Sunday, April 14, 2024
Home » திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள்

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள்

by Nithya

*காலவ மகரிஷியின் 360 பெண்களையும், ஒரு நாளைக்கு ஒருவராக மணந்து, முடிவில் வராகமூர்த்தி வடிவில் 360 கன்னியரையும் ஒரே திருமகள் வடிவாக்கி, இடப்பாகத்தில் ஏற்றருள்கிறார், வராகமூர்த்தி. திருவாகிய மகாலட்சுமியை இடப்புறம் ஏற்றதால் இத்தலம் திருவிடந்தை என்றாயிற்று.

*அரிகேசவர்மன் எனும் மன்னன் தினமும், மாமல்லபுரத்திலிருந்து 12 மைல் தொலைவு கடந்து, திருவிடந்தைக்கு வந்து தரிசிப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்த இந்த வராக மூர்த்தி, அவன் சிரமத்தைக் குறைக்க மாமல்லபுரம் கடற்கரை கலங்கரை விளக்கிற்கருகே, திருமகளை வலப்புறம் ஏந்தி திருவலவந்தை தலத்தில் தரிசனம் தந்தார்.

*வருடம் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடக்கும் திருத்தலம் இது. எனவேதான் இவர் நித்யகல்யாணப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

*இறைவன் நித்யகல்யாணப் பெருமாள் என அழைக்கப்பட்டாலும், கருவறையில் மகாலட்சுமியை தன் தொடையில் தாங்கிய வராஹமூர்த்தியாகத்தான் அருட்கோலம் காட்டுகிறார்; தாயார் கோமளவல்லித்தாயார் என்ற அகிலவல்லி நாச்சியார்.

*இத்தல தாயாரின் கோமளவல்லி என்ற பெயராலேயே இந்தத் தலம் கோவளம் என்று அழைக்கப்பட்டது.

*பெருமாளின் உற்சவ விக்ரகத்தின் கன்னத்தில் இயற்கையாகவே ஒரு திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது தரிசிப்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

*வராகமூர்த்தி தன் ஒரு திருவடியை பூமியின் மீதும், மற்றொன்றை ஆதிசேஷன் மீதும் பதித்து, அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கி, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

*திருமங்கையாழ்வார் இத்தலத்தை 13 பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளார். மணவாள மாமுனிகளாலும் மங்களாசாஸனம் செய்யப்பட்டதால், இவரை மணவாளப் பெருமாள் என்றும் அழைப்பர்.

*பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தன் 108 திருப்பதி அந்தாதியில் இத்தல மகிமைகளை குறிப்பிட்டுள்ளார்.

*புன்னை, ஆனை தலமரங்கள்; வராக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், தல தீர்த்தங்கள்.

*புராணங்களில் இத்தலம் வராகபுரி, ஸ்ரீபுரி, நித்யகல்யாணபுரி என்றும் கல்வெட்டுகளில் அசுரகுல காலநல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

*ஆலய விமானம், கல்யாண விமானம் என அழைக்கப்படுகிறது.

*திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு இரண்டு மாலை அணிவித்து, பிறகு அதில் ஒன்றை பெற்று அணிந்துகொண்டு கோயிலை 2 முறை வலம் வருகிறார்கள். பிறகு திருமணமான திருமகளை வலப்புறம் ஏந்தி பின் தம்பதியராக வந்து வழிபடுகின்றனர்.

*திருஷ்டிதோஷம், ராகு – கேது தோஷம், சுக்கிரதோஷம் போன்றவை இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு நீங்குவதாக ஐதீகம்.

*திரேதாயுகத்தில் வாழ்ந்த மேகநாதனின் புதல்வனான பலியின் பிரம்மஹத்தி தோஷத்தை பெருமாள் வராக வடிவத்தில் தோன்றி போக்கியருளிய தலம் இது.

*விஜயேந்திர தேவ சோழ மன்னன் கி.பி.1052ல் இக்கிராமத்தை பெருமாளுக்குத் தானமாக அளித்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

*பலி, காலவ ரிஷி, மார்க்கண்டேயருக்கு இந்த பெருமாள் நேரடி தரிசனம் தந்துள்ளார்.

*யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இத்தலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே கொச்சி அரண்மனையிலும், இத்தலத்திலும் மட்டுமே அவ்வகை பல்லக்குகள் உள்ளன என்கிறார்கள்.

*வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் இத்தலமும் ஒன்று.

*சென்னை – புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில், கோவளம் அருகில் இத்தலம் உள்ளது.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi