காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1.90 கோடி மானியத்தில் 221 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசை களையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 225 விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கிராம விவசாயிகளுக்கு, ரூ.1.73 கோடி மானியத்தில் 198 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசை களையெடுப்பான் கருவிகள் மற்றும் ஒரு பயனாளிக்கு (ஆதிதிராவிடர்) கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.1.14 கோடி மதிப்புள்ள கரும்பு அறுவடை இயந்திரம் ரூ.45 லட்சம் மானியத்தில் வழங்கினார்.
பின்னர், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.