Saturday, July 27, 2024
Home » நாட்டுக்கோழி வளர்ப்பில் ‘நச்’ வருமானம்

நாட்டுக்கோழி வளர்ப்பில் ‘நச்’ வருமானம்

by Porselvi

நெல் விதைத்து மகசூல் பெருக்கி அறுவடை செய்து விவசாயத்தில் பயனடைவது போலவே விவசாயத் துணைத் தொழிலும் முக்கியமானது. விதைப்பதற்கோ விவசாயத்திற்கோ நிலம் இல்லாதபோது, கால்நடைகள் வளர்த்து அதன்மூலம் விவசாயம் செய்யும் பலரும் இருக்கிறார்கள். அந்த வகையில் நாட்டுக்கோழி வளர்த்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கி வருகிறார் தர்மபுரியை சேர்ந்த பரசுராமன்.தர்மபுரியில் இருந்து அரூர் செல்லும் சாலையில், சோலைக்கொட்டாய் அருகே நடுஅள்ளி என்கிற பகுதி இருக்கிறது. அந்தப்பகுதிக்கு அருகே இருக்கிற மூக்கனூர் மலையடிவாரத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் நாட்டுக்கோழி வளர்த்துவரும் பரசுராமனை ஒரு மாலைப் பொழுதில் சந்திக்கச் சென்றிருந்தோம். கோழிகளுக்கு இறை கொடுத்துக் கொண்டிருந்த அவர் புன்னகையோடு வரவேற்று பேசத்தொடங்கினார். கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டுக்கோழி வளர்ப்பதும் அதனை விற்பதும்தான் எனது தொழில். அதற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட கரவை மாடுகள் வளர்த்து அதன்மூலம் பால் விற்பனை செய்து வந்தேன். மாடுகள் அதிகமாக உடல் உழைப்பும் கொண்டது. அதே நேரத்தில் மாடுகள் வளர்ப்பதற்கு செலவும் அதிகமாக தேவைப்பட்டது. இந்த தொழிலை விட்டு வேறு ஏதாவது தொழில் செய்யலாமென நினைக்கும்போதுதான் 2012ம் ஆண்டு, 250 நாட்டுக்கோழிகள் வைத்து பண்ணைகள் தொடங்கும் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதாக அரசு அறிவித்தது. வேறு தொழில் செய்யலாமென இருந்த நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதனால், மாடுகளை விற்றுவிட்டு நாட்டுக்கோழி வாங்கத்தொடங்கினேன்.

நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு முதற்கட்டமாக பல்லடத்தில் இருந்து ஐநூறு கோழிக்குஞ்சுகள் வாங்கினேன். அதாவது, பிறந்து ஒருநாள் இருக்கக்கூடிய கோழிக்குஞ்சுகளை வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். கோழிக்குஞ்சுகள் வாங்கி வந்தவுடன் முதல் ஏழுநாட்கள் இன்குபேட்டரில் வைக்க வேண்டும். அப்படி வைப்பதன் மூலம் கோழிகளுக்குத் தேவையான சூடு நன்றாக பரவி அது வளர்வதற்குத் தேவையான சூழல் உருவாகும். இந்த ஏழு நாட்கள் முடிந்தவுடன் கோழிக்குஞ்சுகளுக்கு அடுத்தடுத்தப் பருவத்தில் மூன்று முறை சொட்டு மருந்து அதன் கண்களில் விட வேண்டும். அதாவது, முதல் ஏழு நாட்கள் முடிந்தபிறகு கொடுக்கக்கூடிய மருந்தை F1 என்று சொல்லுவோம். அது கொடுப்பதன் மூலம் கோழிகளின் உடல் உள் உறுப்புகளுக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது. அடுத்து 20வது நாளில் இரண்டாவது முறை சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து கொடுப்பதன் மூலம் கோழிக்குஞ்சுகளின் வெளிப்புற நோய்கள் குணமடையும். அடுத்தபடியாக 27வது நாட்களில் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அந்தப் பருவத்தில் இந்த மருந்து கொடுப்பதால் கோழிகள் வளரும்போது ஏற்படுகிற கோழி கழிசல், பறவை கழிசல் இன்னும் பிற நோய்களில் இருந்து பராமரித்துக் கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல், கோழிகள் வாங்கி வந்த உடனேயே கோழிகளுக்கு மஞ்சள் கலந்த நீரை கொடுக்க வேண்டும். இந்த மஞ்சள் கலந்த நீரை கோழிகளுக்கு எல்லாப் பருவத்திலும் அதாவது வாரத்திற்கு மூன்று முறைகூட கொடுக்கலாம். அப்படிக் கொடுப்பதால் கோழிகளை அதற்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.

கோழிக்குஞ்சுகள் வளர்ந்து அது விற்பதற்கு நான்கு மாதங்கள் வரை ஆகும். அதாவது, நான்கு மாதத்தில் ஒரு கோழி ஒன்றரைக் கிலோவில் இருந்து இரண்டு கிலோவரை வளரும். அந்தப் பருவம்தான் கோழிகளை விற்பதற்கு உகந்தது. ஆரம்பத்தில் ஐநூறு கோழிகளோடு இந்த தொழிலைத் துவங்கினேன். இப்போது, பத்தாயிரம் கோழிகள் வரை வளர்த்து வருகிறேன். கோழிக் குஞ்சுகளுக்கு முதல் ஏழு நாட்கள் இரையாக ரவை கொடுப்பேன். அடுத்த இருபது நாட்களில்மில்லட் பல கலந்து அரைத்து இரையாக கொடுப்பேன். இப்படி ஒவ்வொரு பருவத்திற்கும் தகுந்தபடி இரையின் அளவைக் கூட்டிக்கொண்டே செல்லவேண்டும். அதேபோல, கோழி வளருகிற நான்கு மாதத்திற்கும் இரையையே கொடுத்துக் கொண்டிருந்தால் உணவு வாங்குவதற்கான செலவுகள் அதிகமாகும். அதனால், கோழிகள் வளரும் இருபத்தி ஏழாவது நாட்களில் இருந்தே இலைகளை இரையாக கொடுக்கலாம். குறிப்பாக, கீரை வகைகளை நன்றாக நறுக்கி சிறுதுண்டுகளாக்கி கோழிகளுக்கு கொடுப்பதன் மூலம் செலவில் இருந்து தப்பிப்பதில் இருந்து கோழிகளுக்கு ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கும். அதனால், எனது பண்ணையில் முருங்கை, அகத்தி என இன்னும் சில கீரைகள் கோழிகளுக்காகவே வளர்த்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல், கோடைகாலத்தின் போது கோழிகளுக்கு வேப்ப இலைகளை தின்னக் கொடுக்கலாம். வேப்ப இலை கொடுப்பதன் மூலம் வெயில் காலங்களில் கோழிகளுக்கு சூட்டினால்
வருகிற நோய்கள் குணமடையும். இதனால் 30 சதவீதம் தீவன செலவு குறைகிறது.

இவ்வாறு வளருகிற கோழிகள் நான்கு மாதத்தில் முட்டை இடத்தொடங்கிவிடும். அந்தப் பருவத்தில் கோழிகளை விற்கலாம். எனது பண்ணையில் வளருகிற கோழிகளை இடைத்தரகர்கள் மூலம் விற்கும்போது அதிக லாபம் கிடைக்கவில்லை. இதனால் நானே சொந்தமாக நாட்டுக்கோழி விற்பனையைஆரம்பித்தேன்.எனது பண்ணையில் கோழி வாங்குபவர்களுக்கு, இலவசமாக இறைச்சியை சுத்தம் செய்து விற்பனையை தொடங்கினேன். கோழி இறைச்சியை வெட்டி சுத்தம் செய்த பின்னர், அதற்கு மஞ்சள் தடவி கொடுக்கிறேன். ஒரு வாரத்திற்கு 1.5 டன் கோழி இறைச்சியை விற்பனை செய்கிறேன். உயிருடன் கோழி ₹220க்கு விற்பனை செய்கிறேன். நேரடியாக பொதுமக்களுக்கு இறைச்சி விற்பனை செய்வதால், அதிலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஒரு வாரத்திற்கு 1.5 டன் கோழி விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ ₹220 வீதம் ₹3 லட்சத்து 30 ஆயிரம் வரை கிடைக்கிறது.
செலவாக ஒரு கிலோவிற்கு ₹170 வரை ஆகிறது. ஒரு கிலோவிற்கு ₹50 லாபம் கிடைக்கிறது. கடந்தாண்டு குண்டல்பட்டி ஆராய்ச்சி மையத்தின் மூலம் கோழி இறைச்சியை சுத்தப்படுத்தும் கருவி, கத்தி உள்ளிட்ட தளவாட சாமான்களை 100 சதவீத மானியத்தில் வழங்கினர். குண்டல்பட்டி ஆராய்ச்சி மையம் மூலம், கோழி வளர்ப்புக்கு அடிக்கடி பயிற்சிகள் கொடுக்கின்றனர்.

அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்று, கோழிவளர்ப்பு பற்றி மேலும் கற்றுக்கொள்கிறேன். எனது பண்ணையில் ஒரு கோழி அதிகபட்சமாக 2 கிலோ வரை எடை இருக்கும். ஒரு மாதத்திற்கு குறைந்தது, ஆயிரம் கோழிகள் வரை விற்பனை செய்கிறேன். என்னை பொறுத்தவரை, நாட்டுக்கோழி வளர்ப்பில் அசில் பிரீடு ரக கோழிகளே கோழி வளர்ப்பிற்கு உகந்ததாக உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள், கோழி வளர்ப்பதோடு நின்று விடாமல், விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டி வியாபாரம் செய்வது போல், நாமே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கோழியை விற்பனை செய்தால், அதன் மூலமும் கூடுதல் லாபம் பெறலாம்.
தொடர்புக்கு:
பரசுராமன்: 90255 07007

You may also like

Leave a Comment

ten + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi