Thursday, May 9, 2024
Home » இளம் வயதில் இன்கம்டேக்ஸ் கட்டும் இரட்டையர்கள்!

இளம் வயதில் இன்கம்டேக்ஸ் கட்டும் இரட்டையர்கள்!

by Porselvi

சமூக வலைதளங்களில் கதம்பமாக பலதரப்பட்ட விஷயங்கள் ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் நமக்குப் பல நல்ல விஷயங்களும் பகிரப்படுகின்றன. அப்படி ஒரு செய்திதான் கவனத்தை மிகவும் ஈர்த்தது. அது, இளம் வயதில் இன்கம்டேக்ஸ் கட்டும் இரட்டையர்கள் என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் ஹர்பித் பாண்டியன், ஹர்பிதா பாண்டியன் இரட்டையர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேட்டியளித்தது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஹர்பித் பாண்டியன், ஹர்பிதா பாண்டியன் இரட்டையர்களான இவர்கள் ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் ட்வின்ஸ்’என்று அழைக்கப்படுகின்றனர். 2015ம் ஆண்டு இவர்களது ஸ்பெல்லிங் திறன், தன்னம்பிக்கை, அணுகுமுறை ஆகியவை உலகளவில் கவனம் பெற்றது. இவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் டிவி சானல் 10ல் ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இவர்களின் அசாத்திய திறன் கண்டு வியந்துபோனார்கள். 50,000 சொற்கள் என்கிற அளவில் உள்ள இவர்களது சொல்வளம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போதிருந்து இந்த இரட்டையர்கள் ஆஸ்திரேலியாவின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டனர்.
இந்த இரட்டையர்கள் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்வதுடன் இவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. இவர்கள்‘கிளாஸ்மைண்ட்ஸ்’(Classminds) என்ற கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர். இது மாணவர்களுக்கான ஒரு உலகளாவிய தளம். இந்தத் தளம் மாணவர்களின் திறனை மேம்படுத்தி வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர்களுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களின் வெற்றிக்கான காரணம் குறித்தும் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் கூறினர்.

‘‘நாங்கள் இரட்டையர்கள். ஹர்பித் பாண்டியன், ஹர்பிதா பாண்டியன். நாங்கள் பிறந்தது வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில்தான். ஆனால் பல இடங்களுக்கு போகும்போது எங்களை பார்ப்பவர்கள் ‘நீங்கள் அமெரிக்கரா, ஆஸ்திரேலியரா?’ என்று கேட்பார்கள். எங்களுக்கு 2 கம்பெனிகள் இருக்கிறது.’’ என்றார் ஹர்பித். இதை தொடர்ந்து ஹர்பிதா கூறும்போது, ‘‘நாங்கள் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்பதற்காக எதையும் தொடங்கவில்லை. இது எங்கள் பொழுதுபோக்கான விஷயத்திலும், கதை கேட்கும் ஆர்வத்திலும் உருவானது. எங்களுக்கு இரண்டு வயதிருக்கையில் ஸ்பெல்லிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர் ஒவ்வொரு இரவும் கதைகள் படித்துக் காட்டுவார்கள். கதைகளில் வரும் சொற்களை மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கேட்கத் தொடங்கினோம். அப்போதிருந்து நாங்கள் கேள்விப்படும் அனைத்து வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கையும் கற்றுக்கொண்டோம். இரவு உணவிற்கு பின்னர் வார்த்தை விளையாட்டு விளையாடுவோம். எனவே எங்கள் கற்றல் முறை மகிழ்ச்சியான அணுகுமுறையுடன் இருந்தது,” என்றார் ஹர்பிதா. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இரட்டையர்களான இவர்கள் 50,000க்கும் அதிகமான சொற்களைத் தொகுத்து வைத்தனர். இதுவே தங்களைக் காட்டிலும் பெரியவர்களான 14 வயது போட்டியாளர்களுடன் கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ டிவி போட்டியில் சிறப்பாகப் போட்டியிட உதவியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹர்பிதாவும் ஹர்பித்தும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் உரைகளை வழங்கத் தொடங்கினார்கள். ஸ்பெல்லிங் பீ வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மிச்சிகன் உள்ளிட்ட முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளில் பங்கேற்றனர். தமிழக அரசின் கல்வி டிவி சானலான ‘கல்வி டிவி-க்காக ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளும் வழங்குகின்றனர். ‘மாணவர் கடமை’ என்ற டாக்டர் அப்துல் கலாமின் விஷன் 2020 குழுவின் மாணவர் இதழிலும் எழுதினர். சென்னை சிபிஎஸ் குளோபல் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களுக்கு இசை, நடனம், கராத்தே, சிலம்பம் என பல்வேறு பொழுதுபோக்குகளும் உண்டு.

’’நாங்கள் இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ளோம். எட்டு வயதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறோம். மாணவர்களுடன் கலந்துரையாடும்போது அவர்கள் கற்றலில் அதிக ஆர்வம் காட்டுவதைத் தெரிந்துகொண்டோம். இவர்களை ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தினால் ஒவ்வொரு மாணவரும் சிறந்த தலைவர்களாகச் சாதனை படைக்கமுடியும் என்பதை உணர்ந்தோம். கிளாஸ்மைண்ட்ஸ் ஸ்பெல்பீ’ என்பது இதுவரை இல்லாத வகையில் புதுமையாக வழங்கப்படும் ஸ்பெல்பீ போட்டி. ‘கிளாஸ்மைண்ட்ஸ் ஷைன்’என்பது மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த உதவும் தளம். ‘கிளாஸ்மைண்ட்ஸ் ஸ்காலர்’என்பது மாணவர்கள் பாடங்களை படிக்கும் முறையை மாற்றியமைக்கும் ’’என்று ஹர்பித் விவரித்தார்.இந்த இரட்டையர்கள் பரிசாக பெற்ற தொகையைக் கொண்டும் பெற்றோரிடம் இருந்து பெற்ற தொகையைக் கொண்டும் சுயநிதியில் கிளாஸ்மைண்ட்ஸ் தொடங்கியுள்ளனர். Classminds EdTech Solutions Pvt Ltd என்கிற பெயரில் தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. Classminds Student Talks என்பது மாணவர்களின் பேச்சு, ஒத்துழைத்தல் மற்றும் பிறரை ஊக்குவிக்கும் திறனை வெளிப்படுத்தும் ஒரு மாணவர் தலைமையிலான தொடர் நிகழ்வுகள் ஆகும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான உலகளாவிய தளமாகவும், எதிர்கால வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறன் மற்றும் கதைசொல்லல் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது ஒரு இடமாகும்.

இந்நிறுவனத்தின் பிரத்யேக ஸ்பெல்பீ கற்றல் வீடியோக்களை வழங்குவதன் மூலமாகவும் மற்ற உள்ளடக்கங்கள் மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறது. இந்த இரட்டையர்கள் வரி செலுத்தும் மிகவும் இளம் வயதினர்கள் ஆவர். ஏற்கெனவே பான் கார்டு எண் பெற்றுள்ளனர்.இவர்கள் நியூரோ சர்ஜனாக ஹர்பித்தும், கார்டியாக் சர்ஜனாக ஹர்பிதாவும் ஆகவேண்டும் என்பதை எதிர்காலத் திட்டமாக கொண்டுள்ளதாகவும், கூகுள் போன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கியமான குறிக்கோள் என்று கூறி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். நிச்சயம் இந்த இரட்டையர்கள் மாணவ சமூகத்துக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பார்கள் என்பதில்
மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

-எம்.என்.மணி

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi