகிதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை குறைப்பதை இலக்காக வைத்துக்கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்வதை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

* வளர்ந்த நாடுகளில் தொல்லை இல்லை
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தெருநாய்களை காண முடியாது. காரணம் அங்கே சேரிப்பகுதிகளோ, தெருவில் நாய்களுக்கு உணவோ இருப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அங்கே உள்ள நாய்களும் கைவிடப்பட்டவையாக இருக்கும். அவை உடனுக்குடன் பிடித்துச் செல்லப்படுகின்றன.

* குழந்தைகளை அதிகம் பாதிக்கும்
ரேபீஸ் மனித மூளையை பாதிக்கிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனால் மரணம் அடைகின்றனர். உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரப்படி வெறிநாய்க்கடி நோயால் 95 சதவீத மரணம் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலுமே ஏற்படுகிறது. நாய்க்கடிக்கு அதிகமாக உள்ளாகும் குழந்தைகளுக்கே தொற்று ஏற்படும் ஆபத்தும் கூடுதலாக இருக்கிறது. ஒவ்வொரு பத்து மரணங்களிலும் நான்கு மரணங்கள் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகின்றன. லிஸ்ஸா வைரசால் உண்டாவதே வெறிநாய்க்கடி நோய்.

காயம், கீறல் அல்லது பாதிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் சளிச்சவ்வு பரப்போடு நிகழும் தொடர்பால் (கடி போன்றவை) இந்த வைரஸ் விலங்கில் இருந்து மனிதருக்கு பரவுகிறது. மனித உடலின் காயமற்ற பகுதியின் வழியாக இந்த வைரஸ் பரவ முடியாது. மனித தோல் அல்லது சதை பகுதியை அடையும் இந்த வைரஸ், தண்டு வடத்திற்கும் மூளைக்கும் முன்னேறுகிறது. வைரஸ் மூளையை எட்டியவுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் அறிகுறிகள் தோன்றுகின்றன. ரேபீஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் ஒருவித சித்தபிரமைக்கு உள்ளாகி, அவர்களும் விலங்குகளை போன்ற நடத்தைக்கு ஆளாகி விரைவில் மரணத்தை சந்திக்கின்றனர்.

* வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி அவசியம்
உலகிலேயே இந்தியாவில்தான் ரேபீஸ்நோய்க்கு மரணமடைபவர்கள் அதிகம். வீடுகளில் வளரும் நாய்களுக்கே 32 விழுக்காடு மக்கள் தடுப்பூசிகள் எதுவும் போடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வு அறிக்கை ஒன்று. நாய்களை வீடுகளில் வளர்ப்போர் அதற்கு ரேபீஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். வெறிநாய்க்கடி நோய் உயிருக்கு ஆபத்தானது என்றாலும் தடுப்பூசியால் 100 சதவீதம் தடுக்கக்கூடியதே.

* பிரிட்டிஷ் ஆட்சியில் துவங்கிய நாய்கள் ஒழிப்பு
19ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தெருநாய் ஒழிப்பில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு வந்தன. எத்தனை நாய்கள் கொல்லப்பட்டாலும் புதிது புதிதாய் நாய்கள் வந்து கொண்டே இருந்ததாலும், நாய்கள் மீதான கருணை மனிதர்களிடம் எழுந்ததாலும் நாய்களை ஒழிப்பதற்கு பதிலாக கட்டுப்பாடு செய்ய வேண்டுமெனும் சட்டம் 1994ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நீண்டகால பார்வையாக நாய்களுக்கு கட்டுப்பாடு செய்வதும், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதும் தெரு நாய் தொல்லைகளை தவிர்க்கும். எனினும் அவசரகால தேவைகளுக்கு இவை ஒத்து வராது. கோடை காலங்களில் தெரு நாய்களின் தொந்தரவு இன்னும் அதிகம் இருக்கும்.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi