சென்னை: தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், வெயில் தாக்கம் இன்னமும் குறையவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவடைந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் வெயில் தாக்கம் குறையவில்லை. அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தாலும், மழை இல்லாத நாட்களில் கோடை காலத்தில் எந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்ததோ அந்த அளவுக்கு வெயில் கொடுமை இன்னும் வாட்டி வதைத்து தான் வருகிறது. பகலில் கடும் வெயிலும் இரவில் கனமழையுமாக இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், இந்த கால கட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இதனால் அக்டோபரில் தொடங்கும் வடமேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன், நாளை முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.