Thursday, May 23, 2024
Home » அரசமரம் ஒன்று ஆனைமுகன் இருபத்திரண்டு!

அரசமரம் ஒன்று ஆனைமுகன் இருபத்திரண்டு!

by Porselvi

மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். மூலத்தில் பிரம்மனும், நடுப்பகுதியில் திருமாலும், உச்சியில் ஈசனும் அரசமரத்தில் அருள்புரிவதாக புராணங்கள் பகிர்கின்றன. அதனாலேயே அரசமரத்தை ராஜவிருட்சம் என்று அழைப்பர். அவ்வளவு மகிமை வாய்ந்த அரசமரத்தில், வினைகளை வேரோடு களையும் விநாயகப் பெருமான், தானே சுயம்புவாய் எழுந்தருளியிருக்கிறார். முதலில் நர்த்தனகணபதியாகத் தோன்றி, பின் அந்த மரத்தில் 22 பகுதிகளிலும் சுயம்புவாக காட்சி தருகிறார். “ஓம்’’ எனும் பிரணவ மந்திரத்தில் உள்ள அ, உ, ம காரங்களில் உள்ள “உ’’ வடிவாக உள்ளவர் திருமால். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயே, சர்வ விக்னோப சாந்தயே’ என்று உலகை காக்கும் தெய்வமான திருமாலே விக்னங்களை நாசமாக்கும் விநாயகர் என்று கூறப்பட்டுள்ளது. அதனாலேயே இங்கு அரசமரத்தில் திருமாலின் பகுதியில் விநாயகர் தோன்றியிருக்கிறாரோ!

1983-ஆம் ஆண்டு ஒரு சிறு குடிசையில் ஜனவரி 26ம் தேதி நிறுவப்பட்டது இந்த பால விநாயகர் ஆலயம். விநாயகரின் நாளொரு லீலையும் பொழுதொரு மகிமையுமாக ஆலயம் சிறிது சிறிதாக வளர்ந்தது. தென்னகத்திலேயே முதன் முதலாக 1987ம் வருடம் இந்த பாலவிநாயகருக்கு ஏக தின லட்சார்ச்சனை மிக விமரிசையாக நடைபெற்றது. அன்று மாலை விமரிசையாக ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. 19.10.2000த்தில் ராஜகோபுரம் நிறுவப்பட்டு ஆலயத்தில் மற்ற தேவதைகள் நிறுவப்பட்டன. 2004ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனைக்காக ஆலயத்தில் கணபதியின் பல்வேறு திருவடிவங்களை சுதை வடிவங்களாக நிறுவ திட்டமிட்ட போது அதற்கு பல்வேறு தடைகள் வந்தன. அப்போதுதான் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள அரசமரத்தின் நடுப்பகுதி வெடித்து, கிரீடமாகவும், யானைமுகமாகவும், தந்தமாகவும், துதிக்கையாகவும், காதுகளாகவும், ஒரு காலை மடக்கி நடனமாடிடும் நிலையில் நர்த்தனகணபதி முதன்முதலில் சுயம்புவாக வெளிவந்தார். மரத்தின் பின்புறம் பஞ்சமுக ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி என ஒவ்வொரு திருவுருவங்களும் சுயம்புவாய் தோன்ற ஆரம்பித்து, தற்போது 22 கணபதி மூர்த்தங்கள் அந்த அரசமரத்தில் அருட்காட்சியளிக்கின்றன. இவர் அனுகிரக மூர்த்தியாய் பக்தர்களால் கொண்டாடப்படுகிறார். இந்த விநாயகருக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறு எலுமிச்சம் பழங்களை சமர்பித்து வணங்கி வலம் வந்தால் நிறைவேறாத கோரிக்கையே இல்லை என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

மூன்றுநிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் பால விநாயகரை தரிசிக்கலாம். அவருடைய கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, லட்சுமி நாராயணர், துர்க்கா தேவி ஆகியோர் அருள்கின்றனர். அதையடுத்து மயூர வாஹனன் சக்ரவியூக மகாமண்டபத்தில் வள்ளி – தேவசேனா சமேத சுப்ரமண்யரும், அச்வகணபதி, துர்க்காம்பிகை, மூஷிகவாகன கணபதி போன்றோரின் உற்சவத் திருமேனிகள் அருள்கின்றன. அவரை அடுத்து அரசமர சுயம்பு விநாயகரின் கீழ் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அரசமரத்திற்கு அருகில் சப்தமாதர்கள், ஓவியங்களாக அருள்கின்றனர். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் ராகுகால வேளையில் இத்தலத்தில் கன்னிகா தோஷ நிவர்த்தி பூஜை விசேஷமாக நடத்தப்படுகிறது. முதலில் பாலகணபதிக்கும், நாகங்களுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து ஏழு கன்னியர்களையும் எலுமிச்சம் கனிகளில் ஆவாகனம் செய்து அந்த தோஷமுள்ள கனிகளை நசுக்கி எறிகின்றனர். பின் எட்டு எலுமிச்சம்கனிகளில் அந்த கன்னிகளை சப்தமாதர்களாக்கி, மகாலட்சுமியையும் சேர்த்து ஆவாகனம் செய்து தோஷ நிவர்த்தி செய்கின்றனர். இதனால் திருமணத்தடைகள் நீங்கி கன்னியர்க்கு மனம் போல் வாழ்வு கிட்டுகிறதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் தினந்தோறும் சதுர்வேத பாராயணம் நடக்கிறது.

கந்தசஷ்டி உற்சவம், பங்குனி உத்திர உற்சவம் போன்ற சமயங்களில் முருகப் பெருமான் திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. நவராத்திரி பத்துநாட்களும் துர்க்காம்பிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறாள். ஜனவரி 18ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை வசந்தோற்சவம் விமரிசையாக நடக்கிறது. ஆலயம், காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணிவரையிலும் திறந்திருக்கும். சென்னை சாலிக்ராமம், பரணி காலனியில் பிக் பஜார் அருகே உள்ளது இந்த அரசமர ஆனைமுகன் ஆலயம். பல ஆலயங்களில் அரசமரத்தடியில் ஆனைமுகன் அருள்வார். ஆனால் அரசமரமே 22 ஆனைமுகன்களாக அருளும் அற்புதம் இங்கு பிரமிக்க வைக்கிறது.

 

You may also like

Leave a Comment

nine − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi