Monday, June 17, 2024
Home » அதிமுக ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு, குளறுபடி குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?: கணக்கு நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் சரமாரி கேள்வி

அதிமுக ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு, குளறுபடி குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?: கணக்கு நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் சரமாரி கேள்வி

by Suresh

சென்னை: அதிமுக ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு, குளறுபடி குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து கணக்கு நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் சரமாரி கேள்வி எழுப்பினார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இதில் நேரமில்லா நேரத்தில் கணக்கு நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் பேசியதாவது: 2030 ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் இம்மாத முதல் வாரத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்த முதல்வருக்கு நன்றி. மேலும் தமிழ்நாட்டை தொழில் முதலீட்டில் முதன்மை மாநிலமாக மாற்ற தற்போது ஸ்பெயினில் நடைபெற்று கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் முதல்வரின் பயணம் வெற்றிகரமாக அமைய உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட விவரம், வணிகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள நிலங்களின் அளவு (சதுரடி) விவரம், இதில் வசூலிக்கப்படும் சொத்துவரி, தொழில் வரி மற்றும் வாடகை விவரம் மற்றும் நிலுவை தொகை விவரங்கள் கேட்டு 5.12.22 அன்று கணக்கு மற்றும் தணிக்கை குழு சார்பாக ஆணையருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். மேலும் 18.1.23 மற்றும் 10.5.23 என இருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு 3.2.23 அன்று வருவாய் துறையிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளதாக பதில் பெறப்பட்டுள்ளது. பின் 10.6.23 அன்று துணை ஆணையரிடம் இருந்து, “வருவாய் துறை இதற்கு பதில் அளிப்பார்கள்” என்று கடிதம் பெறப்பட்டது. ஓராண்டு கடந்தும் இன்றுவரை தகவல் கிடைக்கவில்லை. ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த தகவலை விரைந்து அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட ஆணையரை கேட்டு கொள்கிறேன். தகவலை தர தாமதப்படுத்தும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிதியாண்டு 2020-21, கொரோனா நோய் தடுப்பிற்கு பெறப்பட்ட முன்பணம் விவரம் கிடைக்கவில்லை. 2020-21 நிதியாண்டு அதிமுக ஆட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக மண்டலம் வாரியாக பெறப்பட்ட முன்பணங்களின் விவரம் கேட்டு 5.5.2023 அன்று பொது சுகாதார துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். இதுவரை மண்டலம் 1, 2 மற்றும் 11 மட்டுமே விவரங்களை அனுப்பியுள்ளனர். 9 மாதங்கள் கடந்தும் மீதம் உள்ள 12 மண்டலங்களிலிருந்து எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக பதில் அளிக்க அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

28 ஏப்ரல் 2023 அன்று, மாமன்ற கூட்டத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் நிதியாண்டு 2018-19 மற்றும் 2019-20ல் 9 நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி சுமார் 50% மேல் குறைக்கப்பட்டு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புகள் மற்றும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது தொடர்பாக தெரிவித்திருந்தேன். இன்னும் பல ஓட்டல்கள் இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதுகுறித்து ஒரு கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன். இதற்கு அன்றைய ஆணையர் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்டபான விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொண்டதன்பேரில் 19 ஜூன் 2023 கடிதம் மூலம் விளக்கம் அளித்திருந்தேன். 9 மாதங்கள் கடந்து விட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தெரிவிக்க ஆணையரை கேட்டு கொள்கிறேன்.

நிதியாண்டு 2021-22 வரை, தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களின் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் பணிக்கு தடவாடகை வழக்கின் காரணமாக சுமார் ரூ.5.4 கோடிக்கு மேல் வசூலிக்கப்படாமல் நிலுவையாக உள்ளது. இவ்வழக்கினை விரைந்து நடத்தி நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையரை கேட்டு கொள்கிறேன். 28.12.22 அன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பொருள் எண் 66ல், சுமார் ரூ.430.1 கோடியில் மண்டலம் 5,6 மற்றும் 9ல் சுமார் 372 இடங்களில் 3270 இருக்கைகள் கொண்ட கழிப்பறைகளை 9 ஆண்டுகள் பராமரிக்கவும் மற்றும் முதல் ஆண்டில் 90 இடங்களில் கழிவறை கட்டவும் டெண்டர் விடப்பட்டு அதற்கு மன்றத்தில் அனுமதியும் அளிக்கப்பட்டது;

இது தொடர்பாக கடந்த 31.10.23 அன்று வெளியான ஒரு செய்தி தாளில், ‘6 மாதங்கள் கடந்தும் ஒப்பந்ததாரர் ஒரு கழிவறை கூட கட்டி முடிக்கவில்லை எனவும்; 372 ஊழியர்களை பணியமர்த்த வேண்டிய ஒப்பந்ததாரர் வெறும் 53 நபர்களை தான் பணியமர்த்தி உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது. 90 கழிவறைகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் வெறும் 22க்கு மட்டுமே பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகில் பயன்பாட்டிலிருந்த கழிவறையை இடித்து 3 மாதங்கள் கடந்தும் புதிய கழிவறை கட்டவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பல குறைபாடுகளை ஒப்பந்ததாரர் மீது வைத்துள்ளது. அதனால் ஆணையர் விசாரணை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் மற்றும் விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னர், சென்னை மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினரால் எழுதப்பட்ட தணிக்கை தடைகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டால், சென்னை மாநகராட்சிக்கு என நியமனம் செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை இணை இயக்குநரால் விளக்கம் பரிசீலிக்கப்பட்டு, ஏற்புடையதாக இருந்தால் நீக்கம் செய்யப்பட்டு வந்தது. அதேபோல் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கையால் நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படும் தணிக்கை பத்திகளையும் பரிசீலனை செய்து நீக்கம் செய்யப்பட்டது. இதனால் வயது முதிர்வு ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வில் செல்லக்கூடிய சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எழுதப்பட்ட தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்து ஓய்வு பெரும் நாளில் எந்த ஒரு தடைகளும் இல்லாமல் ஓய்வு பெற்று வந்தனர்.

தற்போது இந்த முறை மாற்றப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்ட பத்திகள் மற்றும் நிலைக்குழு பரிந்துரைத்த பத்திகள் அனைத்தும் இணை இயக்குநர் மூலம் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிதி தணிக்கை தலைமை அலுவலகத்தில் போதி பணியாளர்கள் இல்லாததால் தணிக்கை தடைநீக்கம் செய்து, அறிக்கை அனுப்புவதில் பெருத்த காலவிரயம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு எனது கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழுவால் கடந்த 8 11 மாதங்களில் 217 பத்திகள் நீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது;

ஆனால் இன்றுவரை உள்ளாட்சி நிதி தணிக்கையின் தலைமை அலுவலகத்திலிருந்து இந்த பத்திகளில் நிலை குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை. இதனால் ஓய்வு பெறும் நாளுக்குள் தணிக்கை பத்திகள் நீக்கம் செய்யப்படாததால் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகே ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, தணிக்கை பத்திகளுக்கான விளக்கங்களை உள்ளாட்சி நிதி தணிக்கையின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதை தவிர்த்து, நமது மாநகராட்சிக்கென நியமனம் செய்யப்பட்ட இணை இயக்குநர் நிலையிலேயே தணிக்கை பத்திகளை நீக்கம் செய்ய உரிய ஆணையை பெற மாநகராட்சி நிதிக்குழுமம் 12 உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் மற்றும் விதிகளில் உருவாக்கப்பட்ட மாவட்ட உயர்நிலை தணிக்கை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பத்திகளை முன்னதாக பரிசீலித்து அனுப்பவும், தீர்வு காணவும் இடைநிலை குழு அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 15.12.2023 அன்று அரசாணை எண் 156 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சென்னை மாநகராட்சிக்கும் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கையை இணைத்து ஒரு இடை நிலை குழு அமைக்க வேண்டும் என ஆணையரை கேட்டு கொள்கிறேன்.

வழக்கின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 13 செயற்ெபாறியாளர்கள் மற்றும் உதவி செயற்ெபாறியாளர்கள் அனைவருக்கும் 7வது ஊதிய உயர்வுகான சம்பளம் மற்றும் பணப்படிகள் ஏதும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது. 12.11.20 அரசு நிதி துறை அரசாணை எண் 416ன் மூலம் அனைத்து பொறியாளர்களுக்கும் ஊதியம் நிர்ணயம் தொடர்பான ஆணை பிறப்பித்தது. இதில் உதவி பொறியாளர்கள் மட்டும் மேற்கண்ட அரசு ஆணையில் ஊதியம் குறைவாக இருப்பதாக கூட்டாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கிற்கும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும் வழக்கை காரணம் காட்டி கணக்கு குழுமம் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யாமல் நிராகரிக்கின்றனர். அதனால் ஆணையரை விரைந்து தீர்வு காண கேட்டு கொள்கிறேன்.

உயர்நீதி மன்ற ஆணையை மதிக்காத அதிகாரிகள் மண்டலம் 7ல், எனது நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை உறுப்பினர் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மண்டலம் 7, கிழக்கு முகப்பேர் ஜஸ்டின் ரத்தினவேல் பாண்டியன் தெரு எண் 5ல், திருவள்ளுவர் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு பெறப்பட்டுள்ள கட்டிட வரைபடம் முறையாக பெறப்படாத காரணத்திற்காக லாக் அன்ட் சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் 15.6.23 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. 6 மாதங்கள் கடந்தும் இன்றுவரை அந்த இடத்திற்கு லாக் அன்ட் சீல் வைக்கவில்லை. இது தொடர்பாக மண்டலம் 7க்கு, கடிதம் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்கும் உரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அந்த இடத்திற்கு உடனடியாக லாக் அன்ட் சீல் வைக்க உத்தரவிட வேண்டும்.

You may also like

Leave a Comment

18 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi