புதுடெல்லி: லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஆன்லைன் அங்கீகார நடைமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் லேப்டாப், கணினிகள் (டேப்லெட் கணினிகள் உட்பட), மைக்ரோகம்ப்யூட்டர்கள், பெரிய அல்லது மெயின்பிரேம் கணினிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. நவ.1 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது லேப்டாப், கணினிகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஐடி ஹார்டுவேர்களை இறக்குமதி செய்ய ஆன்லைன் முறையில் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் லேப்டாப், டேப்லெட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் தட்டுப்பாடு இல்லாத வகையில் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.