Wednesday, May 29, 2024
Home » திருவள்ளூர், பூந்தமல்லி ஒன்றியங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்: டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணி குறித்து விவாதம்

திருவள்ளூர், பூந்தமல்லி ஒன்றியங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்: டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணி குறித்து விவாதம்

by Ranjith

திருவள்ளூர்: திருவள்ளூர், பூந்தமல்லி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணி குறித்து விவாதிக்கப்பட்டது. திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் செல்வி நாகரத்தினம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் சங்கீதா, சோனியா பிரேம்குமார், பிரசாத், ரேணுகா, ஜான்சன் ஜெபக்குமார், சுபாஷினி, ஜெகதீசன், மீரா, ஊராட்சி செயலாளர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் மகளிர் உதவி குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி ஆதிவாசிகள் காலனி, ஸ்ரீ பவானி அம்மன் கோயில் அருகில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் த.தேவி தயாளன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவேந்திரன், வார்டு உறுப்பினர்கள் அருண், வசந்தி, அமுல்தேவி, சிவகாமி, கவுதமன், லட்சுமி, சரண்யா, பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் தயாளன், ராஜன், ராஜமூர்த்தி, மகேந்திரன், அமலநாதன், தினேஷ், முருகன், முருகேசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மைபாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. பூந்தமல்லி ஒன்றியம், கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கந்தபாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரம்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் காமாட்சி, கோவிந்தராஜ், கட்டதொட்டி குணசேகரன், கல்பனா தேவராஜ், ராஜேஷ், யமுனா தேவி, ஊராட்சி செயலர் தாமோதரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சித்தேரி தாங்கள் ஏரியின் கரையை பலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி ஒன்றியம், கொசவன்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாகுமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டில்லிபாபு, வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், யுவராணி, முனியம்மாள், ஆனந்தன், சந்திரலேகா, கீதா, ரேவதி, வெங்கடேசன், ஊராட்சி செயலர் வேலாயுதம், இளநிலை உதவியாளர் சண்முகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கொசவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு கொட்டமேடு கிராமத்தில் மழை நீரை வெளியேற்ற முடியாத வகையில் தனி நபர்கள் தடுப்பு அமைத்துள்ளதால் மழைநீர் தேங்கி வீடுகளுக்கு புகுந்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாகுமார் பைப் லைன் மூலம் தீவிரமாக முயற்சி செய்து தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி வருகிறார். ஆனால் அதற்கு தனி நபர்கள் பெரும் தடையாக உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டரும், வட்டாட்சியரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தரமாக மழைநீர் தேங்கி நிற்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து 5வது வார்டு உறுப்பினர் சந்திரகலா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதா ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் கவுதமி, வார்டு உறுப்பினர்கள் கவிதா சுப்பிரமணி, அஞ்சலி உதயா, அமுல், முனியம்மாள் ராமதாஸ், ஜெயப்பிரியா ஞானம், சேட்டு, முருகம்மாள் கமல், வெங்கடேசன், யமுனாதேவி, ஊராட்சி செயலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தா, வார்டு உறுப்பினர்கள் காவேரி, கோமதி, மேகவர்ணன், பத்மாவதி, சொர்ணாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தகன மேடை அமைக்க நடவடிக்கை
பூந்தமல்லி ஒன்றியம், நேமம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் மாரிமுத்து, துணைத் தலைவர் விஜயா ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் உமா சங்கரி நாகராஜ், தமிழழகன், சிவகாமி வடிவேல், உதயகுமார், முருகன், விஜயா தாமோதரன், நிரோஷா மகேஷ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி செயலர் பிரசன்ன வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதிநாதன், கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.பிரேம்நாத் பேசும்போது, நேமம் ஊராட்சியில் பிணங்களை எரிப்பதற்காக போதிய சுடுகாடு வசதி இல்லாததால் மின்சார தகன மேடை அமைத்து தருமாறும், ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்ற ஒரு டிராக்டர் வண்டியையும், நேமம் ஊராட்சியில் மிக மோசமான நிலையில் உள்ள 5 சாலைகளை புதிதாக அமைத்துத் தருமாறும் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிக்குழு பெருந்தலைவர், கலெக்டரிடம் கோரிக்கை வைத்து மின்சார தகன மேடை அமைக்கவும், குப்பைகளை அகற்றுவதற்காக ஒரு டிராக்டர் வழங்கவும், மிகவும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

You may also like

Leave a Comment

thirteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi