ஒருவழியாக 27 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது. நாரிசக்தி வந்தன் ஆதினியம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருப்பது பிரதமர் மோடிக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். காலங்காலமாக இந்த மசோதா ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இப்போது முதல்முறையாக எந்தவித இழுபறியும் இல்லாமல் முழுமனதாக நிறைவேறி இருக்கிறது.
மக்களவையில் மசோதாவை ஆதரித்து 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவாகி இருந்தன. மாநிலங்களவையில் மசோதாவுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. 214 வாக்குகள் ஆதரவாக பதிவாகின. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பெண்களை தெய்வமாக மதிக்கும் பாரம்பரியம் மிக்க நமது பாரதத்தில் ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சிந்தித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான். கடந்த 1987ல் அப்போதைய அமைச்சர் மார்க்ரெட் ஆல்வா தலைமையில் 14 பேர் கொண்ட குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது நிறைவேற்றப்படவில்லை.
1992ல் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் அரசு 73 மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த பிரிவு மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது. இன்று நாடு முழுவதும் 15 லட்சம் ெபண் உள்ளாட்சி தலைவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு விதை போட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான்.
அதை தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா முதன்முதலில் எச்.டி.தேவகவுடா தலைமையிலான அரசு 1996ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் 11வது மக்களவை கலைக்கப்பட்டவுடன் இந்த மசோதா காலாவதியானது.
2 ஆண்டுகள் கழித்து வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 1998ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. இந்த முறையும் மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன்பிறகு மீண்டும், மீண்டும் 1999, 2002, 2003ம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு மகளிர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றது. ஆனால் முடியவில்லை.
வாஜ்பாயை தொடர்ந்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008 மே 6ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதா 2008 மே 9ல் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை 2009 டிசம்பர் 17ல் கிடைத்ததை தொடர்ந்து 2010 பிப்ரவரியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மன்மோகன்சிங் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2010 மார்ச்9ல் 186-1 ஓட்டு வித்தியாசத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால் மக்களவையில் நிறைவேறவில்லை. அதை தொடர்ந்து இப்போது தான் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மூலம் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறி இருக்கிறது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தாலும் உடனே சட்டமாக வாய்ப்பு இல்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் அனைத்துக்கட்சி எம்பிக்களும் தெரிவித்தும் மோடி அரசு அசைந்து கொடுக்க மறுத்து விட்டது. ஏனெனில் இந்த மசோதா அமல்படுத்த வேண்டும் என்றால் 3 சிக்கல்களை கடந்தாக வேண்டும்.
அவை:
1. 2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தொகுதி மறுவரையறை பணிகளை செய்ய வேண்டும்.
3. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் எம்பி தொகுதிகள் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படும். அதன் அடிப்படையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
இந்த 3 சிக்கல்களையும் கடந்தால் தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக 2021ல் நடத்தப்படவில்லை. அதன்பிறகு முக்கிய நாடுகள் அனைத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டாலும் 2023ம் ஆண்டு முடிய உள்ள தருவாயில் கூட இந்தியாவில் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இனிமேல் மக்களவை தேர்தல் முடிந்த பிறகுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். அது 2031ம் ஆண்டாக கூட இருக்கலாம். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாது. எனவே தான் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற விதியை நீக்கி உடனே மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் அதை மோடி அரசு நிராகரித்து விட்டது.
மக்களவையில் தற்போது 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இதே நிலையில் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 181 ஆக உயரும். ஆனால் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு தான் என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. அடுத்த ஆண்டு எம்பி தேர்தல் முடிந்த பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2029ம் ஆண்டுக்கு பின்னர் மகளிர் இடஒதுக்கீடு உறுதியாக அமல்படுத்தப்படும் என்று மக்களவையில் வாக்குறுதி அளித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரது கருத்துப்படி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால் 2031ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 2034ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தான் மகளிர் இடஒதுக்கீடு அமலாகும். இதுதான் எதிர்க்கட்சிகளின் அச்சம்.
இதைத்தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இடஒதுக்கீடு இல்லை என்றால் அது முழுமை பெறாது. மேலும் இந்த மசோதாவை அமல்படுத்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் தேவை என்ற எண்ணம் எனக்கு விசித்திரமாக உள்ளது. இது மசோதாவை ஏழு, எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு தள்ளிப் போட வழிவகுக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமித்ஷா, ‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை முன்வைப்பதற்கான ஐந்தாவது முயற்சி இதுவாகும்.
இந்த நாடாளுமன்றத்தால் பெண்கள் நான்கு முறை ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே இந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். குறைகள் இருப்பின் பிற்காலத்தில் சரி செய்ய முடியும்’ என்றார். இருப்பினும் எந்தவித தாமதமும் இல்லாமல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத பிரதிநிதித்துவத்தை மகளிர் பெறுவதற்கு உடனே வழிவகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.
வங்கதேசத்தில் 150 பெண் எம்பிக்கள்
வங்கதேசத்தில் பெண் எம்பிக்களுக்கு 21 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் வங்கதேச நாடாளுமன்றத்தில் 300 பெண் எம்பிக்களில் தற்போது 50 சதவீதம் பேர், அதாவது 150 பேர் பெண் எம்பிக்கள்.
புதிய நாடாளுமன்றத்திற்கு இதுவரை பெண் ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதத்தில் அதிமுக்கியத்துவம் பெற்ற கேள்வி புதிய நாடாளுமன்றத்திற்கு இதுவரை பெண் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பது தான். மே மாதம் நடந்த திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. புதிய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் தொடங்கிய போதும் அழைக்கவில்லை. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து பேசினார்கள். ஏனெனில் இந்த விழாவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை வகித்தார். ஆனால் திரவுபதி முர்மு வரவில்லை. ராகுல்பேசும் போது,’ நாடாளுமன்றம் இடமாற்ற நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதியைப் பார்க்க நான் விரும்பினேன். இந்திய ஜனாதிபதி ஒரு பெண், அவர் பழங்குடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாற்றும் போது அவரைப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்’ என்றார்.
நமது நாட்டில் சாதித்த பெண் தலைவர்கள்
* இந்திரா காந்தி இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு பெண் பிரதமர்.
* பிரதீபா பாட்டில், திரவுபதி முர்மு என்று 2 பேர் ஜனாதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.
* இந்தியா முழுவதும் 16 பெண்கள் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
* ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுவை உள்பட 17 மாநிலங்களில் இன்னும் ஒரு பெண் கூட முதல்வராகவில்லை.
* டெல்லி, உபி, தமிழ்நாட்டில் மட்டும் 2 பெண்கள் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
* டெல்லியில் ஷீலா தீட்சித், தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மேற்குவங்கத்தில் மம்தா ஆகியோர் மிக நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
* காங்கிரஸ் சார்பில் 5 பேரும், பா.ஜ சார்பில் 4 பேரும் பெண் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
மகளிருக்கு அதிகாரம் அளித்த தமிழ்நாடு
* தமிழ்நாட்டில் நீதிக் கட்சி 1921ம் ஆண்டு மே 10ம் தேதி பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் தீர்மானத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக நிறைவேற்றியது.
* 1927ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் எம்எல்ஏவாக தமிழ்நாட்டில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
* 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
* நாட்டிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதும் தமிழ்நாட்டில்தான்.
* தமிழ்நாடு,மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்ட விதிகளை உருவாக்கியுள்ளன.
நமது நாட்டில் சாதித்த பெண் தலைவர்கள்
* இந்திரா காந்தி இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு பெண் பிரதமர்.
* பிரதீபா பாட்டில், திரவுபதி முர்மு என்று 2 பேர் ஜனாதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.
* இந்தியா முழுவதும் 16 பெண்கள் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
* ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுவை உள்பட 17 மாநிலங்களில் இன்னும் ஒரு பெண் கூட முதல்வராகவில்லை.
* டெல்லி, உபி, தமிழ்நாட்டில் மட்டும் 2 பெண்கள் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
* டெல்லியில் ஷீலா தீட்சித், தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மேற்குவங்கத்தில் மம்தா ஆகியோர் மிக நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
* காங்கிரஸ் சார்பில் 5 பேரும், பா.ஜ சார்பில் 4 பேரும் பெண் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
ஐநா பாராட்டு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சரியான நேரத்தில் இந்தியா செயல்படுத்தி உள்ளது என்று ஐநா பெண்கள் அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது. உலகெங்கிலும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கிய 64 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இதுபோன்ற இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதன் மூலம், உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் 50 சதவீத பிரதிநிதித்துவத்தை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்து உள்ளது.
தற்போதைய பெண் எம்பிக்கள்
* 17வது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் சுமார் 15% பேர் பெண்கள்.
* பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 5 சதவீதம் பேர் பெண்கள்
* மாநில சட்டப் பேரவைகளில் மொத்த உறுப்பினர்களில் பெண்கள் சராசரியாக 9% மட்டுமே உள்ளனர்.
* மாநிலங்களவை எம்பிக்களில் 13 சதவீதம் பேர் பெண்கள்.
* பிஜுஜனதாதளம் கட்சி எம்பிக்களில் 42 சதவீதமும், திரிணாமுல் காங்கிரசில் 39 சதவீதமும்,பாஜவுக்கு 14 சதவீத பெண் எம்பிக்களும், காங்கிரசுக்கு 12 சதவீத பெண்களும் எம்பிக்களாக உள்ளனர்.
* 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் அதிக விகிதத்தில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.
வெளிநாடுகளில் பெண்கள்
இடஒதுக்கீடு அமல்படுத்தும் முறை
ருவாண்டா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட 30 நாடுகளில் பெண்களுக்கு எம்பி சீட் வழங்குவது குறித்து இடஒதுக்கீடு சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வேட்பாளர்கள் தேர்வில் குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் 20 சதவீத பெண்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு சராசரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனாவில் அந்த சதவீதம் 25 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தான் மிகவும் குறைவு.
நாடு முழுவதும் இதுவரை
16 பெண் முதல்வர்கள் தான்
சுதந்திரம் பெற்ற பிறகு நமது நாட்டில் உள்ள மாநிலங்களில் இதுவரை 16 பெண்கள் தான் முதல்வராக பதவி வகித்துள்ளனர். அவர்கள் பட்டியல் வருமாறு:
* இந்தியாவிலேயே முதன்முறையாக உபியில் தான் 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை கிருபளானி முதல்வரானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் 3 அண்டு 162 நாள் முதல்வராக இருந்தார்.
* ஒடிசாவில் காங்கிரஸ் சார்பில் 1972ம் ஆண்டு ஜூன் 14 முதல் 1976ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வரை நந்தினி சத்பதி முதல்வராக இருந்தார்.
* கோவாவில் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சியை சேர்ந்த சசிகலா கக்கோத்கர் 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் 1979ம் ஆண்டு ஏப்ரல் 27 வரை முதல்வராக இருந்தார்.
* அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்வரா தைமூர் என்பவர் 1980 டிசம்பர் 6ம் தேதி முதல் 1981 ஜூன் 30ம் தேதி வரை முதல்வராக இருந்தார்.
* தமிழ்நாட்டில் முதன்முறையாக எம்ஜிஆர் மனைவி ஜானகி 1988ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை 23 நாட்கள் முதல்வராக இருந்தார்.
* ஜானகியை தொடர்ந்து ஜெயலலிதா 1991 ஜூன் 24 முதல் 1996 மே 12 வரையும், 2001 மே 14 முதல் 2001 செப்டம்பர் 21ம் தேதி வரையும், 2002 மார்ச் 2 முதல் 2006 மே 12 வரையும், 2011 மே 16 முதல் 2014 செப்.27 வரையும், 2015 மே 23 முதல் 2016 டிசம்பர் 5 வரையும், மொத்தம் 14 ஆண்டு 124 நாட்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்.
* உபியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 1995 ஜூன் 13 முதல் 1995 அக்டோபர் 18 வரையும், 1997 மார்ச் 21 முதல் 1997 செப்டம்பர் 21 வரையும், 2002 மே 2 முதல் 2003 ஆகஸ்ட் 29 வரையும், 2007 மே 13 முதல் 2012 மார்ச் 15 வரையும் மொத்தம் 7 ஆண்டுகள் 5 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜிந்தர் கவுல் பாதல் 1996 நவம்பர் 21 முதல் 1997 பிப்ரவரி 12 வரை 83 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* பீகாரில் லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி 1997 ஜூலை 25 முதல் 1999 பிப்ரவரி 11 வரையும், 1999 மார்ச் 9 முதல் 2000 மார்ச் 2ம் தேதி வரையும், 2000 மார்ச் 11 முதல் 2005 மார்ச் 6ம் தேதி வரையும் மொத்தம் 7 ஆண்டுகள் 190 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* டெல்லியில் பா.ஜ சார்பில் சுஷ்மா சுவராஜ் 1998 அக்டோபர் 12 முதல் 1998 டிசம்பர் 3 வரை மொத்தம் 52 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஷீலா தீட்சித் 1998 டிசம்பர் 3 முதல் 2013 டிசம்பர் 28 வரை மொத்தம் 15 ஆண்டுகள் 25 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* மத்தியபிரதேசத்தில் பா.ஜ சார்பில் உமாபாரதி 2003 டிசம்பர் 8 முதல் 2004 ஆகஸ்ட் 23 வரை 259 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* ராஜஸ்தானில் பா.ஜ சார்பில் வசந்துரா ராஜே 2003 டிசம்பர் 8 முதல் 2008 டிசம்பர் 13 வரையும், 2013 டிசம்பர் 13 முதல் 2018 டிசம்பர் 17 வரையும் மொத்தம் 10 ஆண்டுகள் 9 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 2011 மே 20ம் தேதி முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.
* குஜராத் மாநிலத்தில் பா.ஜவை சேர்ந்த ஆனந்திபென் பட்டேல் 2014 மே 22 முதல் 2016 ஆகஸ்ட் 7 வரை 2 ஆண்டுகள் 77 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
* காஷ்மீரில் மெகபூபா முப்தி 2016 ஏப்ரல் 4 முதல் 2018 ஜூன் 19 வரை 2 ஆண்டு 76 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.