திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே மது போதையில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி வந்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் இலங்கை அகதிகளாக வசிக்கும் ராஜா- செங்குழி தம்பதியரின் மகன் விஷால் (18). அம்பத்தூரில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டார். ஆனால் கல்லூரிக்கு செல்லாமல் சக நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துள்ளார். பின்னர் ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு சென்னைக்கு செல்லும் மின்சார ரயிலில் சக நண்பர்களுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி ஏறும்போது திடீரென கால் தடுமாறி ரயிலுக்குள் விழுந்தார் விஷால். இதில் தலை, உடலில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு உடனடியாக ஆட்டோ மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.