Friday, May 10, 2024
Home » அயோத்தி ராமர் கோயில்: சிறப்பு அம்சங்கள்

அயோத்தி ராமர் கோயில்: சிறப்பு அம்சங்கள்

by Dhanush Kumar

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடக்கிறது. விழாவில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். இன்று மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை தொடங்கி மதியம் 1 மணி அளவில் முடியும் என கூறப்படுகிறது. இதில் குழந்தை ராமர் சிலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்… ராமர் கோயில் நடன மண்டபம், வண்ண மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்களை கொண்டுள்ளது. ராமரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள், கோயில் வளாகத்தின் தூண்கள் மற்றும் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலை சுற்றி 732 மீட்டர் நீளம், 14 அடி அகலத்தில் மதில் வளாகம் கட்டப்பட்டுள்ளது.

சூரியன் உதிக்கும் கிழக்கை நோக்கி ராமர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து சிம்ம வாசல் வழியாக 16 அடி நீள 32 படிக்கட்டுக்களை பயன்படுத்தி ராமர் சந்நதிக்குள் பக்தர்கள் செல்லலாம். மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வசதிக்காக சாய்வு தளம், லிப்ட் வசதிகள் கோயிலில் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் 4 மூலைகளிலும் நான்கு கோவில்கள் கட்டப்பட்டுள்னள. சூரிய கடவுள், சிவன், தாயார் பகவதி, விநாயகருக்கு கோயில்கள் உள்ளன. வடக்குப் புறம் அன்னபூரணி ஆலயமும், தெற்கில் ஹனுமன் ஆலயமும் இருக்கும். தென்மேற்கு திசையில் குபேல் திலாவில் ஜடாயு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரர், மகரிஷி அகஸ்தியர், நிஷாத அரசன், மாதா சபரி ஆகியோருக்கும் கோயிலில் சிறப்பு சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, சீதா கூப் எனும் கோயில் கிணறும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி 25,000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்களுக்கு தேவையான அவசர மருத்துவ வசதி, லாக்கர் வசதி, ஏடிஎம் வசதி இருக்கும். மொத்தத்தில் ராமர் கோயில் தற்சார்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அடித்தளத்தில் 14 மீட்டர் பருமன் கொண்ட கான்கிரீட் அடுக்கு செயற்கைப் பாறை தோற்றத்தை தருகிறது. செப்புத் தகடுகளைப் பயன்படுத்தி பழங்கால இன்டர்லாக்கிங் முறையில் கற்களை நிலைநிறுத்தி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், 2,500 ஆண்டுகள் வரையிலும் எந்த பூகம்பத்தையும் தாக்கும் வகையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

சோமநாத் கோயில் உட்பட நாட்டின் 100க்கும் மேற்பட்ட கோயில்களின் வடிவமைப்புகளில் பங்களித்த அகமதாபாத் சோம்புரா குடும்பத்தினர் சார்பில் தலைமை சிற்பி சந்திரகாந்த் பாய் சோம்புரா கடந்த 1988ம் ஆண்டு அயோத்தி ராமர் கோயிலுக்கான வடிவமைப்பை செய்தார். பின்னர் 2020ம் ஆண்டு வாஸ்து, சில்ப சாஸ்திரங்களின் அடிப்படையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது. இக்கோயில் நாகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவு மதிப்பீட்டில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. எல் அன்ட் டி மற்றும் டாடா கட்டுமான நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் சுமார் 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

* பச்சை நிறமே… பச்சை நிறமே…

பசுமையான சூழல் எப்போதுமே மனதை கவரும். அதனை கருத்தில் கொண்டு கோயில் வளாகத்தில் பசுமையான மரங்கள், செடிகள் அமைய உள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட் வசதி, சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் 70 சதவீத பகுதிகள் பசுமைப் பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

* 300 கோடி ஆண்டு பழமையான கல்லில் செதுக்கிய சிலை

ராமர் கோயில் கருவறையில் 51 அங்குல உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலை குறித்து மைசூரு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.கந்தப்பா கூறுகையில், ‘‘இந்த சிலை 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் இருந்து செதுக்கப்பட்டது. புவியியல் ரீதியாக மைசூரைச் சுற்றியுள்ள பாறைகள் ஆர்க்கேன் தார்வார் கிராட்டன் என்பதன் ஒரு பகுதியாக உள்ளன. இந்தப் பாறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இவை 300 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பதை வெளிப்படுத்தி உள்ளன’’ என்றார். தங்க வில், அம்புடன் உள்ள குழந்தை ராமர் சிலை 200 கிலோ எடை கொண்டது.

* மக்ரானா மார்பிள் கருவறை

ராமரை வழிபடும் கோயில் மட்டும் 57,400 சதுர அடியில் அமைந்துள்ளது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகள் கொண்டதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 12 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குள் ராமரின் வாழ்க்கை சம்பவங்களை நினைவுப்படுத்தும் வகையில் கண்கவர் சிற்பங்கள், அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
வாசலில் ஹனுமன், கருடபகவான், யானை, சிங்கத்தின் பிரமாண்ட சிலைகளை வைக்க உள்ளனர். பிங்க் வடிவில் இந்த சிலைகள் அமைகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விலை உயர்ந்த மக்ரானா எனப்படும் உயர்ரக மார்பிள் கற்களை கொண்டு கருவறை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானது. இந்த வகை கற்கள் உள்கட்டுமானத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுமானத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபலமான இளஞ்சிவப்பு மணல்கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 4.70 லட்சம் கன அடி கற்கள் கோயில் முக்கிய தரிசன பகுதியிலும், 17 ஆயிரம் கிரானைட் கற்கள் பீடங்களிலும், வண்ண பளிங்கு கற்கள் பதிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. வண்ண பளிங்கு கற்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவையெல்லாமே விலை உயர்ந்தவை மட்டுமல்ல… கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யும்போது மனதிற்கு ஒருவிதமான பரவச நிலையை அளிக்கும். அந்தளவுக்கு பார்த்து, பார்த்து கோயில் செதுக்கப்பட்டுள்ளது.

* மழலை முதல் மெகா சிலை வரை

ராமர் கோயிலில் 4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை 4 அடி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1949ம் ஆண்டில் ராம ஜென்ம பூமியில் 6 அங்குல உயர வெள்ளியிலான குழந்தை ராமர் சிலை ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இதை மனதில் கொண்டே குழந்தை ராமர் சிலை இங்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சிற்பிகளான அருண் யோகிராஜ், கணேஷ் பட், ஆகியோர் கருங்கல்லில் ராமர் சிலையை செதுக்கினர். ராஜஸ்தான் சிற்பி ஒருவர் மார்பிள் கல்லில் செதுக்கினார். இறுதியில் கர்நாடக சிற்பிகள் செதுக்கிய சிலையே தேர்வானது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் குழந்தை ராமர் சிலை என்றாலும், மறுபுறம் மெகா ராமர் சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் சரயு நதிக்கரையையொட்டி, 251 அடி உயர ராமர் சிலையை அமைக்க உள்ளனர்.

* தங்க முலாம் தேக்கு கதவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேக்குமரங்கள் வரவழைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட கதவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தங்க கோயில் போல பிரகாசிக்க வேண்டுமென்பதற்காக தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, தெலங்கானாவில் இருந்தும் அனுப்பப்பட்ட கிரானைட் கற்கள், ராமர் கோயிலை ரம்மியமாக்குகின்றன. இது முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட கட்டுமானமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளை தாண்டினாலும், கோயில் பாதிப்படையாத வகையில் பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டுதான் கோயில் கட்டுமானத்தில் இரும்பை பயன்படுத்தவில்லை. காரணம், இரும்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து கோயிலின் ஆயுளைக் குறைக்கும் என்கிறார்கள் கட்டுமான பொறியாளர்கள். சுமார் 5000 ைகவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராது ராமர் கோயிலை கட்டியுள்ளது மிகவும் விசேஷம்.

* 400 கிலோ பூட்டு

அயோத்தி ராமர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மாவால் உருவாக்கப்பட்ட 400 கிலோ பூட்டு ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சத்ய பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோயிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்க வேண்டும் என்பதுதான் அவரின் கடைசி ஆசை என்று அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்துள்ளார். 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பூட்டு நேற்று முன்தினம் ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

* ராமர் கதை பாருங்கள்…

ராமர் கோயிலுக்கு செல்லும் வழியில் சுமார் 13 கிமீ தூரத்தில் ராமரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வழித்தடம் அமைய உள்ளது. வழியெங்கும் 30 அடி உயரத்தில் சூரிய வடிவ தூண்கள் வசீகரிக்கின்றன. கோயிலின் நடைபாதைககளில் வால்மீகியின் ராமாயணத்தில் இருந்து 100 முக்கிய நிகழ்வுகள் காட்சியாக நம்மை கவர்கின்றன. அலங்கார விளக்குகளும் பிரகாசமான அணிவகுப்பை நடத்தி அசர வைக்க காத்திருக்கின்றன. கோயில் வளாகத்தில் 1,500 பேர் வரை தங்கலாம். பக்தர்களின் வசதிக்காக 25 ஆயிரம் லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் நலம் பாதித்தால் சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் அமைகிறது.

* புனித மண்

ராமர் கோயிலின் அடித்தளம், 2587 பிராந்தியங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் கொண்டு அமைக்கப்பட்டதாகும். ஜான்சி, பிதோரி, யமுனோத்ரி, ஹல்திகாதி, சித்தூர்கர், தங்க கோயில் உள்ளிட்ட பல புனித தளங்களில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு அடித்தளம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 155 புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டு வந்து, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். தாய்லாந்தில் இருந்தும் மண், புனித ஆறுகளின் தண்ணீர் ஆகியவை ராமர் கோயில் கட்ட அனுப்பி வைக்கப்பட்டது.

* 2,500 ஆண்டுகள் தரமாக இருக்கும்…

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி தலைவர் ஆசிஷ் சோம்புரா கூறுகையில், ‘‘நாகரானா என்ற கட்டுமான மாதிரியில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் கற்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கோயில் மிகவும் வலுவானதாக இருக்கும். பூகம்பமே வந்தாலும் அதிர்வுகளை தாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2,500 ஆண்டுகள் வரை கோயில் மிக வலுவாக இருக்கும்’’ என்கிறார்.

* தரைதளத்தில் குழந்தை ராமர்

அயோத்தி ராமர் கோயில் தரைதளம், முதல் தளம், 2வது தளம் என 3 தளங்களுடன் கட்டப்படுகிறது. ஒவ்வொரு தளத்திற்கும் இடையே 20 அடி உயரம் இருக்கும். தரைத்தளத்தின் கருவறையில் 4.5 அடி உயர குழந்தை ராமர் (ராம் லல்லா) சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. முதல் தளத்தில் ராம தர்பார் அமைகிறது. இங்கு ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலை நிறுவப்படும்.

* இரும்பு கிடையாது

ராமர் கோயில் கட்டுமானத்தில் துளி இரும்பு கூட பயன்படுத்தப்படவில்லை. கோயில் முழுக்க முழுக்க கற்கள் மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதுதவிர காப்பர், ஒயிட் சிமென்ட், மர சாமான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 1000 ஆண்டுக்கு எந்த விதமான சரிபார்ப்பு பணியும் மேற்கொள்ள வேண்டிய எந்த தேவையும் இல்லாத வகையில் கோயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும், எதிர்காலத்தில் கோயிலை விரிவாக்கம் செய்யும் வகையிலும் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மிகப்பெரிய கோயில்

சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கோயிலாக அயோத்தி ராமர் கோயில் புகழ் பெற்றுள்ளது. மொத்தம் 28,000 சதுர அடி பரப்பளவில் 161 அடி உயர கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. பழமையான பாரம்பரியத்துடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கோயில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

வளாகத்தில் உள்ள சிறப்பு வசதிகள்

*  ராம் குண்ட் எனும் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

* புனித சடங்குகளுக்காக கர்ம் ஷேத்ரா மண்டபம் உள்ளது.

* ஹனுமன் கதி எனும் பிரமாண்ட ஹனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

* ராமர் பிறந்த இடத்திற்கான வரலாற்று சான்றுகளும், தொல்லியல் ஆதாரங்களையும் காட்சிப்படுத்தும்  ராம்லாலா புரகாலிக் தர்ஷன் மண்டல்.

* குழுவாக பிரார்த்தனை செய்வதற்கு  காம் கீர்த்தி

* திறந்தவெளி 360 டிகிரி தியேட்டர் துளசி ராம்லீலா சென்டர்.

* பல்செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு மையம் ‘ராம் தர்பார்’

* வேதம், புராணம், ராமாயணம், சமஸ்கிருதம் தொடர்பான ஆராயச்சிக்கான குரு வசிஷ்டா பீதிகா ஆய்வு மையம்.

* ஆழ் தியானத்திற்காக பக்தி தீலா எனும் அமைதியான தியான மண்டபம்

* ‘ராமன்கண்’ எனும் சினிமா, தொலைக்காட்சி, ஆடியோ விஷுவல் அடிப்படையிலான ஷோக்கள் மற்றும் சொற்பொழிவிற்கான தியேட்டர்.

* ‘ராமாயணம்’ எனும் நவீன ஏசி நூலகம் மற்றும் வாசிப்பு அறை.

* ‘மகரிஷி வால்மீகி’ ஆவண காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

* வெளியூர் பக்தர்கள் காத்திருக்க, ெபாருட்களை வைக்க ‘ராமஷ்ரயம்’

You may also like

Leave a Comment

sixteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi