Friday, May 31, 2024
Home » தென்னைக்கு இடையே ஊடுபயிர்… ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம்…

தென்னைக்கு இடையே ஊடுபயிர்… ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம்…

by Porselvi

ஒரு பயிரை பிரதானமாக சாகுபடி செய்து, அதில் குறிப்பிடும்படியான வருமானம் பார்ப்பதே பலருக்கு சிரமம் நிறைந்ததாக இருக்கிறது. பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் தென்னையில் ஜாதிக்காய், பாக்கு ஆகிய பயிர்களை ஊடுபயிராக செய்து, அவற்றின் மூலமே அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்கள். தமிழகம்-கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியாக விளங்கும் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வினோத் என்ற சகோதரர்கள் இப்படி ஒரு முன்மாதிரிப் பண்ணையை நிர்வகித்து வருகிறார்கள். 24 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் அவர்களின் தோட்டத்தில் தென்னைக்கு இடையில் ஜாதிக்காய் மரங்களும், பாக்கு மரங்களும் செழித்து வளர்ந்திருக்கின்றன. பசுமையான அந்தப்பகுதியில் இதமான தென்றல் காற்று தவழ்ந்து வரும் ஒரு மாலைப்பொழுதில் சகோதர்கள் இருவரையும் சந்தித்துப் பேசினோம்.

“நான் ஹார்டுவேர் இன்ஜினியராக பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது தம்பி வினோத் விஸ்காம் படித்துவிட்டு சினிமாத்துறையில் பணியாற்றி வந்தார். நம்மாழ்வார் பற்றியும், அவரது இயற்கை விவசாயம் குறித்தும் அவர் அறிந்திருந்தார். அப்போது என்னிடம் இயற்கை விவசாயம் பற்றி அதிகம் கலந்துரையாடத் தொடங்கினார். சிறிது காலம் சென்றபின் பொள்ளாச்சியில் எங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யலாம் என இருவரும் முடிவு செய்தோம். இதனை, மாதிரிப்பண்ணையாக மாற்ற வேண்டும் என்றும் தீர்மானித்தோம். ஏற்கனவே நல்ல மகசூல் கொடுத்து வந்த தென்னையை அழிக்க எங்களுக்கு மனம் வரவில்லை. அதில் ஊடுபயிராக நடவு செய்திருந்த குருவாயூர் யானைகளுக்கு வழங்கப்படும் கோ-4 வகை புற்களை மட்டும் அறுவடை செய்தோம். ஒரு புதிய பயிரை நடவு செய்ய நினைத்தோம். அதன்படி எங்கள் நிலத்தில் ஜாதிக்காய், பாக்கு உள்ளிட்டவற்றை ஊடுபயிராக நடவு செய்யத் தொடங்கினோம்.

தென்னையில் ஊடுபயிராக ஒரு பயிரை நடவு செய்வதற்கு முன்பு நாம் நிலத்தை உழ வேண்டிய அவசியம் இருக்காது. ஏற்கனவே தென்னைக்குத் தேவையான உரங்கள் இடும்போது நிலத்தில் களை எடுப்போம். மண்ணைக் கொத்திவிடுவோம். மேலும் நிலத்தில் தேவையான ஈரப்பதமும் இருக்கும். அதனால் இங்கு புதிய பயிரை எளிதாக நடவு செய்யலாம். எங்களது நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 65 ஜாதிக்காய் மரங்கள் என்ற கணக்கில் நடவு செய்துள்ளோம். வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இடையேயும் ஜாதிக்காயைப் பயிர் செய்யலாம். அதாவது 4 தென்னை மரங்களுக்கு இடையில் ஒரு ஜாதிக்காய் என்ற கணக்கில் நடவு செய்துள்ளோம். 10 வருடங்களுக்கு முன்பு கேரளாவின் மன்னுத்து என்ற இடத்தில் இருந்து ரூ.60 என்ற கணக்கில் நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். 24 ஏக்கருக்கும் சேர்த்து சுமார் 1560 நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். நாற்று வாங்குவதற்கு மட்டும் ரூ.93 ஆயிரம் செலவானது. நடவிற்கு முன்பு நிலத்தை கொத்திவிட்ட பின்பே நடவு செய்தோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் என்பதால் அடிஉரமாக எந்தவொரு ரசாயன உரமும் பயன்படுத்தவில்லை.

நாற்றுகளை நடவு செய்வதற்கு 1.5 x 1.5 அடி அளவில் குழி எடுத்து நாற்றுகளை நடவு செய்தோம். 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு மற்றும் தேவையான அளவு குப்பைமண்ணை அடிஉரமாக இட்டோம். குப்பைமண் எங்களது நிலத்திலேயே இருப்பதால் நாங்கள் வெளியில் இருந்து வாங்குவது கிடையாது. வேப்பம்புண்ணாக்கு மட்டும் வெளியில் இருந்து வாங்கி உரமாக பயன்படுத்துகிறோம். நாற்றுகளை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையென்றால் செடிகள் தளர்ந்துவிடும். வேர்பிடித்து வளராது. செடிகள் நடவு செய்ததில் இருந்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் விட வேண்டும். அதாவது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். நடவு செய்த, முதல் மாதத்தில் செடிகள் நன்கு வேர்பிடித்து புதிய இலைகள் வரத் தொடங்கும். இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை களை எடுத்து அதில் குப்பை மண் இடுவோம். மீண்டும் மூன்று மாதம் கழித்து களை எடுக்கும்போது வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் மற்றும் 2 கிலோ குப்பை மண் இடுவோம். இதேபோல் மாதம் ஒருமுறை என்ற கணக்கில் ஒரு வருடம் வரை செய்ய வேண்டும். மரத்தின் வேர்கள் வெளியில் தெரிவது போல வளரும். இதனால் வேர்கள் காய்ந்து அதிகம் தண்ணீர் இழுக்காமல் இருந்துவிடும். ஆகவே வேர்கள் வெளியில் தெரியும் போதெல்லாம் குப்பை மண் கொட்டுவது அவசியம். குறிப்பாக குழி எடுத்து குப்பை மண்ணை போடாமல் பாத்தியில் மட்டுமே குப்பை மண்ணை வீச வேண்டும்’’ என்ற கார்த்திக்கைத் தொடர்ந்து வினோத் பேச ஆரம்பித்தார்.

“ ஒரு வருடம் ஆன ஜாதிக்காய் செடி சுமார் 3 முதல் 4 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும். பொதுவாகவே ஜாதிக்காயில் ஒட்டுக் கட்டுவதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு வருடம் ஆன ஜாதிக்காய் செடியில், நன்கு வளர்ந்த ஜாதிக்காய் மரத்தில் இருந்து மேல்நோக்கி வளரக்கூடிய சிறிய கிளை ஒன்றை எடுத்து ஒட்டுக் கட்டுவோம். ஒட்டுக் கட்டுவதற்கான செடிகளையும் கேரளாவில் இருந்துதான் வாங்கி வந்தோம். இதனைக் குளிர்ந்த பெட்டியில் எடுத்து வந்து ஒட்டுக் கட்டினோம். ஒரு மரத்தில் ஒரு ஒட்டு மட்டுமே கட்ட முடியும். ஒரு ஒட்டு கட்டுவதற்கு ரூ.150 வரை செலவாகும். ஒட்டுக் கட்டும் கிளையும் மரத்தின் உட்பகுதியும் சேர்ந்து இருப்பதுபோல் வைத்து ஒட்டுக் கட்ட வேண்டும். அப்போதுதான் ஒட்டுச் செடியும் நன்கு வளரும். ஒட்டுக் கட்டுவதற்கு நாங்கள் டேப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஒட்டுக் கட்டியதில் இருந்து ஒரு மாதத்தில் அந்த டேப்பினை அவிழ்த்து விடுவோம். இந்த நேரத்தில் ஒட்டு சரியாகக் கட்டவில்லையென்றால் கிளை கீழே விழுந்துவிடும். மீண்டும் ஒரு புதிய கிளையை வைத்து புதிய ஒட்டுக் கட்டலாம். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் ஒட்டுக் கட்டுவதற்கு ஏற்ற மாதமாக இருக்கும். காரணம் அதிகம் வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசும். அதனால் ஒட்டுக் கட்டப்பட்ட கிளை காய்ந்து கீழே விழாமல் இருக்கும். இந்த மூன்று மாதங்களை தவறவிட்டால் மீண்டும் அடுத்த வருடமே ஒட்டுக் கட்டுவோம்.

மூன்றரை வருடத்தில் செடிகள் 6 அடி கொண்ட மரமாக வளர்ந்துவிடும். அப்போது முதல் சாகுபடிக்கு மரங்கள் தயாராகிவிடும். ஜாதிக்காயினை பொறுத்தவரையில் டிசம்பரில் பூ பூக்கும். பிப்ரவரியில் காய் பிடிக்கும். மே முதல் செப்டம்பர் வரை காய்களை அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த ஜாதிக்காய் ஆரஞ்சுப் பழம்போல் இருக்கும். இதில் வெடிப்பு தோன்றத் தொடங்கும். இந்தத் தருணத்தில் நாங்கள் அறுவடைக்கும் தயாராகிவிடுவோம். முதலில் அதிகபட்சமாக ஒரு மரத்தில் இருந்து 1 கிலோ வரை மட்டுமே காய்கள் கிடைக்கும். மரங்களுக்கு வயது கூடக் கூட மகசூல் இரட்டிப்பு ஆகிக்கொண்டே வரும். முழு வளர்ச்சியடைந்த ஜாதிக்காய் மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 2000 பழங்கள் வரை கிடைக்கும்.50 வருடங்கள் வரை காய்த்து பலன் தரும். ஒரு ஜாதிக்காய் தோட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண் மரங்களும், ஓர் ஆண் மரமும் இருப்பதுபோல் வைத்திருக்கிறோம். ஜாதிக்காய் மூன்று பருவங்களில் அறுவடை செய்யப்படுகிறது. சுமார் 6 லிருந்து 8 வாரம் வரை காயவைக்கப்படுகிறது. மூன்று ரகங்களாகப் பிரிக்கப்படும் ஜாதிக்காயின் முதல் ரகம் சமையல் தேவைகளுக்காகவும், மற்ற ரகங்கள் உணவைப் பாதுகாக்கும் பொருட்களைத் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருட்களை உண்டாக்கவும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை ஜாதிக்காய் மகசூலாக கிடைக்கும். ஏக்கர் நிலத்தில் 65 மரங்கள் இருக்கிறது. ஒரு மரத்திற்கு குறைந்தது 3 கிலோ மகசூல் கிடைத்தாலும் ஏக்கருக்கு 195 கிலோ ஜாதிக்காய் கிடைக்கிறது. ஒரு கிலோ ஜாதிக்காய் ரூ.400க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.78 ஆயிரம் வரை வருமானமாக கிடைக்கிறது. ஜாதிக்காயில் இருந்து 3ல் ஒரு பங்கு ஜாதிபத்திரி கிடைக்கும். அதன்படி ஒரு ஏக்கரில் கிடைக்கும் 195 கிலோ ஜாதிக்காயில் இருந்து 65 கிலோ ஜாதிபத்திரி கிடைக்கிறது. டிமாண்டைப் பொருத்து ஜாதிபத்திரி ரூ.2200 வரை விற்பனை ஆகிறது. சராசரியாக ஒரு கிலோ ஜாதிபத்திரி ரூ.1800க்கு விற்பனையாகிறது. 65 கிலோ ஜாதிபத்திரியை சராசரி விலையான ரூ.1800க்கு விற்றால் கூட ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி மூலம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். அதுபோக ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. ஊடுபயிராக விளைவித்து கிடைக்கும் இந்தத் தொகை நல்ல லாபம்தான்’’ என்கிறார் வினோத்.

“இதுபோக ஊடுபயிராக கிட்டத்தட்ட பாக்கு மரங்களை வைத்துள்ளேன். பாக்கை மட்டுமே நாங்கள் தனிப்பயிராக போட்டு இருந்தால் 1 ஏக்கருக்கு 900 நாற்றுகள் வரை வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஊடுபயிராக வைத்துள்ளதால் ஒரு ஏக்கருக்கு 320 நாற்றுகள் மட்டுமே வைத்துள்ளோம். 24 ஏக்கரிலும் சேர்த்து மொத்தம் 7000 மரங்கள் உள்ளன. இந்த நாற்றுகள் அனைத்தையும் ஈரோட்டில் இருந்து வாங்கி வந்துதான் நடவு செய்தோம். இதற்கு உரமாக வேப்பம்புண்ணாக்கு மற்றும் குப்பை மண் மட்டுமே கொடுக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 70 கிலோ பாக்கு வரை கிடைக்கிறது. இதில் கிடைக்கும் பாக்குகளை அறுவடை செய்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. அதேபோல் வீட்டின் தேவைக்கான செர்ரி, அவகோடா, லெமன், மங்குஸ்தான் உள்ளிட்ட பழ வகைகளையும் எங்களது நிலத்திலேயே வளர்த்து வருகிறோம்.

தலச்சேரி ஆடுகளையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். கிட்டத்தட்ட 100 ஆடுகள் உள்ளன. முதன்முதலில் 10 ஆடுகளை ரூ.60 ஆயிரத்திற்கு வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். தற்போது 100 ஆடுகளாக உயர்த்தி இருக்கிறேன். இதற்கான ஷெட்டினை 80 அடி நீளம், 20 அடி அகலம், நிலத்தில் இருந்து 4 அடி உயரம் என்ற கணக்கில் வடிவமைத்து உள்ளேன். இதில் கிடைக்கும் கழிவுகளை மண்ணுடன் சேர்த்து உலர வைத்து செடிகளுக்கு உரமாக்குகிறேன். சராசரியாக 15 லிருந்து 25 கிலோ வரை வளர்ந்த ஆடுகளை மட்டுமே விற்பனை செய்கிறேன். ஆடுகளுக்கு தேவையான சவுண்டல், அகத்தி, மல்பெரி, சூப்பர் நேப்பியர் உள்ளிட்ட பயிர்களை எங்களது நிலத்திலேயே வளர்த்து ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறோம். உயிருடன் இருக்கும் ஒரு ஆட்டினை ஒரு கிலோ ரூ.500 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். ஒரு ஆண்டுக்கு 50 ஆடுகள் வீதம் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.4.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதில் பராமரிப்பு செலவு ரூ.50 ஆயிரம் போக ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கிறது. தென்னையில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 100 டன் தேங்காய் கிடைக்கிறது. இந்த தேங்காய்களை ஒரு கிலோ ரூ.10 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன்.இதில் ஆண்டு வருமானமாக ரூ.10 லட்சம் கிடைக்கிறது. இதில் ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு, வேப்பம் புண்ணாக்கு செலவு ரூ.2 லட்சம் போக ரூ.8 லட்சம் லாபமாக கிடைக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் ஒரே பயிரை நடவு செய்து அறுவடை செய்யாமல் பல பயிர் சாகுபடி முறையில் ஈடுபட்டால் நல்ல வருமானம் கிடைக்கும். அதேபோல் மாதிரிப் பண்ணையாக மாற்றி வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வளர்த்து மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என பேசி முடித்து நம்மை வழியனுப்பி வைத்தனர் இந்த முன்மாதிரி சகோதரர்கள்.
தொடர்புக்கு:
கார்த்தி: 99655 27266

You may also like

Leave a Comment

14 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi