மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மானாமதுரை கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 17ம் தேதி பணிகள் முடிந்த நிலையில், ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றனர். நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், வங்கியின் மெயின் கேட் மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து வந்த மானாமதுரை போலீசார், வங்கியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிவகங்கை தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கூறுகையில், ‘‘கொள்ளையர்கள் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே இறங்கியுள்ளனர். பின் வங்கியினுள் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துள்ளனர். தொடர்ந்து மெயின்கேட்டை திறக்க வெல்டிங் மிஷின் மூலம் பூட்டை அறுத்துள்ளனர். வங்கியில் நுழைந்த அவர்கள், லாக்கர் முன் உள்ள இரும்புக்கதவை திறக்க முயற்சித்து முடியாததால் தப்பி சென்றுள்ளனர். இதனால் லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான பணம், நகைகள் தப்பியது’’ என்றனர்.
* கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தங்க நகைகளின்பேரில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நகைகள் இக்கட்டிடத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேளாண் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்து விட்டு கதவை உடைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதையடுத்து சங்க நிர்வாகிகள் உடனடியாக வந்தனர். அப்போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததும் கொள்ளையர்கள் வெளியேறி இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அலாரம் அடித்ததால் அங்கிருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது.