ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்துவருகிறது. இதில் முதல் நாளில் இருந்து இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. 9வதுநாளான நேற்று துப்பாக்கி சுடுதல், கோல்ப், குண்டு எறிதலில் தங்கம் வென்றது. நேற்று ஒரே நாளில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்றது. இன்று ரோலர் ஸ்கேட்டிங் 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. சஞ்சனா பத்துலா, கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய வீராங்கனைகள் 4:34.861 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தனர். சீன தைபே 4 நிமிடம் 19.447 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கமும், தென் கொரியா 4 நிமிடம் 21.146 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும் வென்றன. ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆர்யன்பால் சிங் குமான், ஆனந்த்குமார் வேல்குமார், சித்தாந்த் காம்ப்ளே மற்றும் விக்ரம் இங்கலே ஆகியோர் 4:10.128 வினாடிகளில் கடந்து 3வதுஇடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினர். சீன தைபே (4:05.692), தென் கொரியா (4:05.702) முதல் இரண்டு இடம் பிடித்து முறையே தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கைப்பற்றின. வில்வித்தையில் கலப்பு அணி போட்டியில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. கூட்டு கலப்பு அணியில் இந்தியா 159-151 என்ற கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வென்றது.
மகளிர் ரிகர்வ் குழு போட்டியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. ஆடவருக்கான 800 மீட்டர் தகுதி சுற்றில் முகமது அப்சல் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். கிருஷ்ணன் குமார் ஆடவர் 800 மீட்டர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.ஜெஸ்ஸி சந்தேஷ் ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதி சற்றுக்குள் நுழைந்தார். ஆடவர் உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே, ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் சந்தோஷ் குமார் தமிழரசன் , யஷாஸ் பலாக்ஷா தகுதி பெற்றார் பெண்களுக்கான 400 மீட்டர்ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.