புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) சமீபத்தில் வெளியிட்ட 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கப்பட்டுள்ளது. குஜராத் வன்முறை குறித்த பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. இது கடும் சர்ச்சையாகி உள்ள நிலையில், வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாக ஒன்றிய அரசு மீது பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் என்சிஇஆர்டி பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.
கடந்த சில ஆண்டாக இவ்வாறு மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதே போல, இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. என்சிஇஆர்டி செய்த திருத்தங்களுடன் கடந்த வாரம் 12ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாட புத்தகங்கள் வெளியாகின. அதில், பாபர் மசூதி பெயர் நீக்கப்பட்டும், குஜராத் கலவரம் தொடர்பான பல தகவல்கள் மறைக்கப்பட்டும் உள்ளன. பாபர் மசூதி என்பதற்கு பதிலாக 3 குவிமாட கட்டிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய புத்தகத்தில் பாபர் மசூதி 16ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபர் காலத்தில் கட்டப்பட்டது என குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டு ராமர் பிறந்த இடத்தில் 1528ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய பாட புத்தகத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி வெளியான செய்தித்தாள்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அவைகளும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், குஜராத்தில் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை பாஜவின் ‘ரத யாத்திரை’, அதில் கரசேவகர்கள் பங்கு, பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த மதக்கலவரம், உபியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கு பாஜ வருத்தம் தெரிவித்தது போன்றவைகளும் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக புதிய புத்தகத்தில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதை அனைத்து சமூகத்தால் கொண்டாடப்பட்டது என்றும் கருத்தொற்றுமையை கட்டி எழுதியதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய புத்தகத்தில் 4 பக்கத்தில் இடம் பெற்றிருந்த அயோத்தி விவகாரம் இம்முறை 2 பக்கமாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர் என இருந்ததை பல சமூகத்தை சேர்ந்த பலரும் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சைகை்குள்ளாகி உள்ளன. இந்த மாற்றங்கள் மூலமாக வரலாற்றை மாற்ற ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* கலவரங்கள் பற்றி கற்பிக்க வேண்டிய அவசியமில்லை
இந்த சர்ச்சைகள் குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி நேற்று அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: பாடபுத்தகங்களில் மாற்றம் என்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக செய்யப்படும் திருத்தமாகும். எதை மாற்றுவது என்பது பாடம் மற்றும் கல்வியியல் வல்லுநர்களால் தீர்மானிக்கப்படும். நான் கட்டளையிடவோ அல்லது செயல்பாட்டில் தலையிடவோ இல்லை.
பாட புத்தகங்களில் எதற்காக கலவரத்தை கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம். வன்முறையாளர்களையோ, மனஅழுத்த நபர்களையோ அல்ல. மாணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில், சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில் அல்லது வெறுப்புக்கு ஆளாகும் வகையில் கற்பிக்க வேண்டுமா? அதுதான் கல்வியின் நோக்கமா? மாணவர்கள் வளரும்போது, இதர விஷயங்களை கற்றுக் கொள்ளட்டும்.
ஆனால் பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் நடந்தன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். 1984ல் நடந்த சீக்கிய கலவரம் ஏன் பாடபுத்தகத்தில் சேர்க்கப்படவில்லை என யாரும் குரல் கொடுப்பதில்லை. சில பொருத்தமற்ற விஷயங்களை மாற்றக் கூடாதா? இதில் எதுவும் திணிக்கப்படவில்லை. நாங்கள் வரலாற்றைக் கற்பிக்கிறோம். இந்த திருத்தங்கள் அனைத்தும் வரலாற்று உண்மைகள், ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். இவ்வாறு கூறி உள்ளார்.