ஊட்டி: ஊட்டியில் நேற்று மழை கொட்டிய நிலையில், குடைகள் வியாபாரம் களைக்கட்டியது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனினும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை காண நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஊட்டியில் காலை துவங்கிய மழை மாலை வரை பெய்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக, காலை 11 மணி முதல் 2 மணி வரை மழை கொட்டியது. இதனால், மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பூங்கா செல்லும் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள குடைகளை வாங்கிச் சென்றனர். இந்த குடைகள் ரூ.150 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டன. எனினும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த குடைகளை வாங்கிச் சென்றனர். இதனால் குடை விற்பனை களைக்கட்டியது. மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த குடைகளை பிடித்தப்படியே பூங்காவை சுற்றி பார்த்தனர்.