துரைப்பாக்கம்: சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 480 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி, தலைமை காவலர் கோடீஸ்வரன் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 2 பெண்கள் மூட்டைகளுடன் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 2 பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் மேட்டுத்தாங்கல் நரசிம்மன் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (37) மற்றும் சுமதி (47) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 480 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு ரயில் மூலம் இந்த ரேஷன் அரிசியை கொண்டு செல்ல பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பெண்களையும் பட்டரவாக்கத்தில் உள்ள ரேஷன் அரிசி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் குடிமைப் பொருள் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.