Thursday, May 2, 2024
Home » இன்றே செய்க இப்போதே செய்க!

இன்றே செய்க இப்போதே செய்க!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 45 (பகவத்கீதை உரை)

கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நாத்திகன்தான் எத்தனை பக்தி இலக்கியங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது! ஆனால், அவ்வாறு படிப்பதால் ஞானம் பெறாமல், அஞ்ஞானம் மட்டுமே பெறுவேன் என்று வீண் பிடிவாதம் பிடிப்பதுதான் அந்த நாத்திகனின் தனித்தன்மை! ஒருமுறை ஒரு நாத்திகவாதி, ‘இந்தக் கல்லில் கடவுள் இருப்பதாக நம்புகிறீர்களே, இந்தக் கல்லையும், இதோ இந்த நாயையும் இந்த நதியில் வீசுவோம். யார் மூழ்காமல் மீள்கிறாரோ அவரை இறைவனாகக் கொள்வோம், சரியா?’ என்று சவால் விட்டார். அதற்குக் குழுமியிருந்தவர்களில் ஓர் ஆத்திகர், ‘இப்படி வைத்துக்கொள்வோம். இந்தக் கல்லை நாய் மீது எறிவோம் அல்லது இந்த நாயைக் கல்மீது எறிவோம். எது காயம் படாமல் இருக்கிறதோ, அதையே இறைவன் என்று கொள்வோம்,’ என்று பதிலளித்தார்.

இப்படிப்பட்ட எதிர்வாதத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு நாத்திகர், நிறைய இறை சமாசாரங்களைத் தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது! பிரஹலாதனைவிட ஹிரண்யன்தான் நாராயணனைப்பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் என்பதுதானே புராணம் நமக்குஉணர்த்தும் பாடம்? தன் மகனிடமிருந்து நாராயண நினைவை அகற்றுவது எப்படி என்று அவன் யோசித்த ஒவ்வொரு கட்டத்திலும் அவன் கட்டாயமாக நாராயணனைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருந்ததே!தற்போதைய நடைமுறையில் ஒரு நாத்திகர் கடவுள் எதிர்ப்பு வாதத்தைத் தீவிரமாகப் பரப்ப முயற்சிக்கும் ஆற்றலில், ஒரு ஆத்திகவாதி கடவுள் ஏற்பு வாதத்தைப் பரப்புவதில் கொஞ்சம்கூட செலவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

அதற்காக, இவர் முயற்சிப்பதும் இல்லை எனலாம். தன்னைப் பொறுத்தவரை, தான் இறை உணர்வில் சங்கமித்திருப்பதைப் பேரின்பமாக இவர் கருதுகிறார். ஒருவேளை, இவர் மற்றும் இவரைப்போன்ற ஆத்திகர்களின் இந்த மன அலையே எங்கும் சூழ்ந்து நாத்திக அலை ஓங்கி எழாதபடி செய்துவிடுகிறதோ என்றும் தோன்றுகிறது.

இல்லாவிட்டால் இன்றைய தினத்தில் ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு இறை வழிபாட்டிலும், ஒவ்வொரு பண்டிகையிலும், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது என்பது இயலுமா? இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதும், முக்கியமாக இளவயதினர் பெருந்திரளாகப் பங்குபெறுவதும் சாத்தியமா? எப்படி ஒரு நாத்திகவாதி இறை மறுப்புக் கொள்கைகளைப் பரப்புவதைத் தன் தனித்தன்மையாகக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல ஓர் ஆத்திகவாதி அவ்வாறு இறை ஏற்பு கொள்கையைப் பரப்பாமலிருப்பதும், தன்னுடைய தனித்தன்மையாகக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இப்படி நிலை மாறாத, எந்தக் கவர்ச்சியாலும் மாற்றிக்கொள்ளாத தனித்தன்மைதான் ஆன்மசுகம்.

அடுத்தவரைப் போலவே ஆவது, அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அப்போதைக்கு அவரைப் பின்பற்றுவது, அவ்வாறு பின்பற்றாவிட்டால் அவர் வருத்தப்படுவாரோ என்ற கழிவிரக்கம் கொள்வது இதெல்லாம் தன்னுடைய தனித்தன்மையிலிருந்து ஒருவர் விலகுவதன் குறியீடுகளாகும். அதாவது, தான் தானாக இருக்க முடியாத பலவீனம். இதனால் தோல்வியும், நஷ்டமும்தான் மிஞ்சும்.

இதையேதான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், ‘தனித்தன்மையை இழக்கவேண்டாம்’ என்று சொல்லி அறிவுறுத்துகிறார். உன்னுடைய தனித்தன்மையை எக்காலத்திலும் கைவிட்டுவிடாதே, யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாதே, பிறருடைய தனித்தன்மையில் மயக்கம் கொண்டு அவரைப்போலவே மாறத் துணியாதே, அதனால், இரண்டும் கெட்டானாகப் போகாதே என்றெல்லாம் கிருஷ்ணன் தனக்கு அறிவுறுத்துவதை அர்ஜுனன் புரிந்துகொண்டான்.

அவ்வாறு தனித்தன்மையை மாற்றிக் கொள்வது ஒரு பாபமான செயலோ என்றும் அவன் சிந்தித்தான். அப்படியானால், அதுபோன்ற பாப செயல்களை ஏன் ஒரு மனிதன் மேற்கொள்
கிறான்? அப்படிச் செய்ய அவனை நிர்ப்பந்தப்படுத்துவது எது? அர்ஜுனன் இந்தக் கேள்வியை கிருஷ்ணனிடம் கேட்கிறான்.

அத கேன ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ
அனிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித (3:36)

நியாயமான மனிதக் குழப்பத்தைக் கேட்கிறான் அர்ஜுனன்.

‘நான் பாபம் செய்ய விரும்பவில்லை; ஆனாலும் பாபம் செய்கிறேன் என்றால் அவ்வாறு செய்ய என்னை யார் தூண்டுகிறார்கள் அல்லது எது தூண்டுகிறது? எல்லாமே பரமாத்மாவினால் நிர்ணயிக்கப்படுகிறது, எல்லாமே அந்தப் பரமாத்மாவின் ஆணைப்படிதான் நடக்கிறது என்ற உண்மையை நான் உணர்ந்தே இருக்கிறேன். அதனாலேயே நான் பாபம் செய்ய விரும்பவில்லை.

இருந்தாலும், நான் ஏன் பாபம் செய்கிறேன்? இது தவறு என்று நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் அதை நான் ஏன் செய்கிறேன்? ஒருவேளை இதேபோன்ற செயலைச் செய்த ஒருவர் எந்த பாதிப்பும் இல்லாமல் நற்பலனை அனுபவிக்கிறாரே, அதைப் பார்த்தேனே, அதனாலா? அவருடைய அந்த அனுபவம்தான் என்னை இப்பாபம்செய்யத் தூண்டுகிறதா?

அவர் நற்பலனை அனுபவிப்பதாகத் தோன்றுவது உண்மைதானா அல்லது மாயையா? அல்லது தன்னை அவர் அப்படி காட்டிக்கொள்கிறாரா? ‘இப்படி ஒரு செயலைச் செய்தும் நான் சந்தோஷமாக இருக்கிறேன், பார்’ என்று அவர் பொய்ச்சாயம் பூசி நடிக்கிறாரா? இந்த நடிப்பில் நான் ஏமாந்துவிட்டேனா? அல்லது உண்மைதானா? பாபகாரியமாகப் பிறருக்குத் தோன்றுவது அவருக்கு மட்டும் நன்மை தரும் காரியமாக மாறிவிட்டதா? அது எப்படி? பாபம் என்று பட்டியலிடப்பட்ட செயல்கள் எல்லாம் எப்படி அவற்றைச் செய்யும் ஒருவருக்கு நன்மை தர முடியும்? அப்படி ஒரு செயலைப்புரிந்ததால் தனக்கு எந்த தண்டனையும் கிட்டாது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறாரா, அதுவே உண்மையும் ஆகிறதா?

கூடாது, கூடாது என்று தலையையும்,மனதையும் சிலுப்பிவிட்டுக்கொண்டு அந்தப் பாப காரியத்திலிருந்து விடுபட்டு வெகு தொலைவு போன பின்பும் அச்செயலைச் செய்யும் எண்ணம் மட்டும் தொடர்கிறதே, இது எதனால்? எத்தகைய உந்துதல் இப்படிப்பட்ட எண்ணத்தை சாகடிக்காமல் காக்கிறது? எங்கிருந்து புறப்பட்டு இந்தத் தீமை எண்ணம் எனக்குள் புகுகிறது? அந்த சக்திக்கு உருவம் இருக்குமானால் அதை வெட்டி வீழ்த்தி அதோடு அந்த எண்ணத்துக்கும் சமாதி கட்டிவிடலாமே!

ஆனால், இது கண்ணுக்குத் தெரியாதஊடுருவல்! உணரவே முடியாத ஆக்கிரமிப்பு! நான் எதனால் இயக்கப்படுகிறேன்? நானே விரும்ப முடியாத ஒரு செயலை நானே எப்படிச் செய்கிறேன்? போரிட வந்திருக்கிறேன். போரில் வெற்றி காணவேண்டும் என்ற கனல் செந்தழலாக என்னுள் எரிந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், இப்போது மயங்குகிறேன். ‘இவர்களைக் கொல்வதா?’ என்று அயர்ச்சி யுறுகிறேன். இந்த சிந்தனை நிச்சயம் நான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல; ஏனென்றால் ஒரு சத்திரியனாக, சுத்த வீரனாக போரில் வெற்றி – தோல்வி என்ற ஏதேனும் ஒரு முடிவை நோக்கி மட்டும்தான் நான் இந்த யுத்தப் பொறுப்பை ஏற்றேன், எனக்கு நன்றாகத் தெரிகிறது, ஞாபகமும் இருக்கிறது.

ஆனால், இந்த சிந்தனை மாறாட்டம் ஏன் ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது? இத்தனைக் குழப்பங்களை உள்ளடக்கித்தான் அர்ஜுனன், ஒரே வரியாக, ‘பரந்தாமா, ஒருவன் விருப்பப்படா விட்டாலும், பலவந்தமாக ஏவப்பட்டவனாக எதனால் நெருக்கடி கொடுக்கப்படுகிறான், பாபம் செய்கிறான்?’ என்று கேட்கிறான் போலிருக்கிறது! பகவான் கிருஷ்ணன், இயற்கையாய் தோன்றிய குணங்களே அதற்குக் காரணம், அவையே அப்படி நிர்ப்பந்திக்கின்றன என்று அவனுக்கு விளக்குகிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ
மஹாசனோ மஹாபாப்மா வித்யேனமிஹ வைரிணம் (3:37)
‘‘ரஜோகுணத்திலிருந்து உண்டாகும்
காமமும், குரோதமும்தான் எல்லா
நாசங்களுக்கும் மூலகாரணம்.

அவை தீய பேராற்றல் கொண்டவை. இவையே உன் பிரதான எதிரிகள் என்று உணர்வாயாக.’’ எல்லா தீய சிந்தனைகளுக்கும், தீய சொற்களுக்கும், தீய நடவடிக்கைகளுக்கும் அடிப்படை காரணம், ஆசை! பக்கத்து வீட்டுக்காரனைவிட தான் வசதியாகவும், செல்வம் பெருக்கியும் வாழவேண்டும் என்று நினைப்பது ஆசை. அது நிறைவேறாத பட்சத்தில் அடுத்த வீட்டுக்காரன் அவனுடைய சொத்துகளை அநீதியாக சம்பாதித்திருப்பான் என்று பொருமுவது குரோதம். நிறைவேறாத தன் ஆசை கோபமாக உருவாகிறது. தகுதி உணராததால் ஏற்பட்ட குரோதம், பகையாக உருவாகிறது. இப்படி ஆசையும், குரோதமும் அதிகரிப்பதால் அவை, அவற்றின் மூலமான ரஜோ குணத்தை வளர்க்கின்றன.

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் மேலும்மேலும் எண்ணெய் வார்த்தாலோ, சுள்ளிகளை அள்ளிப் போட்டாலோ அந்தத் தீ அணையவா செய்யும்? இன்னும் உக்கிரமாக எரியத்தானே செய்யும்! அதுபோலத்தான் ரஜோகுணத்தின் வீரியத்தையும், வேகத்தையும் ஆசை, குரோதம் ஆகியன வளர்க்கின்றன. இதனால் ஒருவனுடைய பாபமும் பெருகுகிறது. அதாவது, பாபம் செய்வதன் அடிப்படை, எதன்மீதும் ஆசைகொள்வதுதான். ஆசை கொள்வதில் இரண்டு வகைதான் இருக்க முடியும். ஒன்று தனக்கு, தனக்கு மட்டுமே ஆதாயம் தரக்கூடியது; இன்னொன்று தனக்கும், பிறருக்கும் நன்மை பயக்கக்கூடியது.

ஆனால், தனக்காகவும், பிறருக்காகவும் என்று வைத்துள்ள நான்கு பணியாரங்களில் ஒன்றைத் தனக்கு எடுத்துக்கொண்டு மிகுந்தவற்றைப் பிறருக்குத் தரும்போது மனசு வலிக்கிறதா, அப்போது ஆசை தன்னிறைவடையவில்லை என்றுதான் அர்த்தம். தனக்கு இது போதும் என்ற நிறைவு, அடுத்தவருக்குக் கொடுக்கப்பட்ட பணியாரங்களைப் பற்றி அப்போதே மறந்துவிடுவதில்தான் இருக்கிறது. ‘நமக்கென இன்னும் இரண்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாமோ, நமக்குக் கிடைத்தபங்கைவிட, பிறருக்குக் கொடுக்கப்பட்டதில் சுவை கூடுதலாக இருக்குமோ, அளவும் அதிகமாக இருக்குமோ’ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தோமானால், சுய நிறைவை எட்டவே முடியாது. கொடுத்தது கொடுத்ததுதான்.

அதில் மறுபரிசீலனை இல்லை, மறு சிந்தனை இல்லை. ‘நன்றே செய்க, அதையும் இன்றே செய்க’ என்கிறது மூதுரை. நற்செயலைத் தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும்போதுதான் மனம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.

கஞ்சத்தனம் மிகுந்த ஒரு பணக்காரருக்கு திடீரென தாராள குணம் வந்தது. குறிப்பிட்ட ஓர் அமைப்புக்கு ஒரு லட்ச ரூபாய்வரை நன்கொடை கொடுப்பது என்று நினைத்துக் கொண்டார். அந்த அமைப்பினரை நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார். அவ்வாறு தானமளிப்பதைப் பெருமையாக நினைத்துக் கொண்டார். அடுத்த நாள் தூங்கி எழுந்தபின், ஒரு லட்ச ரூபாய் அதிகமோ என்று அவருக்குத் தோன்றியது. ஐம்பதாயிரம் போதும் என்று தீர்மானித்தார்.

‘தனக்கு மிஞ்சித்தானே தருமம்?’ என்றுதனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டார். இரண்டாம் நாள் மனம் இன்னும் சுருங்கியது. இருபத்தைந்தாயிரம் போதாதா, இதுவே பெரிய தொகை என்றது. அவரும் உடன்பட்டார்.மூன்றாம் நாள் இன்னும் விசேஷம்! ‘அட முட்டாளே, பத்தாயிரம் கொடு போதும்,’ என்று உத்தரவிட்டது மனது. ‘அதுதானே! என்னைப் போல வேறு பலரும் கொடுப்பார்களே, அதையெல்லாம் சேர்த்தால் ஒரு லட்ச ரூபாய் ஆகி விடாதா? நான் மட்டும் எதற்கு அதிகம் கொடுக்க வேண்டும்? பத்தாயிரம் கொடுப்போம், அதுதான் சரி,’ என்று நினைத்துக்கொண்டார்.

படிப்படியாக இப்படிக் குறைத்துக் கொண்டு வந்ததில் தன் சாமர்த்தியத்தைப்பற்றி அவரே பெருமைப்பட்டுக் கொண்டார்! நான்காம் நாள். அமைப்பினர் வந்தார்கள்.
தானம் கொடுக்கப் போகும் அகம்பாவத்தில், அந்த அமைப்பின் நடவடிக்கைகள், அதனுடன் தொடர்புகொண்டிருக்கக்கூடிய பிரமுகர்கள் என்று பலவாறாகக் கேள்விகள் கேட்டார் பணக்காரர். அவர்களும் எதையோ பெரிதாக எதிர்பார்த்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

‘ஓஹோ, முதியோர் இல்லமா?’ என்று மிகுந்த யோசனையுடன் கேட்டார் பணக்காரர். ‘‘உங்களுக்குக் கொடுப்பதற்கென்ன? என் வீட்டில் என் தாத்தா, பாட்டி என்று இரு முதியோர்கள் இருக்கிறார்கள், அவர்களை அனுப்பி வைக்கிறேன், சரியா?’ என்று சொல்லி கடைசியாக கொடுக்க நினைத்த பத்தாயிரத்தையும், தன்னுடனேயே இருத்திக்கொண்டார்! மெல்ல முளைக்கத் துவங்கும் நற்குணம், நாட்கள் தள்ளிப்போகப் போக, துர்க்குணமாக மாறிவிடுகிறது. ஆகவேதான் ‘நன்றே செய்க, அதனையும் இன்றே செய்க,’ என்று சொல்லி வைத்தார்கள். அதுகூட அதிகம்தான், ‘இப்போதே செய்க’ என்று மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi