Monday, May 27, 2024
Home » தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!

தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 52

(பகவத்கீதை உரை)

எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவருக்கு, கூடவே சில சமயம் கொஞ்சம் ஆராய்ச்சிப் புத்தியும் வந்துவிடும். அர்ஜுனன் அத்தகையவர்களில் ஒருவன். ‘உபதேசம் எல்லாம் சரி, ஆனால், அதை அனைவருக்கும் முன்னால், தான் உபதேசித்ததாக கிருஷ்ணன் சொல்கிறாரே, அது எப்படி சாத்தியம்?’ என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கு வந்தது. ஒரு விஷயத்தை தகுதி படைத்த ஒருவரே சொல்கிறார் என்றாலும், அவ்வாறு அவர் சொல்வதைக் கேட்கும் நபருக்கு ஆர்வம் குறையுமானால், அவருடைய கண்கள் மட்டுமே சொல்பவரைப் பார்த்திருக்குமே தவிர, அவர் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருக் கும். அல்லது சொல்பவர் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருக்க, கேட்பவர் அங்கும் இங்குமாகப் பார்வையை அலைபாய விட்டுக் கொண்டிருப்பார்.

அல்லது ‘இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும், உனக்கு யார் சொன்னார்கள், இந்த விஷயம் எவ்வளவு தூரம் நம்பகத் தன்மை வாய்ந்தது…?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்பார். அதேபோல, மனத்தளவில் போருக்கான முழு ஆயத்தம் கொள்ள இயலாதவனாக இருந்த அர்ஜுனன், கிருஷ்ணனின் உபதேசங்களைக் கேட்கும் ஆர்வம் கொண்டவனாகவே இருந்தாலும், தான் ஆரம்பத்தில் கொண்டிருந்த ‘போரிட விரும்பாத’ மனோநிலையிலிருந்து மீள முயற்சிக்கவே இல்லை என்றுதான் தோன்று கிறது. அதனால்தான் சந்தேகக் கேள்விகளைக் கேட்டு அந்தப் போரிலிருந்தும், மனக்குழப்பத்திலிருந்தும் விடுபட முடியுமா என்று பார்க்கிறான். தப்பித்துக்கொள்ளும் முயற்சி!

அபரம் பவதோ ஜன்ம பரம் ஜன்ம விவஸ்வத
கதமேதத்விஜானீயாம் த்வமாதௌ ப்ரோக்தவானிதி (4:4)

‘‘கிருஷ்ணா, உங்கள் பிறப்பு சமீபத்தில் ஏற்பட்டது. ஆனால், சூரியனோ எத்தனையோ யுகங்களுக்கு முந்தியவர். அவருக்கு நீங்கள் உபதேசம் செய்ததாகச் சொல்வது எப்படி சாத்தியமாகும்?’’ ஓர் அற்பனின் அறியாமைக் கேள்வி இது. பரந்தாமனை, அவரது பராக்கிரமத்தை, புரிந்துகொள்ளாத ஒரு பாமரனின் அப்பாவித்தனமான கேள்வி. இத்தனை வருடங்கள் கூடவே வாழ்ந்தும் கிருஷ்ணனின் பிரமாண்டத்தை அறிந்துக்கொள்ள இயலாத ஒரு முட்டாளின் கேள்வி.

அல்லது அப்போதைக்கு கிருஷ்ணனைத் தவிர்க்க முடியுமா, அவருடைய உபதேசத்தைத் தொடர்ந்து கேட்காமலிருக்க முடியுமா, அதனால் இந்தப் போரிலிருந்தே விலகிவிட முடியுமா என்ற ஆதங்கத்தில் எழுந்த தப்பித்தல் கேள்வி.ஆனால், அர்ஜுனனுக்கு நம்பிக்கை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ணன், அவ்வாறு கூறியிருக்க வேண்டும். ‘அட, இவர் சூரியனுக்கே உபதேசித்திருக்கிறார் என்றால், அந்த சத்தியம்தான் எத்தனை அறிவார்த்தமானதாக இருக்கவேண்டும், எத்தனை தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும், என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற பிரமிப்பு அவனுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிப் பேசியிருக்கலாம்.

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் மீது இருந்த பிரமிப்பு அவர் வெளிப்படுத்தும் கருத்துகளில் இல்லை என்றே தோன்றுகிறது. தன்னுடனான பாண்டவர்களுக்காக அவர் நிகழ்த்தியிருக்கும் அற்புதங்கள், பராக்கிரமங்கள் எல்லாம் செயல்பூர்வமாகவே இருந்ததாலோ என்னவோ அவன் அந்த பிரமிப்பினால் கிருஷ்ணனை மதிப்பிட்டிருந்தான் போலிருக்கிறது. ஆனால், உபதேசம் என்று வரும்போது அதுவும் தன் மனமாற்றத்துக்கான ஓர் உத்தி அது என்று வரும்போது, அவ்வாறு சொல்லும் கிருஷ்ணனை அவனால் பிரமிக்க முடியவில்லை. அதுவரை தான் கண்டு வந்த கிருஷ்ணனின் வீர தீர பிரதாபங்களில் தெய்வீக ஆற்றல் இழைந்திருந்ததை அவனால் தனித்து அடையாளம் காண இயலவில்லை.

அதனால்தான் அவனுக்கு இப்போது ‘சந்தேகம்’ ஏற்பட்டது. இதுவரைக்கும் கிருஷ்ணன் பேச, கேட்டுக்கொண்டிருந்த அவன், இப்போது குதர்க்கமான ஒரு சந்தேகத்தை முன்வைக்கிறான்.
சந்தேகம் என்று ஏற்பட்டுவிட்டால் அது தீரும் வரையிலும் அல்லது மனம் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கம் கிடைக்கும் வரையிலும் அந்த சந்தேகம் பல கிளைகளாக விரிந்து பரவும். பயம் அல்லது அபிரிமிதமான மரியாதையால் நம் மதிப்புக்குரியவர் சொல்லும் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் ஒருவகைப் பக்குவம். அவ்வாறு சொல்பவரை அவமதிக்க வேண்டும் என்ற குரூர நோக்கத்தில், புரியக்கூடியதாகவே இருந்தாலும், புரியாததுபோல நடிப்பது எதிர்மறைப் பக்குவம்! ஆனால், அர்ஜுனனின் சந்தேகம், தப்பித்துக் கொள்ளும் தவிப்பில் எழுந்தது. அதனால் அவனுடைய சந்தேகத்தை முதலில் நீக்கவேண்டிய அவசியத்தை கிருஷ்ணன் உணர்ந்தார்.

ஏனென்றால், அவர் விளக்கிச் சொல்ல முனைந்திருக்கும் விஷயம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. அது வெறும் உடல் சார்ந்த விஷயமல்ல, உணர்வு சார்ந்த விஷயமல்ல, மனம் சார்ந்த விஷயமல்ல, உயிர் சார்ந்த விஷயமுமல்ல. அது ஆன்மாவைப் பற்றியது. என்றும் நிரந்தரமான ஆன்மாவைப் பற்றிய விஷயம். இதை அர்ஜுனன் உணரவேண்டும். அப்படி உணர்த்த, தன்னை அவனுக்கு கிருஷ்ணன் உணர்த்த வேண்டும்.

சிறு வயதுமுதலே பாண்டவர்களுடன் தோழமையை வளர்த்துக் கொண்ட சாதாரண நண்பன் மட்டுமல்ல, துரியோதனன் அவையில் துகிலுரியப்பட்ட திரௌபதிக்கு, துச்சாதனன் களைத்துப் போகுமளவுக்கு சேலைத் தொடரை சலிக்காமல் அனுப்பிவைத்து மானம் காத்த காவலன் மட்டுமல்ல, அவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்ற பிரதிநிதி மட்டுமல்ல, இந்த யுத்தத்துக்கு நாள் குறிப்பதற்காக சூரியனையும், சந்திரனையும் ஒரேநேரத்தில் வரவழைத்த மாயாவி மட்டுமல்ல… தான் அர்ஜுனனுடைய கற்பனையையும் விஞ்சியவன், அவனுடைய எதிர்பார்த்தலுக்கு அடங்காதவன், தானே மூலமாக இருப்பதால் அவனுக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்குமே உபதேசம் அளிக்கத் தகுதியானவன் என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.

பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவ
சார்ஜுன
தான்யஹம் வேத ஸர்வாணீ ந த்வம் வேத்த
பரந்தப (4:5)

‘‘உனக்கு மட்டுமல்ல, எனக்கும் நிறைய ஜன்மங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், உன் முந்தைய ஜன்மங்களை நீ அறியமாட்டாய். அவை உன் நினைவில் இருக்காது. ஆனால், என் முந்தைய ஜன்மங்களை நான் அறிவேன்.’’

மனித சுபாவங்களில் ஒன்று மறதி. இது வயதாவதன் அறிகுறி மட்டுமல்ல; இளவயதின் பலவீனமும்கூட. இயல்பான வாழ்க்கையில் எண்ணற்ற சம்பவங்கள். ஆனால், அவை ஒவ்வொன்றும் நினைவில் தங்குவதில்லை. அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்து நற்சம்பவங்களோ அல்லது துன்பியல் சம்பவங்களோ தங்குகின்றன. வாழ்நாளில் கடந்தகால நிகழ்ச்சிகள் மறக்கப்படுவது என்பது மனிதப் பிறவியின் இயல்பு. இந்த மறதியின் அடிப்படையில் ஒரு விஷயம் நடக்கவேயில்லை என்று தீர்மானித்து விடக் கூடாது. ‘எனக்கு நினைவில்லையே!’ என்று சொல்லி, அந்த சம்பவத்தை நினைவுகூர முயற்சிக்கலாம்; அந்த முயற்சி தோற்றால், ‘நடந்திருக்கலாம்’ என்ற அளவிலாவது ஒப்புக்கொண்டு விடுவதும் மனித இயல்புதான். ஆனால், தான் மறந்துவிட்டதை ஒரு குற்ற உணர்வாகக் கருதி, அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சாதிப்பதும் மனித இயல்பாகியிருக்கிறது!

கடந்த வருடம், கடந்த மாதம், கடந்த வாரம், ஏன், நேற்று நடந்த விஷயங்களில்கூட எத்தனை நமக்கு ஞாபகம் இருக்கின்றன? இது இப்படி இருக்க, முந்தைய ஜன்மம் எப்படி நினைவிலிருக்க முடியும்? ஆனால், நாம் அந்த ஜன்மத்தையும் நினைவு கொள்ள முடியுமா என்று பார்க்க நமக்கு சில சோதனைகளை வைக்கிறான் இறைவன். ‘எந்த ஜன்மத்துப் பாபமோ, இப்போது இப்படி வேதனைப்படுகிறேன்,’ என்று நாம் அனுபவிக்கும் துயர சோதனைகளை ஏற்றுக்கொள்கிறோம். நம் முன்னோர்களும் நமக்கு அறிவுறுத்துகிறார்கள், ‘இப்ப எந்தப்பாவமும் பண்ணாதே, அடுத்த ஜன்மத்திலே அனுபவிக்காதே,’ என்று.

ஆக, நம்முடைய முந்தைய ஜன்மத்தின் தொடர்ச்சி இந்த ஜன்மத்திலும் நீள்கிறது. நமக்கு நினைவில்லாவிட்டாலும், நம்மால் அந்த ‘ஜன்ம பந்தத்தை’ புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இந்த ஜன்மத்து அனுபவங்களால் முந்தைய ஜன்மத்தைப் பற்றி உணரவாவது முடியுமா என்பதும் சந்தேகமே! ஆனால், பொதுவாக ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதன் அர்த்தத்தை, நாம் நல்லது செய்தால்தான் நமக்கு நன்மைகள் விளையும் என்ற உண்மையில் உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்தடுத்து நமக்குப் பிறவிகள் உண்டு, ஒரு பிறவியில் செய்திருக்கக்கூடிய பாவங்களை, அடுத்தடுத்த ஜன்மங்களில் தொடராமல் இருக்கவேண்டும் என்ற அறிவுரையின் குறியீடாகத்தான், நம் முன்னோர்கள் நம்முடைய பூர்வ ஜன்மத்தை இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.ஒருவேளை நமக்கு இப்படி பூர்வ ஜன்ம நினைவு இல்லாததால்தான் இந்த ஜன்மத்திலும் பாவச் செயல்களைப் புரிகிறோமோ? அல்லது அடுத்த ஜன்மத்தில், இந்த ஜன்மத்தின் நினைவு இருக்காது என்ற அலட்சியமும் ஒரு காரணமோ?

ஆனால், அதற்காக, பகவானை நம் போன்ற பாமரர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாமோ? அவரது பல அவதாரங்களும், அந்த அவதாரங்களின்போது நிகழ்ந்த சம்பவங்களும் அவராலேயே அடுத்தடுத்த ஒவ்வொரு அவதாரத்தின்போதும் நினைவுகூரப்பெற்று நமக்கும் கூறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கூறப்பட்டதைக் கேட்டவர்களில் ஒருசிலராவது அந்த பகவானின் அருளால் தங்களுடைய அடுத்த ஜன்மத்தில் அந்த அற்புதங்களை நினைவு கூர்ந்து ஏதோ ஒருவகையில் ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் அந்த அவதார மகிமைகளை நாம் படிக்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், பெரு வியப்புடன் மகிழ்கிறோம்.

எத்தனை ஜன்மங்கள் என்பதை எப்படிக் கணக்கெடுப்பது? அது முடிவில்லாதது. ‘ஏழு ஜன்மங்கள்’, ‘ஈரேழு ஜன்மங்கள்’ ‘ஏழேழு ஜன்மங்கள்’ என்றெல்லாம் பேச்சு வழக்குக் கணக்காக, சில உணர்வுபூர்வமான பந்தங்களின் தொடர்பை வலியுறுத்தும் விதமாக, சொல்லப்படுகிறதென்றாலும், ஜன்மங்கள் இத்தனை என்று வரையறுக்க அந்த பகவானைத் தவிர வேறு யாரால் இயலும்?

அருணகிரிநாதரும், ‘இளையவ மூதுரை மலைகிழவோனென வெள்ளமெனக் கலந்து நூறாயிர பேதஞ்சாத மொழிந்தவா’ என்று தன் பிறவிகளை வெள்ளமெனக் கணக்கெடுக்கிறார். அதாவது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு ஜன்மம். அந்தத் துளிகள் சேர்ந்தது ஒரு வெள்ளம்! இப்படி எத்தனை பிறவி நான் எடுத்தாலும் ‘என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டவனே’ என்று முருகப் பெருமானின் அருளை எண்ணி நெகிழ்கிறார் அருணகிரிநாதர். ‘பிறவிக்காக பிரம்மனும், மரணத்துக்காக யமனும் என்னை அணுகினாலும், அந்த ஒவ்வொரு ஜன்மத்திலும் நான் சந்திக்கக்கூடிய நூறாயிரம் பேதங்களை ஒழித்து, என்னைக் காத்தருளும் கடவுளே’ என்று பாடி உருகுகிறார் அவர்.

சத்தியம் என்பது ஓர் அனுபவம். அது ஒவ்வொரு ஜன்மத்துக்கும் கிடைக்கக் கூடியது, ஒவ்வொரு நபராலும் உணரப்படக் கூடியது. இதற்கு முன் சத்தியம் இருந்ததா, இல்லையா என்கின்ற வாதம், இருந்தது என்பவராலும், இல்லை என்பவராலும் உரத்து சொல்லப்படுமே தவிர, உண்மை என்ன என்று நிலைநாட்ட முடியாத நீள்வாதமாகவே அமைகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், சத்தியம் இருந்ததா இல்லையா என்பதைவிட வாதிடும் இருவரில் யார் சரி என்ற பலப்பரீட்சைதான் அங்கே நிகழ்கிறது.

அதாவது, எது சரி என்பதல்ல, யார் சரி என்பது! சத்தியம் இருக்கிறது என்பதற்கும், இல்லை என்பதற்கும் அனுபவம் அவசியம். இருந்ததை நிரூபிக்கவோ இல்லாததை நிரூபிக்கவோ சாட்சிகள், காரண காரியங்கள் வேண்டும். ஆனால், பகவானைத் தவிர வேறு யாராலும் ஆழ்ந்த நினைவாற்றல் கொள்ள முடியாதபோது அந்த பகவானையே எதிர்த்து, ‘எத்தனை ஜன்மங்கள் சத்தியம் நிலைத்திருந்தது? உன்னால் எப்படி பிரபஞ்சத்தின் முதல் காட்சிப் பொருளான சூரியனுக்கே சத்தியத்தை உபதேசிக்க முடிந்தது?’ என்று அர்ஜுனன் வினவுகிறான் என்றால், அவன் இன்னும் பக்குவமடைய வேண்டியவன் என்பதுதான் உண்மை. ‘நீ சொல்வது புரியவில்லை, யுகம் யுகமாக சத்தியம் நிலைத்திருப்பதையும், அதற்கு நீயே ஒவ்வொரு ஜன்மத்திலும் சாட்சியாக அமைந்திருப்பதையும் என்னால் ஏற்பதற்கில்லை’ என்ற அர்ஜுனனின் வாதம், அந்த போர் இக்கட்டிலிருந்து அவன் நழுவ முயற்சிக்கும் உத்தி. ஆனால், கிருஷ்ணன் விடுவதாக இல்லை.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

eighteen + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi