Friday, May 17, 2024
Home » அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

by kannappan
Published: Last Updated on

309. இஷ்டாய நமஹ (Ishtaaya namaha)

(திருநாமங்கள் 301 முதல் 314 வரை – ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.உச்சி வெயிலில் மனைவிக்குக் குடைபிடித்துச் செல்லும் தனுர்தாசரை ஒருநாள் ராமாநுஜர் பார்த்தார். தனுர்தாசரை அழைத்து, “ஏன் அப்பா உன் மனைவிக்கு இப்படிக் குடை பிடித்துக் கொண்டு செல்கிறாய்?” என்று கேட்டார் ராமாநுஜர். “அவளது கண் அழகைப் பாருங்கள்! அந்தக் கண்களுக்கு நான் அடிமை! அந்தக் கண்ணழகில் மயங்கியதால் தான் அவளுக்குக் குடைபிடித்துக் கொண்டு பின்னால் செல்கிறேன்!” என்று விடையளித்தார் தனுர்தாசர்.“மனைவியிடம் நிச்சயமாக அன்பு காட்ட வேண்டும். ஆனால் இவனது அன்பு கிட்டத்தட்ட வெறி போல் மாறிவிட்டது. இது நல்லதல்ல. இவன் மனைவியிடம் காட்டும் இந்த அளவுகடந்த அன்பை இறைவனிடம் காட்டினால், இறையருளுக்குப் பாத்திரம் ஆகலாமே!” என்று சிந்தித்தார் ராமாநுஜர். தனுர்தாசருக்குப் புரியும் விதத்தில் அவருக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சொல்லி அவரைத் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்.எனவே ராமாநுஜர் தனுர்தாசரைப் பார்த்து, “உன் மனைவி பெரிய கண்ணழகி என்கிறாயே! அவளது கண்களை விட அழகிய கண்களைக் காட்டினால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். “அப்படி என் மனைவியின் கண்களை விட அழகிய கண்கள் இருந்தால், இனி அந்தக் கண்களுக்கு நான் அடிமை! அந்தக் கண்களை எனக்குக் காட்டுவீர்களா?” என்று ஆசையுடன் கேட்டார் தனுர்தாசர்.“என்னுடன் வா!” என்று தனுர்தாசரை அழைத்துச் சென்ற ராமாநுஜர், திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கன் முன்னே அவரை நிறுத்தி, “இந்தக் கண்களைப் பார்!” என்றார். அடுத்த நொடியே அரங்கனின் கண்ணழகுக்கு மயங்கி, அவருக்கு அடிமையானார் தனுர்தாசர். அவர் மட்டுமின்றி, அவரது மனைவியான ஹேமாம்பாளும் அரங்கனுக்கு அடியவள் ஆனாள். தனுர்தாசரும் ஹேமாம்பாளும் முறையே பிள்ளை உறங்காவில்லி தாசர், பொன்நாச்சியார் என்ற பெயரோடு ராமாநுஜருக்குச் சீடர்களானார்கள்.அதன்பின் அரங்கனின் ஒவ்வொரு புறப்பாட்டிலும் கையில் வாளோடு பெருமாளுக்கு மெய்க்காப்பாளராக உடன்செல்லத் தொடங்கினார் பிள்ளை உறங்காவில்லி தாசர். இந்த அதிசயத்தைக் கண்ட சில அடியார்கள் ராமாநுஜரிடம், “அரங்கனின் கண்ணழகைக் காட்டியே இவரை நீங்கள் திருத்தி விட்டீர்களே! இறைவனின் கண்ணழகுக்கு அவ்வளவு சிறப்பு உண்டா?” என்று வியப்புடன் கேட்டார்கள்.அதற்கு ராமாநுஜர், “அதில் என்ன சந்தேகம்? எல்லா மனிதர்களுக்கும் அடிமனதில் இறைவன் மீது அன்பு என்பது இருந்தே தீரும். ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒரு மகன் இளம் வயதிலேயே தன் தாயைப் பிரிந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல வருடங்கள் கழித்துத் தற்செயலாகத் தன் தாயை அவன் சந்திக்கிறான். அந்தப் பெண் தனது தாய் என்பதை இவன் அறியாத போதும், இவனுக்குத் தன்னை அறியாமல் அவள் மீது ஓர் அன்பு வரும் அல்லவா? அதுபோலத் தான் இறைவனும் நமக்கெல்லாம் தாய் போன்றவன். ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து நம்மை எல்லாம் அவன் வயிற்றில் வைத்துச் சுமந்தவன் அல்லவா அவன்? ஒரு தாய் குழந்தையை வயிற்றில் சுமந்து காப்பது போல் நம் அத்தனை பேரையும் வயிற்றில் சுமந்து காத்திருக்கிறான் இறைவன்! எனவே தான் ஒருவன் இறைவனைப் பற்றி அறியாதவனாக இருந்தாலும், பக்தியே அடியோடு இல்லாதவனாக இருந்தாலும் கூட, அந்த மனிதனும் இறைவனின் திருவடிவத்தைக் காணும் போது, அவனுக்கும் தன்னை அறியாமல் ஆழ்மனதில் இருந்து இறைவனை நோக்கி அன்பு என்பது ஏற்படும்.நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட உள்ளூர இறைவனை வழிபடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் காணலாம். ஒரு நாத்திகன், “கோயிலுக்குள் வர மாட்டேன்!” என்றான். “ஏன்?” என்று கேட்டற்கு, “கோயிலுக்குள்ளே கடவுள் உள்ளார், அதனால் நான் வர மாட்டேன்!” என்றானாம். எனவே, அனைவருமே தெரிந்தோ, தெரியாமலோ, ஆழ்மனதில் இறைவனை நம்புகிறார்கள், ஏற்கிறார்கள், அவனிடம் தன்னை அறியாமலேயே அன்பு செலுத்துகிறார்கள்.இங்கே நம் பிள்ளை உறங்காவில்லி தாசருக்கு அந்த இறைவனின் கண்களை நான் நேரில் காட்டியபின் அவருக்கு இறைவன் மேல் அன்பு உண்டாகாமல் இருக்குமா? அதனால் தான் இவர் உயர்ந்த பக்தராக மாறிவிட்டார்!” என்று விளக்கினார்.‘இஷ்ட:’ என்றால் விருப்பமானவர் என்று பொருள். ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து அனைத்து உயிர்களையும் தாய் போல் வயிற்றில் வைத்துச் சுமந்தபடியால், திருமால் அனைத்து உயிர்களுக்கும் தாய் போன்றவர். அனைத்து உயிர்களும் தம் தாய் ஸ்தானத்தில் இருக்கும் அவரிடம் தங்களை அறியாமலேயே அன்பு செலுத்துகிறார்கள். இப்படி அனைத்து உயிர்களாலும் விரும்பப் படுபவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘இஷ்ட:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 309-வது திருநாமம்.“இஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்படித் திருமால் அருள்வார்.310. அவிசிஷ்டாய நமஹ (Avisishtaaya namaha)வியாசருக்கும் அவரது சீடர்களுக்கும் அடிக்கடி உபநிஷத் வாக்கியங்கள் விஷயமாகச் சுவையான உரையாடல்கள் நடப்பதுண்டு. அந்த உரையாடல்களின் மூலமாக நாம் பற்பல வேதாந்த நுட்பங்களை அறியலாம். அத்தகைய ஓர் உரையாடல் ஒருமுறை வியாசருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே நடைபெற்றது.வியாசரின் சீடரான ஜைமினி என்பவர், “குருவே! ஜீவாத்மா பரமாத்மாவின் இருப்பிடத்தைச் சென்று அடைந்து, அந்தப் பரமாத்மாவை அநுபவித்து அவருக்குத் தொண்டு செய்வதை ‘முக்தி’ என்று சொல்கிறோம். முக்தி என்பது துக்கத்தின் கலப்பே இல்லாத பரமானந்தமான நிலை என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த முக்தி நிலையில் எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே மாதிரியான ஆனந்தத்தைப் பெறுவார்களா? அல்லது ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் அவரவர் கர்மவினைக்கு ஏற்றபடி வெவ்வேறு அளவிலான ஆனந்தம் கிட்டுமா?” என்று வியாசரிடம் கேட்டார்.அதற்கு வியாசர், “முக்தி அடைந்தவன் எல்லா விதமான கர்ம வினைகளின் கட்டுகளில் இருந்தும் விடுபட்டு விடுகிறான். அவனை எப்படி அந்த வினைகள் பாதிக்கும்? முக்தி நிலையில் எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே மாதிரியான ஆனந்தத்தைத் தான் பெறுகிறார்கள்!” என்று பதில் உரைத்தார்.அப்போது பாதரி என்ற சீடர், “குருவே எனக்கு ஓர் ஐயம். ஓர் இசைக் கச்சேரியைப் பல ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இசையமைத்துப் பாடுபவர் ஒரே மாதிரியான பாடலைப் பாடினாலும், ரசிகர்களில் ஒவ்வொருவரும் பெறக் கூடிய ஆனந்தம் என்பது வெவ்வேறு அளவுகளில் தானே உள்ளது. அதுபோலத் தானே முக்தி நிலையிலும் இறைவன் ஒரே மாதிரியான ஆனந்தத்தைத் தந்தாலும் கூட, அதை அநுபவிக்கும் முக்தாத்மாக்கள் முக்தி அடைந்த ஜீவாத்மாக்கள் வெவ்வேறு அளவில் அதை அநுபவிப்பார்கள் அல்லவா? எனவே முக்தியில் பெறும் ஆனந்தத்திலும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்?” என்று கேட்டார்.அதற்கு வியாசர், “நான் ஏற்கனவே சொன்னதுபோல் முக்தி நிலையில் கர்மவினைகள் அனைத்தும் நீங்கிவிடுகின்றன. அதனால் ஜீவாத்மாவின் தர்மபூத ஞானம் எனப்படும் அறிவானது நூறு சதவிகிதம் விரிவடைந்து விடுகிறது. பூமியில் இசைக் கச்சேரி கேட்டு மகிழும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் ஆனந்தம் வருவதற்கு அவர்களது முன்வினைகள், எண்ணப் பதிவுகள் மற்றும் அவர்களது அறிவின் வளர்ச்சி காரணம் ஆகும். ஆனால் முக்தி அடைந்த நிலையில் முன்வினைகள் நீங்கப் பெற்று, தெய்வீக எண்ணத்திலே லயித்து, முழுமையான அறிவின் மலர்ச்சியோடு இறைத் தொண்டில் ஜீவாத்மாக்கள் ஈடுபடுவதால், அனைவருமே ஒரே மாதிரியான ஆனந்தத்தை முழுமையாகப் பெறுகிறார்கள்.மேலும், இறைவன் ஜீவாத்மாக்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வும் பார்ப்பதில்லை. அனைவருக்கும் சமமான அளவில் தான் தனது அருளைச் சுரக்கிறார். உலகில் காணும் ஏற்றத்தாழ்வுகளுக்கு அவரவரின் முன்வினைகள் காரணமே ஒழிய இறைவன் காரணம் அல்லன். கடுந்தவம் புரிந்து முக்தி பெற்ற மாபெரும் முனிவர்களும், பிரகலாதன், கஜேந்திரன் போன்ற பக்தர்களும் முக்தியில் என்ன ஆனந்தத்தைப் பெறுவார்களோ, அதே ஆனந்தத்தை ஒரு சாதாரண மனிதன் முக்தியடைந்தால் அவனுக்கும் இறைவன் தருகிறான். ஆண்-பெண், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், கற்றவன்-கல்லாதவன், பணக்காரன்-ஏழை போன்ற எந்த வேறுபாடும் இறைவனுக்கு இல்லை.இதை நன்கு விளக்கவே ஆலிலைக் கண்ணனாக இறைவன் அவதரித்தான். ஊழிக் காலத்தில் வந்த வெள்ளத்தில் இருந்து உயிர்களைக் காப்பதற்காக அனைத்து உலகங்களையும் உயிர்களையும் உண்டு தனது வயிற்றில் அவன் வைத்துக் காப்பாற்றினானே! அப்போது ஆண்-பெண், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், கற்றவன்-கல்லாதவன், பணக்காரன்-ஏழை, மனிதன்-மிருகம் என வேறுபாடா பார்த்தான்? அத்தனை உயிர்களையும் தன் குழந்தைகளாக எண்ணிக் காத்தான் அல்லவா?எனவே ஏற்றத்தாழ்வு பாராதவன் இறைவன். முக்தி அடைந்த அனைவருக்குமே ஏற்றத்தாழ்வு இல்லாமல் முழுமையான பரமானந்தத்தைத் தருபவன் இறைவன்!” என்று விளக்கினார்.‘விசிஷ்ட:’ என்றால் (இவ்விடத்தில்) வேறுபாடு உள்ளவர் என்று பொருள். ‘அவிசிஷ்ட:’ என்றால் வேறுபாடு பாராமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் என்று பொருள். ஆலிலைக் கண்ணனாக அவதரித்த வேளையில், எந்த வேறுபாடும் பாராமல் அனைத்து உயிர்களையும் சமமாக எண்ணித் தன் வயிற்றில் வைத்துக் காத்தபடியால், திருமால் ‘அவிசிஷ்ட:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 310-வது திருநாமம்.“அவிசிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைவரையும், அனைத்தையும் சமமாகப் பார்க்கக் கூடிய பண்பினைத் திருமால் அருள்வார்.311. சிஷ்டேஷ்டாய நமஹ (Shishteshtaaya namaha)ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள் திருமலையப்பனிடம் சென்று, “மலையப்பா! உனது கோனேரியில் வாழும் கொக்காகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்குத் தா! என்றென்றும் இந்தத் திருமலையிலேயே வசிக்கும் பாக்கியம் தான் அடியேனுக்கு வேண்டும்!” என்று வேண்டினார். மலையப்பனோ, “ஆழ்வீர்! நீங்கள் கேட்ட வரத்தில் ஒரு சிக்கல் உள்ளது. கொக்காக நீங்கள் கோனேரிக் கரையில் பிறந்தால், இறக்கை இருப்பதாலே பறந்து வேறிடம் செல்ல வாய்ப்பு உள்ளது அல்லவா? அப்புறம் எப்படி எப்போதும் மலையிலேயே இருப்பீர்கள்?” என்று கேட்டான்.“அப்படியானால், உன் கோனேரியில் மீனாக நான் பிறக்கும்படி நீ அருள்புரிய வேண்டும்! மீனால் கோனேரியை விட்டு வெளியே செல்லவே முடியாதே!” என்றார் குலசேகரப் பெருமாள். ஆனால் மலையப்பனோ, “குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டால் மீனால் வசிக்க முடியாமல் போய்விடுமே!” என்று சொன்னான்.உடனே குலசேகரப் பெருமாள், “உன் சந்நதியில் பொன்வட்டில் பிடிக்கும் பணியாளாக இருந்து, நீ உமிழும் போதெல்லாம் உன் திருவாய் அமுதை ஏந்துபவனாக என்னை ஆக்கி விடு!” என்று வேண்டினார். மலையப்பனோ, “இல்லை ஆழ்வீர்! மனித மனம் எந்நேரமும் மாறிக் கொண்டே இருக்கும்! ஒருவேளை அந்தப் பொன் வட்டிலைத் திருட வேண்டும் என்ற எண்ணம் திடீரென உங்களுக்குத் தோன்றி விட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான்.குலசேகரப் பெருமாள், “அப்படியானால் உன் மலையில் ஒரு செண்பக மரமாக நான் நின்று விடுகிறேன்!” என்றார். மலையப்பன், “யாரேனும் மரத்தை வெட்டிச் சென்று விட்டால் என்ன செய்வது?” என்றான். குலசேகரர், “அப்படியாயின் உன் மலையில் ஒரு புதராக நான் நிற்கிறேன். யாருக்கும் பயன்படாத புதரை யாரும் வெட்டிச் செல்ல மாட்டார்கள்!” என்றார். மலையப்பன், “இல்லை! அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மலையைத் தூய்மைப் படுத்தும் போது, புதர்களை வெட்டி விடுவார்களே!” என்றான்.சற்றே யோசித்த குலசேகரர், “சரி! உன் மலையில் ஒரு பாறையாக இருந்து விடுகிறேனே!” என்றார். மலையப்பனோ, “வேறு ஊர்களில் கோயில் கட்ட இங்கிருந்து பாறைகளைப் பெயர்த்துச் செல்பவர்கள் உங்களையும் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான். “அப்படியானால் உன் மலையில் ஒரு காட்டாறாகப் பாயும் பாக்கியத்தையாவது எனக்கு அருளலாமே!” என்று கேட்டார் குலசேகரர். மலையப்பன், “கோடைக் காலத்தில் காட்டாறு வற்றி விடுமே!” என்றான்.மீண்டும் யோசித்த குலசேகரப் பெருமாள், “இறைவா! உன் மலைக்கு அடியார்கள் நடந்து வரும் பாதையாக நான் ஆகிவிடட்டுமா?” என்று கேட்டார். மலையப்பன், “இன்று பெருந்திரளில் அடியார்கள் நடந்து வருவதைக் கண்டு அவர்களது பாத தூளி உங்கள்மேல் பட வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் பாதையாக ஆக விரும்புகிறீர்கள்! ஆனால் எதிர்காலத்தில் இங்கே மக்கள் பல்வேறு வாகனங்களில் தான் வருவார்கள். எனவே பாதையாக இருப்பதில் பெரிய பயன் உங்களுக்கு இருக்காது!” என்றான்.முடிவாக, “சரி இறைவா! உன் சந்நதி வாயிலில் உள்ள படியாக நான் ஆகி எப்போதும் உனது பவளவாயைக் கண்டு ரசித்த படி இருந்து விடுகிறேன். அல்லது, இந்த மலையில் நான் எதுவாக இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அந்தப் பொருளாகவே இந்த மலையில் நான் இருந்து விடுகிறேன்!” என்றார் குலசேகரப் பெருமாள்.அப்போது சிரித்த மலையப்பன், “ஆழ்வீர்! பொதுவாக என்னிடம் வருபவர் எல்லோரும் பொன்னும் பொருளும் வேண்டும் என்று தான் கேட்பார்கள். அத்தகைய ஆசை உங்களுக்கு உள்ளதா என்று சோதிக்கவே நீங்கள் கோரிய ஒவ்வொரு வரத்துக்கும் நான் மறுப்புரை சொல்லி வந்தேன். உங்களுக்குப் பொன், பொருள் போன்றவற்றில் விருப்பமே இல்லையா?” என்று கேட்டான்.அதற்கு ஆழ்வார், “இறைவா! அன்று ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக நீ வந்து அனைத்து உலகங்களையும் உண்டாயே! அப்போது நீ ஒருவன் தான் நிலைத்து நின்றாய்! உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் பெயர், உருவம் அனைத்தையும் இழந்து உன் வயிற்றுக்குள்ளே சென்று விட்டன! அவை எல்லாம் நீங்கும் செல்வம்! நீ மட்டும் தான் நீங்காத செல்வம்! என்றும் நிலைத்திருந்து, எல்லாரையும் தாங்குபவனான நீ தான் எனக்குச் செல்வம்! மற்றவை எதையும் நான் செல்வமாக எண்ணவில்லை!” என்றார்.அவரது கூற்றுக்கு மகிழ்ந்த திருமலையப்பன், “உங்கள் விருப்பப்படி எனக்கு முன்னிருக்கும் ‘படி’யாக நீங்களே இருப்பீராக!” என்று வரம் தந்தான். அதனால் தான் இன்றளவும் திருமலையப்பன் முன்னால் உள்ள படிக்குக் ‘குலசேகரன்படி’ என்றே பெயர் ஏற்பட்டு விட்டது.குலசேகரப் பெருமாள், மார்க்கண்டேயர் போன்ற பெரியோர்களுக்கு ‘சிஷ்டர்கள்’ என்று பெயர். அந்த சிஷ்டர்கள் உலகியல் செல்வங்களை விரும்பாமல் இறைவனையே தங்களது செல்வமாக எண்ணி அவனையே விரும்புவார்கள். ‘இஷ்ட:’ என்றால் விரும்பப் படுபவன்என்று பொருள். மகான்களால் (சிஷ்ட:) விரும்பப் படுபவராகத் (இஷ்ட:) திருமால் திகழ்வதால், அவர் ‘சிஷ்டேஷ்ட:’ (சிஷ்ட: + இஷ்ட:) என்றழைக்கப்படுகிறார். ‘சிஷ்டேஷ்ட:’ என்றால் மகான்களால் விரும்பப்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 311-வது திருநாமம்.“சிஷ்டேஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலிடத்தில் சிறந்த பக்தி உண்டாகி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும்.312. சிகண்டினே நமஹ (Shikhandiney namaha)வேத வேதாந்தங்களில் கரை கண்ட மகானான வேதாந்த தேசிகனிடம் வாதம் செய்ய வந்த ஒரு பண்டிதர், “நானே கடவுள்!” என்று கர்வத்துடன் சொல்லி வந்தார். இறைவன் எவ்வளவு உயர்ந்தவன், நாம் எவ்வளவு தாழ்ந்தவர் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணிய வேதாந்த தேசிகன், அந்தப் பண்டிதருக்கு ஒரு கதை சொன்னார்:பௌண்ட்ரகம் என்ற தேசத்தை ஆண்டு வந்த மன்னன், பிறர் பாடும் முகத்துதிகளை நம்பி, அவற்றில் மயங்கி, தன்னையே இறைவனாக எண்ணத் தொடங்கினான். கண்ணனின் திருப்பெயரான வாசுதேவன் என்பதைத் தனக்குச் சூட்டிக் கொண்டான். பௌண்ட்ரக வாசுதேவன் என்று அவன் அழைக்கப்படத் தொடங்கினான்.இவற்றோடு நில்லாமல், கண்ணனைப் போலவே சங்கு சக்கரங்கள் முதலிய ஆயுதங்களைத் தயாரித்துத் தன் தோள்களில் ஒட்ட வைத்துக் கொண்டான். மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவை உண்டு பண்ணிக் கொண்டான். வைஜயந்தி மாலையைக் கழுத்தில் அணிந்தான். ஆதிசேஷன் வடிவில் படுக்கையை உருவாக்கினான். கருடனின் வடிவில் தனது தேரை வடித்தான். தனது மந்திரிகளுக்கு எல்லாம் இந்திரன், சந்திரன் உள்ளிட்ட தேவர்களின் பெயர்களைச் சூட்டி, தன்னைத் தேவாதி தேவனான வாசுதேவன் என்று சொல்லிக் கொண்டான்.இவற்றோடு நில்லாமல், துவாரகையை ஆண்டு வந்த கண்ணபிரானுக்கு ஒரு கடிதம் எழுதினான். “உண்மையான வாசுதேவன் நான் இருக்க, போலியான நீ என்னைப் போல் சங்கு சக்கரங்கள், ஸ்ரீவத்சம், வைஜயந்தி மாலை, கருட வாகனம் உள்ளிட்டவற்றைக் கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டேன். இது முறையல்ல! எனது உடைமைகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு என்னிடம் நீ சரணடைய வேண்டும்!” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.அதற்குப் பதில் கடிதம் எழுதிய கண்ணன், “இப்போதே உன் தேசத்துக்கு வந்து சக்கரத்தை உன்னிடத்தில் விடுகிறேன்!” என்று தெரிவித்தான். (சக்கரத்தை உன்னிடம் தருகிறேன் என்றும், சக்கராயுதத்தை உன்மேல் ஏவி உன்னை வதைக்கிறேன் என்றும் இருவிதமாக இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம்). கருட வாகனத்தில் பௌண்ட்ரக தேசத்துக்கு விரைந்த கண்ணன், பௌண்ட்ரக வாசுதேவனுடன் போர் புரிந்தான்.“நீ கேட்ட சக்கரம், கதை உள்ளிட்டவற்றை உன்னிடம் விடுகிறேன் பார்!” என்று சொன்ன கண்ணன், அந்த ஆயுதங்களைப் பௌண்ட்ரக வாசுதேவன் மீது ஏவவே, சக்கரம் அவனைப் பிளந்தது, கதை அவனைக் கீழே தள்ளியது. கருடன் அவன் கொடியைச் சாய்த்தார். போலி தோற்றது. உண்மை வென்றது.இக்கதையை நினைவு கூர்ந்த தேசிகன், “பௌண்ட்ரக வாசுதேவனைப் போல் நானே கடவுள் என்று சொல்லிக் கொண்டால், அழிவு தான் உண்டாகும். இறைவன் மிகப் பெரியவன், ஜீவாத்மாக்களான நாம் இறைவனாக ஆகவே முடியாது! இறைவனை எதிர்த்து நின்று யாராலும் வெல்லவும் முடியாது! வெற்றித் திருமகன் என்றும் இறைவன் ஒருவனே!” என்று அந்தப் பண்டிதருக்கு விளக்கி, ஒரு ஸ்லோகமும் சொன்னார்:வேதா: புத்தாகமா: ச ஸ்வயம் அபி ஹி ம்ருஷா மானதா ச ஏவம் ஏஷாம்போத்தா புத்தி: பலம் ச ஸ்திர ததிதரதாதி அந்தராலம் ச புத்தே:ஆத: த்ரைவித்ய டிம்பான் க்ரஸிதும் உபநிஷத் வார பாணோபகூடை:ப்ராய: ப்ரச்சாதிதா ஸா படுபி: அஸுரதா பௌண்ட்ரகாத்வைத நிஷ்டை:மேலும், “ஊழிக் காலத்தில் ஆல மர இலையில் கண்ணனாக இறைவன் தோன்றினான் அல்லவா? மிகப்பெரிய மலைகளைக் கூடச் சாய்க்கவல்ல கோரமான அந்த ஊழி வெள்ளத்தால் கண்ணன் துயின்ற அந்த ஆலிலையை ஏதாவது செய்ய முடிந்ததா? ஏனெனில், யாராலும் வெல்ல முடியாத மேன்மையோடு கூடியவன் இறைவன். அந்த மேன்மைக்கு அடையாளமான கிரீடத்தை அணிந்து, தலைவன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி படைத்தவனும் அந்த இறைவனே ஆவான். நாம் கிரீடத்தை அணிவதோ, தலைவன் என்று சொல்லிக் கொள்வதோ பொருந்தாத ஒன்றாகும்!” என்று சொல்லி, அந்தப் பண்டிதருக்கு உண்மையைப் புரிய வைத்தார் தேசிகன்.‘சிகண்ட’ என்றால் தலையில் அணிந்திருக்கும் ஆபரணம் அல்லது கிரீடம் என்று பொருள். ‘சிகண்டீ’ என்றால் தலையில் ஆபரணம் அணிந்தவர் என்று பொருள். உலகில் பொதுவாக வெற்றி பெற்றவரைக் கிரீடம் அணிந்தவராகவோ, தலையில் ஆபரணம் அணிந்தவராகவோ குறிப்பிடுவது வழக்கம். ‘வெற்றி வாகை சூடினார்’ என்று தமிழிலும், ‘A feather in his cap’ என்று ஆங்கிலத்திலும் கிரீடம் அணிவதாக வெற்றியை உருவகப் படுத்துவார்கள். அந்த வகையில், யாராலும் வெல்ல முடியாதவராக மேன்மையோடு இருத்தல் என்ற தன்மையையே தனக்குக் கிரீடமாகக் கொண்டிருக்கிறார் திருமால். அதனால் தான் அவருக்கு ‘சிகண்டீ’ – வெல்ல முடியாத மேன்மையையே தலைக்கு ஆபரணமாக அணிந்தவர் என்று திருநாமம். ‘சிகண்டீ’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 312-வது திருநாமம்.“சிகண்டினே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேன்மேலும் வெற்றி பெற்று வெற்றி வாகை சூடும்படித் திருமால் அருள்புரிவார்.(தொடர்ந்து நாமம் சொல்வோம்)திருக்குடந்தைடாக்டர்: உ.வே.வெங்கடேஷ்…

You may also like

Leave a Comment

fourteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi