Wednesday, May 15, 2024
Home » கரபாத்திர சுவாமிகள் மடாலயம் இறையன்பர்கள் போற்றும் வகையில் மேம்பாடு செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கரபாத்திர சுவாமிகள் மடாலயம் இறையன்பர்கள் போற்றும் வகையில் மேம்பாடு செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

by Lavanya
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, வடபழனி, அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலின் உபகோயிலான வியாசர்பாடி சாமியார் தோட்டம், அருள்மிகு கரபாத்திர சுவாமிகள் மடாலயத்தின் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1875 ஆம் ஆண்டு திருப்போரூரில் பிறந்த கரபாத்திர சுவாமிகள் வியாசர்பாடியில் தங்கி அவருடைய சிஷ்ய வாரிசுகள் முயற்சியால் பொருள் திரட்டி இவ்விடத்தில் 14 ஏக்கர் நிலம் வாங்கி 1914- ல் இங்கே ஒரு மடாலயமும், அம்பத்தூர் பாடியில் சசிசேகர ஆசிரமும் ஏற்படுத்திருக்கின்றார். இந்த மடாலயத்திற்காக வாங்கப்பட்ட இடத்தில் சென்னை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஒரு பகுதியை வழங்கப்பட்டது போக, மீதம் இருக்கின்ற இடங்களில் மடாலயம் அமைந்திருக்கிறது. இந்த மடாலயத்தில் 04.04.1918 அன்று கரபாத்திர சுவாமிகள் விவேக கைவல்யம் அடைந்துள்ளார்.

இந்த மடாலயத்தை பொறுத்தளவில் சுவாமியின் சீடரான முத்தானந்த சுவாமிகள் சன்னிதானம் முன் மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த மடாலயத்தில் கரபாத்திர சுவாமிகள் மற்றும் முத்தானந்த சுவாமிகளின் மகா குருபூஜைகள், நாக சதுர்த்தி மற்றும் பௌர்ணமி பூஜை போன்றவை நடத்தப்பட்டு வருகின்ற. இந்த மடாலயத்திற்கு சொந்தமான சொத்துக்களை பல்வேறு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

கரபாத்திர சுவாமிகள் மடாலயத்தை மேம்படுத்தும் வகையில் மதிற்சுவர் சீரமைப்பு, திருக்குள திருப்பணி, உலோக திருமேனி பாதுகாப்பு அறை, புதிதாக அன்னதானக் கூடம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், சித்தர் சமாதிகளுக்கு செல்வதற்கு பாதை அமைத்தல், கழிவறைகளை மேம்படுத்தல், நந்தவனம் சீரமைத்தல், புதிய நூலகம் அமைத்தல், யோகா வகுப்பு மற்றும் சமய சொற்பொழிவு மண்டபம் அமைத்தல் போன்ற 10 திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும், இங்கு சுவாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்கள் புனரமைக்க 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு ரூ. 100 கோடியும், 2023 – 2024 ஆம் ஆண்டு ரூ.100 கோடியையும் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 200 க்கும் மேற்பட்ட தமிழர்களுடைய அடையாளமாக திகழ்கின்ற பண்டைய காலத்து திருக்கோயில்களை புனரமைக்கின்ற பணிகளிலும், கடந்த காலங்களில் கேட்பாரற்று கிடந்த மடாலயங்களை புதுப்பிக்கின்ற பணிகளிலும் இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஈடுபட்டு வருகிறது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பது நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்தி தந்து இறைவழிபாட்டு வழிமுறைகளை பாதுகாப்பது தொடர்ந்து அந்த வழிமுறைகளை மேற்கொள்வது என்று இந்து சமய அறநிலைத்துறை தன்னுடைய பயணத்தை மகிழ்ச்சியோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய தினம் முதல் இந்த மடாலயத்தின் திருப்பணிகளுக்கான அடிப்படை பணிகள் தொடங்கப்படும். இதற்கென திருப்பணி ஆலோசகர் (கன்சல்டன்ட்) நியமனம் செய்து மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்தம் கோருதல் போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வடபழனி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நல்ல நிலையில் செயல்பட்டு வருவதால், அதன் நிதியின் மூலம் உபகோயிலான கரபாத்திர சுவாமி மடாலயத்தின் தேவைகளுக்கு நிவர்த்தி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே ஏற்கனவே இருக்கின்ற நிலை தொடர்வதால் இதன் வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இந்த மடாலயத்திற்கு சொந்தமான இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர் மூலம் அளவீடு செய்து இதன் சொத்துக்கள் எவை எவை என்பதை கணக்கிடப்பட்டு பட்டா பெயர் மாற்றம் தொடர்பான பணிகள், ஆக்ககிரமிப்பை அகற்றும் பணிகள், வாடகை வசூலிக்கும் பணிகள் போன்றவை இன்றைய தினம் முதல் தொடங்கப்படும்.

அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்த பின்னர் அன்னதானத் திட்டம் உள்ளிட்ட பிற வசதிகளை படிப்படியாக செய்து தந்து இந்த மடாலயத்தினை இறையன்பர்கள் பேற்றும் வகையில் மேம்படுத்தி தருவோம் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் தா.இளைய அருணா, இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ந. திருமகள், வடபழனி ஆண்டவர் திருக்கோயில் துணை ஆணையர் இரா. ஹரிஹரன், உதவி ஆணையர் எம். பாஸ்கரன், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜெ. டில்லிபாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

five + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi