புதுடெல்லி: நேபாளத்தில் தொடர்ந்து 4 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. மேற்கு நேபாளத்தில் நேற்று மதியம் 2.25 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவானது. தொடர்ந்து 2.51 மணிக்கு நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானது. இதையடுத்து அதேபகுதியில் 3.6 மணிக்கு 15 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவிலும், 3.19 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தில் கட்டிடங்கள் அதிர்ந்தன. மொத்தம் 11 பேர் காயமடைந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வீடுகள், உயரமான குடியிருப்புகள், அலுவலகங்களில் இருந்த மக்கள் வௌியேறினர். மேலும், சண்டிகர், ஜெய்பூர் மற்றும் வடஇந்தியாவின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.