Friday, May 17, 2024
Home » வியட்நாம் வெரைட்டி உணவுகள்!

வியட்நாம் வெரைட்டி உணவுகள்!

by Lavanya

உலகளவில் உணவுகளுக்கு பிரபலமான நாடுகளில் வியட்நாமும் ஒன்று. அதிலும் சமீபகாலமாக பெரும்பாலான உணவுப்பிரியர்களின் கவனத்தை வியட்நாம் உணவுகள் ஈர்த்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வியட்நாமின் சுவைமிக்க உணவுகளை சுவைப்பதற்காகவே ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உணவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக வியட்நாம் உணவுகள் விளங்குகின்றன. புதுச்சேரியைப் போல வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் அவர்களின்உணவுக்கலாச்சாரத்தில் இருந்தும் சில புதிய உணவுகள் பிறந்திருக்கின்றன. அண்டை நாடுகளான லாவோஸ் மற்றும் சீனாவின் கலாச்சார பரிமாற்றங்களின் மூலமும் சில உணவுகள் பிறந்திருக்கின்றன. இவை எல்லாம் ஒரு கலவையான உணவுக்கலாச்சாரமாக உருவெடுத்து இருக்கிறது. வியட்நாமின் பிரத்யேக உணவுகள் என்றால், அது தெருவில் விற்கப்படும் உணவுகளாகத்தான் இருக்கின்றன. வியட்நாமின் நைட் ஃபுட் மார்க்கெட் உலகளவில் பிரபலமானது. இங்கே ஒரே இடத்தில் பல நூறு உணவுக் கடைகள் இருக்கும். உயிருடன் இருக்கும் கடல் உணவுகளை உடனடியாக சமைத்து தரும் அனுபவமும் வியட்நாம் நைட் ஃபுட் மார்க்கெட்டில் பிரபலம். வியட்நாமியர்கள் பொதுவாக விதவிதமான கடல் உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். அவர்களின் உணவில் மீன் சாஸ், அரிசி மற்றும் ரைஸ் ஸ்டிக் அதிகம் சேர்க்கப்படுகிறது.

வியட்நாமின் பிரபல உணவுகளின் டேட்டா!

ஃபோ:

ஃபு’ என உச்சரிக்கப்படும் இந்த உணவு வியட்நாமில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சுவையான நூடுல்ஸால் செய்யப்பட்ட சூப் வகை. இது பெரும்பாலும், காலை உணவாக இருக்கிறது. இந்த வியட்நாம் உணவின் தோற்றம் நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து வந்தது, ஆனால் இப்போது, ஃபோ வியட்நாமின் தேசிய உணவாக மாறியுள்ளது. இந்த நூடுல் சூப், கோழிக்குழம்பு அல்லது இஞ்சி மற்றும் கொத்தமல்லியுடன் கூடிய லேசான இறைச்சி சேர்க்கப்பட்டதாகும். சைவப்பிரியர்களுக்கு இறைச்சிக்கு பதிலாக டோஃபு சேர்க்கப்படுகிறது.

பன் சா:

பன் சா வியட்நாமில் அதிகம் விரும்பப்படும் வறுக்கப்பட்ட உணவுகளில் ஒன்று. தெருவோரக் கடைகள் முதல் ஆடம்பரமான உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் பன் சா கிடைக்கும். இது ஒரு பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சி, கீரைகள், அரிசி நூடுல்ஸ் சேர்த்து பொரித்து எடுக்கப்பட்ட மீட் பால்ஸ் ஆகும். பன் சா பொதுவாக மதிய உணவு நேரத்தில் உண்ணப்படுகிறது.

பான் குவான்:

சிறந்த வியட்நாமிய தெரு உணவுகளின் பட்டியலில் பான் குவானுக்குத்தான் முதலிடம். இது அடிப்படையில் ஒரு பான்கேக் வகையாகும். அதில் வெங்காயம் மற்றும் இறைச்சி, மீன் சாஸ், காடை முட்டை மற்றும் காய்கறிகளுடன்
தயாரிக்கப்படுகிறது.

கோய் குவான் :

இது ஸ்பிரிங் ரோல் வகையைச் சேர்ந்தது. இந்த வியட்நாமிய உணவு உலகம் முழுவதும் பிரபலமானது. ஏதேனும் ஒரு இறைச்சி, இறால், காய்கறிகள் மற்றும் அரிசி நூடுல்ஸ் சேர்த்து அரிசி காகிதத்தில் மூடப்பட்டிருக்கும். வியட்
நாமிய மொழியில் பான் டிராங் என்றும் அழைக்கப்படுகிறது.

பான் ஃஷியோ:

இது அரிசி மாவு, தண்ணீர் மற்றும் ஸ்க்விட் அல்லது இறால், இறைச்சி துண்டுகள் மற்றும் மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு ஆம்லெட் வடிவில் இருக்கும் ஆனால் இந்த உணவில் முட்டை இல்லை.

பன் போ நாம் போ:

இது அரிசி நூடுல்ஸ், மெல்லிய பீப் துண்டுகள், காய்கறிகள் மற்றும் வறுத்த வேர்க்கடலை மீன் சாஸ், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை மற்றும் தண்ணீர், மிளகாய் அல்லது பூண்டு சேர்த்து செய்யப்
படும் உணவாகும். இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான சுவையில் இருக்கும்.

சா கா தாங் லாங்:

வியட்நாமின் மிகவும் பிரபலமான கடல் உணவுகளில் ஒன்றான வறுக்கப்பட்ட மீன் வகைதான் சா கா தாங் லாங். இது கேட்ஃபிஷ் எனும் மீனால் செய்யப்படுகிறது. மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் மீன் சாஸ் ஆகியவற்றில் ஊறவைக்கப்
படுகிறது. இது கிட்டத்தட்ட செதில்களாக மாறும் வரை வதக்கி பரிமாறப்படுகிறது.

பான் மி:

பிரெஞ்சுக்காரர்கள் சுமார் 300 ஆண்டுகள் வியட்நாமில் ஆட்சி செய்ததின் அடையாளமாக இந்த உணவு பார்க்கப்படுகிறது. இது பொதுவாக நீளமான பன் வகையை சேர்ந்தது. இதன் உள்ளே கடல் இறைச்சி, காய்கறிகள், மீன் சாஸ், வெங்காயத்தாள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.

வியட்நாமிய காபி:

இது நம்மூர் ஃபில்டர் காபி வகையைச் சேர்ந்தது. ஆனால் ஐஸ் க்யூப்புகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

one + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi