Monday, May 6, 2024
Home » அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க முதல்வர் வெளிநாட்டு பயணம் பற்றி அவதூறு பரப்புவதா?: எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க முதல்வர் வெளிநாட்டு பயணம் பற்றி அவதூறு பரப்புவதா?: எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

by Suresh

சென்னை: அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி அவதூறு பரப்புவதா என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக – கரன்சி மழையில் நனைந்து – ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.

முதலீடு என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிச்சாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.

அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் சுற்றுலா சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா? உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு. எங்கள் முதலமைச்சர் அப்படி இல்லை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார்.

இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிக்கைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் – போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக – அவதூறாக – கீழ்தரமாகப் பேசி – அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற “பெட்டி பெட்டியாக” பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட “கான்டிராக்ட் ஊழல்” அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் திமுகவை, முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை குறை கூற தகுதியும் இல்லை.

இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல, பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள், தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி பாணியிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

17 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi