புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி தன்னை கைது செய்ததை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்தமனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, ‘‘மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இதுபோன்ற கேள்விகளே எழுந்திருக்காது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹவாலா பண பரிவர்தனை செய்பவர்களுடன் நடந்த குறுஞ்செய்தி உரையாடல் எங்களிடம் கிடைத்துள்ளது. அதில் சில ஹவாலா பண பரிவர்த்தனை செய்பவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இந்த விவகாரத்தில் நம்புவதற்கான எந்தவித காரணங்களும் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக நம்புவதற்கான காரணங்களுக்கும், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்றார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ”மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டுமில்லாமல், இந்த வழக்கில் தொடர்புடைய கவிதா, புஜ்ஜி பாபு உட்பட அனைவரின் ஆவணங்களையும் பாருங்கள் அனைத்தும் பூஜ்ஜியமாக தான் இருக்கும். ஒன்றில் கூட கைது நடவடிக்கைக்கான போதிய காரணங்களோ அல்லது ஆதரங்களோ இருக்காது. அதேபோன்று ரூ.100 கோடி ஊழலை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கான ஆதாரங்களை வாதங்கள் நிறைவடையும் தற்போதைய வேலையில் கூட தெரிவிக்கவில்லை. இதுபோன்ற பொய்யான கைது நடவடிக்கை என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும் நடந்துள்ளது. குறிப்பாக அமலாக்கத்துறை அவர்களுக்கான தனி அதிகாரத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பண மோசடி தடுப்பு சட்டம் என்பதை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி வருகிறது. ” என்று தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
* முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நேற்று 8வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் ‘‘கிங்பின்” என்றும், மேலும் இந்த திட்டத்தின் சதிகாரராகவும், மூளையாகவும் செயல்பட்டுள்ளார். எனவே இதில் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் ஜாமீன் உட்பட எந்த நிவாரணமும் வழங்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இதுவரை அமலாக்கத்துறை விசாரணை மட்டுமே நடத்தி வந்த நிலையில் அவரை குற்றவாளி பட்டியலில் இணைத்து குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.