சனி மஹா பிரதோஷம்
6.4.2024 – சனி
ஒவ்வொரு பிரதோஷமும் உயர்வான நாள் என்றாலும், சனிக்கிழமையில் பிரதோஷம் கலந்து வருவது சனி மகாபிரதோஷம் என்ற சிறப்புப் பெயருடன் வழங்கப்படுகிறது. மற்ற பிரதோஷ விரதத்தைவிட சனி பிரதோஷ விரதம் 100 மடங்கு அதிக பலனைத் தரக்கூடியது. அன்று விரதம் இருந்து, மாலையில் சிவாலயம் சென்று, அபிஷேகங்களை தரிசிப்பதும், அபிஷேகத்திற்கு உரிய பூஜைப் பொருட்களைத் தருவதும், பிராகார வலம் வருவதும், ஈஸ்வரனை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும் மிகச் சிறப்பான பலனைத் தரும். குறிப்பாக, சனி தோஷங்களை முற்றிலுமாக நீக்கும். மாலை பூஜைஅறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி கீழே, உள்ள மிருத்யுஞ்ஜ மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால், நோய்கள் அகலும். கடன் தொல்லைகள் நீங்கும்.
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்’’
தண்டியடிகள் நாயனார் குருபூஜை
6.4.2024 – சனி
‘‘நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – என்று திருத்தொண்டத் திருத்தொகையில் போற்றப்பட்ட தண்டியடிகள் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருவாரூரில் பிறந்தவர். பிறக்கும் போதே பார்வையை இழந்திருந்தாலும், அகப்பார்வையால் (மனத்தால்) ஆரூரனை அனுதினமும் இடைவிடாது துதிக்கும் மனம் படைத்தவர். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்ட பத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் சமணர்களின் இருப்பிடம் பெருகி, குளத்தின் இடம் குறைவடைந்தது. தண்டியடிகள், குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கரையிலே போடும் பணியினை மேற்கொண்டார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு இகழ்ந்தனர். அவர் பணியை கைவிடும்படி கடுமையாகக் கூறினர். தண்டியடிகள் அதை செவியில் ஏற்காது சிவப்பணியே தவப்பணி என்று செய்வதைக் கண்டு அவரை இகழ்ந்தனர்.
‘‘உனக்கு கண்தான் இல்லை, காதும் இல்லையோ?’’ என்று செவி சுடும்படியான சொற்களைக் கூறினர். “நீ இக்காரியம் செய்து அடைந்த பையன் என்ன?” என்று கேட்க, தண்டியடிகள் ‘‘இது சிவத்தொண்டு. இதற் குப் பயன் சிவத்தொண்டு மூலம் அடைகின்ற இன்பம் தான்’’ என்று சொன்னார். ‘‘சிவத்தொண்டின் பெருமை அறிகின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லை. இப்பணி அழகைக்காண உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை’’ என்று சொல்ல, ‘‘ஓஹோ நீ கொடுத்து வைத்தாயோ?’’ என்று ஏகடியம் பேசினர். ‘‘ஆமாம் நான் எப்பொழுதும் என் கண்களால் சிவனுடைய திருவடிகளையே காண்கின்றேன்’’ என்று சொன்னவுடன் அவர்கள் சிரித்து, ‘‘கண்ணில்லாத நீ எப்படி சிவனை காண்பாய்? அதை எப்படி நாங்கள் நம்புவது?’’ என்று சொல்லிவிட்டு, ‘‘நீ வணக்கம் சிவனருளால் உனக்கு கண் பார்வை வரட்டும். அதுவரை வேலை செய்யாதே’’ என்று சொன்னதோடு இவருடைய மண்வெட்டியையும் தட்டுக்களையும் பறித்து எறிந்தனர். தண்டியடிகள் மனம் வருந்தி சிவபெருமான் முன் அழுது முறையிட்டார். “சிவப்பணி செய்ய முடியவில்லை” என்று துடித்தார்.
அன்று சோழமன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான் தண்டியடிகளுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். சோழ மன்னன் அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து இருவர் வழக்கையும் விசாரித்தான். ‘‘அடிகளாரே, நீர் கண் பெற்றது உண்மையானால் இவர்கள் இந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். கண் பார்வை பெற்றதை இவர்களுக்குக் காட்டுவீராக’’ என்று சொல்ல, அடுத்த நிமிடம் தண்டி யடிகள் சிவபெருமானை வணங்கி குளத்தில் மூழ்கி எழ, அவருடைய ஒளி வீசும் கண் பார்வையை எல்லோரும் கண்டனர். அதே சமயம் சமணர்களின் கண் பார்வை பறிபோயிற்று. அதோடு அவர்கள் குளக்கரையை விட்டு அகன்றனர். தண்டியடிகள் தம்முடைய திருத்தொண்டினைத் தொடர்ந்து பல காலம் செய்து சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் (பங்குனி சதயம்) இன்று. அதோடு இன்று மாத சிவராத்திரி நாள்.
சிவகாசி மாரியம்மன் பொங்கல் திருவிழா
7.4.2024 – ஞாயிறு
விருதுநகர் மாவட்டத்தில் மாரியம்மன் கோயில்கள் பரவலாக காணப்படும் நிலையில், சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இங்கு பங்குனி மாதம் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஏப்ரல் 7-ஆம் தேதி பொங்கல் திருவிழா, ஏப்ரல் 8-ஆம் தேதி அக்னிசட்டி எடுக்கும் நிகழ்வு, ஏப்ரல் 10-ஆம் தேதி தேரோட்டம் என நடைபெற உள்ளது. இக்கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், கயிறு குத்துதல், அலகு குத்துதல், பறவைக் காவடி எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
சோம அமாவாசை
8.4.2024 – திங்கள்
அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோம வாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரசமரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள். அமாவாசை நாளில் 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும். எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரசமரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதி காலையில் அரசமரத்தை வழிபட்டு, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.
வசந்த நவராத்ரி
9.4.2024 – செவ்வாய்
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில்தான் ராமர் பிறந்த நாள். எனவே சைத்ர நவராத்திரியை ராம நவராத்திரி என்றும் அழைப்பர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது, மக்கள் துர்காவையும், நவதுர்கா எனப்படும் அவளது ஒன்பது வடிவங்களையும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் வழிபடுகின்றனர். அவர்கள் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக அவளுடைய ஆசீர்வாதங்களைப் பெற விரதங்களைக் கடைப்பிடித்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
சமயபுரம் மாரியம்மன் பூதவாஹனம்
9.4.2024 – செவ்வாய்
அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கே சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதிலும், தேரோட்டம் அற்புதமாக இருக்கும். அந்த தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழாவும் தொடங்கும். உலகம் நலம் பெற வேண்டும் என்பதற்காக அந்த அம்மனே 28 நாட்கள் பச்சைபட்டினி விரதம் இருப்பது இந்தக் கோயிலுக்கு உரிய சிறப்பு. வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதமிருப்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு நிவேதனம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர் பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நிவேதனமாகச் செய்யப்படும். இன்று அந்த விழாவில் பூத வாகன பவனி.
யுகாதி
9.4.2024 – செவ்வாய்
ஆதி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. யுகாதி என்பது ஆண்டின் தொடக்கம் என்ற பொருளில் வரும். பல கோயில்களில் யுகாதி ஆஸ்தானம் என்று சொல்லி பஞ்சாங்க படனம் (பஞ்சாங்கம் படித்தல்) செய்வார்கள். சாந்தரமான முறையில் இன்று சித்திரை தொடக்கம். காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழைஎளியவர்களுக்கு வழங்குதல் வேண்டும். யுகாதி பண்டிகையன்று வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும்.
சௌபாக்ய கௌரி விரதம்
11.4.2024 – வியாழன்
யுகாதி பண்டிகைக்குப் பின் வருகின்ற வளர்பிறை திருதியை அன்று சௌபாக்ய கௌரி விரதம் கொண்டாடுவார்கள். அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை, மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். அடுத்து வரும் திருதியை அட்சய திருதியை வரைக்கும் கலசத்தை ஆவாகனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜித்துக் கொண்டாடுவதன் மூலமாக பற்பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகளெல்லாம் தடை நீங்கி நடக்கும்.
தாராதேவி ஜெயந்தி
11.4.2024 – வியாழன்
காளி, தாரா, வித்யா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இரண்டாவது தேவி தாரா தேவி. பாற்கடலை தேவர்கள் கடைந்த பொழுது, வந்த ஆல கால விஷத்தை பரமசிவன் விழுங்க வேண்டிய நேரத்தில், அதை தொண்டையிலேயே தடுத்து நிறுத்திய தேவி தாரா தேவி. இந்த தாரா தேவியை வணங்கினால், ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கிவிடும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம் தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும். உலக இச்சையை கத்தரிக்கும். உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.
நேசநாயனார் குருபூஜை
12.4.2024 – வெள்ளி
நேசநாயனார், சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவாமல் சிவனுக்குரிய பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது சொல்லிக் கொண்டு தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியார்களுக்காகவே செய்துவந்தார். ஆடைகள், கீழ்க் கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது வழங்கும் பணியைத் தட்டாது செய்துவந்தார். நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சி சித்திரை விழா ஆரம்பம்
12.4.2024 – வெள்ளி
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சித்திரை திருவிழா மிகவும் பிரபலம். தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ல் தொடங்கி ஏப்ரல் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. சித்திரைமாத அமாவாசைக்குப் பிறகு வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று (இன்று) மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.