Monday, May 27, 2024
Home » தெய்வச் சேக்கிழார் திருவடி போற்றி

தெய்வச் சேக்கிழார் திருவடி போற்றி

by kannappan

சேக்கிழார் குரு பூஜை: 4:6:2022தமிழ் வரலாற்றிலேயே “தெய்வ” என்னும் அடைமொழியுடன் திகழும் புலவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர், மற்றொருவர் தெய்வச் சேக்கிழார். சகலருக்கும் தேவையான அறங்களை இருவரும் பொதுநிலையில் நின்று அறிவிக்கின்றனர்.திருக்குறளைத் தவிர சிலப்பதிகாரத்திற்கு முந்தைய இலக்கியங்கள் எல்லாம் முடி மக்களையே பாடிக் கொண்டிருக்க, சிலப்பதிகாரம்தான் முதன்முதலில் குடிமக்களைப் பற்றிப் பாடியது என்பர். எனினும் அது குடிமக்களில் உயர்ந்தோரையே பாடியது. ஆனால், பெரியபுராணம் மட்டும்தான் அரசன் முதல் ஆண்டி வரை, உயர்ந்தோர் முதல் தாழ்ந்தோர் வரை, அனைவரையும் அடியார் என்ற பார்வையில் சமமாகப் பாடியது.அதனால்தான் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாரை ‘தெய்வ’ என்ற அடைமொழியிட்டு அறிஞர் உலகம் போற்றுகிறது. ஆம், கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பாக, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாக இருப்பதுதானே தெய்வத்தன்மை.காப்பியத்தில் ஒன்றாகவும் புராணத்தில் ஒன்றாகவும் வரலாற்றில் ஒன்றாகவும் வைத்துப் போற்றத்தக்க ஓர் ஒப்பற்ற நூல் பெரியபுராணம். ஏன் பகவானைப் பற்றிய பதினெட்டு புராணங்கள் இருக்க, அடியவர்கள் வரலாற்றைச் சொல்லும் திருத்தொண்டர் புராணம் மட்டும் ‘பெரியபுராணம்’ என்று புகழப்படுகிறது என்பதற்கு தமிழ் மூதாட்டி ஒளவையார் தக்க பதிலைச் சொல்லி இருக்கிறார்.கேள்விகேட்டு பதில் சொல்லும் முறையை (Question Answer season) முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முருகப் பெருமான்தான். அதிலும் ஒளவையாரிடம்தான் அதனைத் தொடங்கினார். ஔவையாரிடத்தில் அரியது என்ன? சிறியது என்ன? கொடியது என்ன? என்று கேள்வியால் வேள்வி நடத்தும்போது “பெரியது என்ன?” என்று கேட்டார் முருகப் பெருமான். அப்போது ஔவையார் அருளிய பதிலே பெரியபுராணத்தின் பெயர்க்காரணத்திற்கும் விடையாகும். அவ்வகையில்,“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்;பெரிது பெரிது புவனம் பெரிது;புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன்;கரியமாலோ அலைகடலில் துயின்றோன்;அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்;குறுமுனியோ கலசத்துட் பிறந்தோன்;கலசமோ புவியில் சிறுமண்;புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” – என்ற பாடலின் வழி முருகனிடம், உலகம் பெரியது, உலகைப் படைத்த பிரம்மன் பெரியவர், பிரமனோ திருமாலின் உந்திக் கமலத்திலிருந்து உதித்தவர். திருமாலோ பாற்கடலில் பள்ளி கொள்கிறார். ஆனால், அந்தப் பாற்கடலை தன் கமண்டலத்தினுள் அடக்கி விட்டார் அகத்தியர். அதனால் அந்த குறுமுனியான அகத்தியர்தான் பெரியவர் என்றும் சொல்லலாம் என்றால், அந்த அகத்தியரோ மண்ணாலான கலசத்திலிருந்து பிறந்தவர். அத்தகு மண்ணின் திரட்சியான பூமியையே ஒரு பாம்பு தாங்கிக் கொண்டிருக்கிறது.அதனால் பாம்புதான் பெரிதா எனில், அந்தப் பாம்பையே உமையம்மை தன் சுண்டுவிரல் மோதிரமாக அணிந்திருக்கிறாள். அந்த உமையம்மைக்கு அன்றே ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு தந்துள்ளார் இறைவன். அதனால் இறைவனைப் பெரியவர் என்று சொல்லலாம், ஆனால் அந்த இறைவனையே தம் உள்ளத்தில் கோயிலெடுத்துத் தங்க வைத்துள்ள தொண்டர்களே உயர்ந்தவர்கள் அந்தத் திருத்தொண்டர்களின் பெருமையே பெரியது என்றார் ஔவையார். அதன்படி “பெருமையால் தம்மை ஒப்பார்;பேணலால் என்னைப் பெற்றார்; இருமையும் கடந்து வாழ்வார்”- என்று சிவபெருமானாலேயே சிறப்பிக்கப் படுகின்ற தொண்டர்களின் வரலாறாகிய பெரியபுராணத்தைத் தந்த தொண்டர் தெய்வச் சேக்கிழார்.இவர் தொண்டை நன்நாட்டு குன்றத்தூரில் பிறந்தவர். அவ்வூரின் முழுப்பெயர் செல்வமலி குன்றத்தூர் ஆகும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொருள் மலிவாகக் கிடைக்கும். அவ்வகையில், குன்றத்தூரிலோ செல்வம் மலிவாக கிடைத்ததால் இவ்வூர் செல்வமலி குன்றத்தூர் என்றாயிற்று.பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தை எழுதிய தெய்வச் சேக்கிழார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் விருந்திருக்க உண்ணாத வேளாள மரபில் சேக்கிழார் குடியில் பிறந்தார். அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் கல்வித்திறம் கண்டு இவருக்கு “உத்தம சோழப் பல்லவன்” என்ற பட்டம் வழங்கி தனது அரசவையில் முதலமைச்சராய் அமர்த்தினார் இரண்டாம் குலோத்துங்க சோழன் பணியாற்றினார்.மன்னன் சீவக சிந்தாமணி என்ற நூலை கற்று மதிமயங்கியபோது, “மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி தானே செல்வார்கள்” என்று “மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்ற வாக்கிற்கிணங்க மன்னனை ஆற்றுப்படுத்த அடியார் வரலாற்றை எடுத்துரைத்துத் தடுத்தாட் கொண்டார் தெய்வச்சேக்கிழார்.யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்று அவ்வரலாற்றை நூலாகப் பாடுமாறு மன்னன் வேண்ட, எல்லையில் புகழுடை தில்லையம்பலத்தில் சிவபெருமானே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரிய புராணம் பாடியருளினார். ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்து,“ஒண்கொண்ட பொதுவகத் துலகெலாம் உய்யநாறுலகெலாம் என்றதீஞ்சொல்உவந்தே டெழுத்தாணி கொண்டெழு திரண்டுகை அம்புவி யுறப்பதித்துவண்கொண்ட ஒருதாள் மடித்தூன்றி ஒருதாள்வயங்குற எடுத்தூன்றிஒண்வாய்கவிச் சுவைஒழுக் கறிவிப்ப தெனஅமுதமாட்சிமை ஒழுக்கெடுப்பவெண்கொண்ட நெற்றிநீ றிளநிலவும் ஒண்காதிருங்குழை இளங்கதிரும்விட்டெறிப்பஇள முறுவலும் தோன்றமலர் திருமுகம் எடுத்துவான் அளவுநொச்சித்திண்கொண்ட குன்றையம் பதியருள் மொழித்தேவ செங்கீரை யாடியருளேதிருத்தொண்ட நன்னாட்டு வேளாளர் குலதிலகசெங்கீரை யாடியருளே”  – என்று சேக்கிழார் மீது பிள்ளைத்தமிழ் பாடினார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தின் முதற்பாடலான ‘உலகெலாம்’ என்ற சொல்லுக்கு ஓர் இரவு முழுவதும் விளக்கம் சொன்னார் திருவருட்பிரகாச வள்ளலார் என்பது வரலாறு.தெய்வச் சேக்கிழார் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு பாடினாலும் வெறுமனே கற்பனையாக மட்டுமே அதைச் சொல்லாமல் அடியார்கள் வாழ்ந்த இடத்துக்கே நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து வரலாற்றைப் பாங்குறப்பதிவு செய்துள்ளார். ஆகவே இது தமிழ் நாட்டினுடைய வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.வரலாற்றை வெறுமையாக வறட்சியாக சொல்லாமல், பெருமையாக பக்தித்தேன் குழைத்துத் தந்துள்ளார் தெய்வச் சேக்கிழார். அதனால்தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இவரை,“பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ”என்று போற்றினார்.உமாபதி சிவாச்சாரியார் அற்புத நூல்கள் மொத்தம் ஆறு என்பதை“வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமேதெள்ளு பரிமேலழகர் செய்தவுரை – ஒள்ளியசீர்த்தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராரும் தண்டமிழின் மேலாம் தரம்”என்று பட்டியலிட்டுள்ளார்.இந்நூல்களுள் ஒன்றாக இடம் பிடித்து ஓங்கி நிற்கும் பெரியபுராணத்தை தெய்வச் சேக்கிழார், “என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிடமன்றுளார் அடியார் அவர்வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்”என்று நிறைவு செய்துள்ளார்.இது திருமுறைகள் ஓங்காரத்தின் உட்பொருளானவை என்பதை எடுத்துக்காட்ட உறுதுணையாக நிற்கிறது. முதல் திருமுறை “தோடுடைய” (த்+ஓ) என்று ‘ஓ’ வில் தொடங்குகிறது. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணமோ ‘’உலகெலாம்’’ என்று ‘ம்’ல் நிறைவடைகிறது.‘ஓ’வில் தொடங்கி ‘ம்’ல் முடிவடைபவை திருமுறைகள். அதாவது ஓம் என்ற பிரணவத்தில் அடங்கியவை திருமுறைகள் என்பது வெளிப்படுகிறது.இந்த பெரியபுராணத்தை தான் பிறந்த தொண்டை நாட்டை வைத்துத் தொடங்காமல், தனக்கு முதல் நூலாசிரியரின் எப்படி வழிகாட்டிச் சென்றிருக்கிறாரோ அந்த வழியிலேயே மரபு வழுவாமல் பெரியபுராணத்தை சமைத்து எழுத்து அறம் காத்துள்ளார் தெய்வச் சேக்கிழார்.இவ்வாறு அழகிய சொற்கோயில் கட்டிய தெய்வச் சேக்கிழார் தன் சொந்த ஊரான குன்றத்தூரில் சோழநாட்டிலுள்ள திருநாகேஸ்வரத்தைப் போன்றே கோயில் அமைக்க வேண்டும் என்று ஒரு கற்கோயிலைக் கட்டினார். இது இன்றளவும் தொண்டைநாட்டுத் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. அரசனை ஆற்றுப்படுத்த எழுந்த இப்பெரியபுராணம் நம்மையும் ஆற்றுப்படுத்தி, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டும் இலக்கியமாகத் திகழ்கிறது. இத்தகு ஞானக் களஞ்சியம் சமைத்துத் தந்த‌தெய்வச் சேக்கிழாரை,“தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர் படைத்ததொல்லைதாம் திருத்தொண்டர் தொகை யடியார் பதம்போற்றிஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்தசெல்வமலி குன்றத்தூர் சேக்கிழாரடி போற்றி” – என்று போற்றுவாம்.சிவ.சதீஸ்குமார்…

You may also like

Leave a Comment

twenty − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi