*விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
திருமலை : திருப்பதி எஸ்.வி.பாலமந்திரம் மாணவர்களுக்கு ஸ்வர்ணபிரஷனா ஆயுர்வேத மருந்தை இணை செயல் அதிகாரி சதா பார்கவி வழங்கினார். மேலும் எஸ்.வி.ஆயுர்வேத மருந்தகத்தின் 357 மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவித்தார்.திருப்பதி வெங்கடேஸ்வர ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் எஸ்.வி.பாலமந்திரம் மாணவர்களுக்கு ஸ்வர்ணபிரஷனா ஆயுர்வேத மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இணை செயல் அதிகாரி சதா பார்கவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆயுர்வேத மருந்து வழங்கி பேசுகையில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்வர்ணபிரஷனா மூலிகை குறித்து நமது முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில், 6 மாதம் முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் இந்த மருந்தை உட்கொள்ளலாம். தனால் ஸ்வர்ணபிரஷனா மருந்து உட்கொள்வதால் குழந்தைகளின் நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, புத்திசாலித்தனம், ஜீரண சக்தி அதிகரிக்கும் என ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, சிறுவயதில் இருந்தே ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும். எஸ்.வி.ஆயுர்வேத மருந்தகத்தின் கீழ் 357 மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கிடைக்கும். ஸ்வர்ணபிரஷனா மருந்து தயாரிப்பில் பங்களிப்பு அளித்த டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் டி.ரவி பேசுகையில், தேவஸ்தான கல்வி நிறுவனங்களின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த மருந்தை வழங்க வேண்டும். தேவஸ்தானம் நிர்வகித்து வரும் சுவிம்ஸ் மற்றும் பர்ட் மருத்துவமனைகளுடன் எஸ்.வி.ஆயுர்வேதா மருத்துவமனையும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் டாபர் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி முபாரக், எஸ்.வி.ஆயுர்வேத கல்லூரி முதல்வர் முரளிகிருஷ்ணா, ஆயுர்வேத மருத்துவமனை கண்காணிப்பாளர் ரேணுதீக்ஷித், பாலமந்திரம் ஏஇஓ அம்முலு மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.