மகரமும் கும்பமும் சனியை அதிபதியாகக் கொண்ட ராசிகளாகும். இதில் மகர ராசியை சர ராசி எனவும், கும்பத்தை ஸ்திர ராசி என்றும் சொல்வர். மகர ராசிக்காரர்கள் சர வெடியைப் போல வெடிப்பார்கள். ஆனால், கும்பமோ கொதித்து சட்டென்று அடங்குவார்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வர்’ என்பது பழமொழி.
பொதுவாக மகர ராசிக்காரர்கள் சொந்த வீட்டின் மேல் உயிரையே வைத்திருப்பீர்கள். நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல குடும்பத்தோடு வெளியில் போக வேண்டுமென்று நினைத்தால் கூட, ‘‘வீட்டை இப்படிப் பூட்டிட்டு போறதுக்கு மனசில்லை’’ என்பீர்கள். உங்களில் சிலர், ‘‘நீங்க வேணா போயிட்டு வாங்க. நான் வீட்டைப் பார்த்துக்கறேன்’’ என்பீர்கள். அண்ணன், அக்கா வீட்டில் தங்குவதற்குக்கூட யோசிப்பீர்கள். பூர்வீகத்தில் சொந்த பங்களாவே இருந்தாலும், சொந்த உழைப்பில் கட்டிய வீட்டைத்தான் மிகவும் நேசிப்பீர்கள். கட்டிடகாரகனான சுக்கிரன் உங்களின் பிரபல யோகாதிபதியாக இருப்பதால், சொந்த வீடு குறித்து விதம்விதமான ஆசைகள் இருக்கும்.
ஆனால், வேறொரு விஷயத்தையும் பார்ப்போம். உங்களின் கட்டிட ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். இவர் உங்கள் ராசிநாதனான சனிக்கு பகைவராகவும் வருகிறார். அதனால், சொந்த வீட்டு ஆசை தாமதித்து நிறைவேறும் வாய்ப்பு அதிகம். சிலருக்கு 45 வயதுக்குப் பிறகு ஆசை நிறைவேறும். அதனால், வாலிப வயதிலேயே முதலில் வீட்டு மனையாக வாங்காமல் அபார்ட்மென்ட்டில் வாங்குவது நல்லதாகும். உங்களின் முதல் முதலீடு கட்டிய வீடாக இருப்பது நல்லது. அதேபோல, ‘‘ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி அண்ணன் கீழ இருக்காரு. நான் மேல இருக்கேன்’’ என்பதெல்லாம் சரியாக வராது. ஏனெனில், ரத்த பந்தம் மற்றும் உறவு முறைகளில் விரிசல் வராமல் தடுக்க, வெவ்வேறு வீடோ அல்லது கதவு எண் வேறாக இருந்தால் மட்டுமே நல்லது.
மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தின் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் இடம் பெறுகின்றன. முதலில் உத்திராடத்தைப் பார்ப்போம். ‘உத்திராடத்தில் பிள்ளை ஊர் ஓரத்தில் கொல்லை’ என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கேற்றவாறு வேலைக்குப் போவதே வீடு வாங்குவதற்காகத்தான் என்றிருப்பீர்கள். எத்தனை சந்தர்ப்பம் கிடைத்தாலும் குறுக்கு வழியில் போய் வீடு வாங்க மாட்டீர்கள். அப்பா வழியில் சிறிதாவது சொத்து இருப்பதை விரும்புவீர்கள். எப்போதுமே முக்கால் கிணறு தாண்டி மீண்டும் பின்வாங்கும் பழக்கமுள்ளவர்கள். அந்த இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு அதிபதி சூரியன். ராசிக்கு அதிபதி சனி. இருவரும் பகைவராக இருப்பதால், ‘‘இதை வித்துட்டு அதை வாங்கலாமா… என்னமோ இந்த ஏரியா நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை’’ என்று அடிக்கடி கட்டிய வீட்டையே விற்கவும் துணிவீர்கள். ஏறக்குறைய 40 வயதிலிருந்து 55 வயது வரை குரு தசை நடைபெறும். குரு பகவான் சூரியனுக்கு நட்பாக வருவதால் இது மிகச் சிறந்த காலமாக அமையும். நீங்கள் விரும்பிய இடத்தில் வீடு அமையும்.
வீட்டிற்குள் எத்தனை ஜன்னல் வைக்க முடியுமோ அத்தனை வைத்துக் கட்டுவீர்கள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் வாசலில் உயரமாக இரண்டு மரங்கள் இருந்தால் சந்தோஷப்படுவீர்கள். உங்களுக்கென்று தனி அறையை கட்டிவிட்டுத்தான் மற்ற அறைகள் என்னென்ன என்று திட்டமிடுவீர்கள். அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது பொதுவான இடம் எவ்வளவு, வீட்டின் அளவு எவ்வளவு என எல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும், பத்திரப்பதிவுக்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்க ரீதியாக பின்னால் தொந்தரவு வரலாம். கிராமம் எனில் புறம்போக்கு… பட்டா… கிராமத்து நத்தம் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள்.
அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் வசிக்கும் தெரு, மத்திய மாநில அரசுக் குடியிருப்புகள், ஆப்டிகல்ஸ், கண் மருத்துவமனை போன்ற பகுதிகளில் வீடு அமையும் வாய்ப்புகள் அதிகம். அப்படி அமைந்தால் சூரியன் உங்களுக்கு பலமாக இருக்கிறார் என்றும் அர்த்தம். ராசிநாதன் சனியாக வருவதால் குடிசை மாற்று வாரிய வீடுகளும் அருகில் இருக்கும். வீட்டின் தலைவாசல் கிழக்கு, தென் கிழக்கு திசையைப் பார்த்தும், நீங்கள் வசிக்கும் பகுதி ஊரின் கிழக்கு திசை நோக்கியும் இருந்தால் வளம் பெருகும். மேற்கண்ட திசைகள் அதிகாரப் பதவிகளை அளிக்கும். மேற்கு பக்க வாசல் இருந்தால் அடிக்கடி உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். தரைத்தள வீடு கிடைத்தால் கூட குடியேறுங்கள். அதேபோல கடற்கரை பகுதியில் அமைந்தால் உடனே வாங்குங்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமாக சுக்கிரன் வருவதால் மனைவி வழியிலும் கூட சொத்துகள் சேரும். அஸ்வினி, பூசம், சுவாதி, உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் கிரகப் பிரவேசமும், பத்திரப் பதிவையும் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக மகர ராசியிலேயே வலிமையுள்ள நட்சத்திரம் திருவோணம் ஆகும். ‘ஓணம் கோணம் ஆளும்’ என்று பழமொழி உண்டு. அழகையும் ரசனையையும் கலந்து வீட்டை வடிவமைப்பீர்கள். தென்னை மரக்கீற்றினூடாக நிலவொளி வரவேண்டும் என்பதற்காக வீட்டின் அமைப்பையே மாற்றுவீர்கள். இப்படி ரசனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் வீடு என்பதை நான்கு சுவர்களாகப் பார்க்க மாட்டீர்கள். உங்கள் நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் வருகிறார். சனியினுடைய வீட்டில் சந்திரன் வருவதால் வாழ்க்கை எளிமையாகத் தொடங்கும். பிரமாண்டமாக வளரும். உங்களுக்கு எல்லாமே தெரிந்திருந்தாலும், ‘இதைச் செய்… அதைச்செய்…’ என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 36லிருந்து 52 வயது வரை குரு தசை நடைபெறும். இந்தக் காலத்தில் நிறைய இடமாகவும், வீடாகவும் வாங்குவீர்கள்.
வேடிக்கை பார்க்க ஒரு இடம், பேப்பர் படிக்க சின்ன பால்கணி, மழையை ரசிக்க மேல் மாடி என்று உங்களில் பலர் திட்டமிட்டுக் கட்டுவீர்கள். சொந்த வீடு கட்டும்போது நிறைய வேலை வாங்குவீர்கள். பிரத்யேகமாக படுக்கையறையை பலவித வண்ணங்களால் அலங்கரிப்பீர்கள். அடிக்கடி வீட்டின் பெயின்ட்டை மாற்றிக் கொண்டும் இருப்பீர்கள். எங்கேனும் சிறிய குளம் இருந்தால் போதும். அருகே எங்கேனும் இடத்தை விலைக்கு வாங்க முடியுமா என்று நினைப்பீர்கள். களிமண், மணல் அதிக முள்ள பூமி அமைந்தால் நல்லது. அபார்ட்மென்ட்டும் ஓ.கே. அல்லது இடம் வாங்கி வீடு கட்டினாலும் சரிதான். எல்லா மாடிகளுமே உங்களுக்கு நல்லதுதான்.
நீங்கள் வசிக்கும் ஊரின் வட மேற்கு, தென் கிழக்கு பகுதியில் வீடு கிடைத்தால் அதிர்ஷ்டம். அதே திசையில் வீட்டின் தலைவாசலை அமைத்து விடுங்கள். ‘வீடு விஷயத்தில் என் ஆசையை விட குழந்தையின் நலன்தான் முக்கியம்’ என்று அவர்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்வீர்கள். பூர்வீகச் சொத்து இருக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். நகரத்தில் வீடு வாங்க பூர்வீகத்தை விற்க நேர்ந்தாலும், மீண்டும் சொந்த ஊரிலேயே வாங்குவீர்கள். நடிகர்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வீடு, நாட்டியப் பள்ளி போன்றவற்றிற்கு அருகில் வீடு கிடைத்தால் உடனே வாங்குங்கள். மிருகசீரிஷம், புனர்பூசம், அவிட்டம், ரேவதி நட்சத்திரங்களில் புதுமனை புகுவிழாவையும், பத்திரப்பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். மகர ராசியில் மூன்றாவது வருவது அவிட்டம் நட்சத்திரம் ஆகும். இதில் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் மகர ராசியில் வருகிறது.
பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் இது. சனியின் ராசியில் செவ்வாய் வருவதால் வீடு என்று வாய் திறந்தாலே ஏதேனும் பிரச்னை என்பதுபோல நினைத்துக் கொள்வீர்கள். பல வருடங்களாக இடத்தை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். முடிவெடுக்க மாட்டீர்கள். 27, 33 வயதுகளில் வீடு அமைந்து விடும். ஆனால், அமைந்த வீட்டை தக்க வைக்கத்தான் போராட வேண்டியிருக்கும். வீட்டை கொடுத்துவிட்டு கல்லூரி ஃபீஸ் கட்டுவது போன்றெல்லாம் சூழல் வரும். அதையும் மீறி வீட்டை காப்பாற்றிக் கொள்வீர்கள். 46, 47, 51, 52 வயதுகளில் நிறைய விவசாய நிலங்களையும் சேர்த்து வாங்க ஆரம்பிப்பீர்கள்.
உங்களுக்கு தரைத் தளத்தில் வீடு அமைந்தாலும் பரவாயில்லை. தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. ஊரின் மேடான பகுதிகளில் வீடு தேடுவீர்கள். அண்ணன், தம்பி என்று உறவு முறையில் தெருக்கள் அமைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். சின்னத்தம்பி தெரு, அண்ணா நகர் என்பதுபோல அமைய வேண்டும். மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பெயருள்ள தெருக்களில் வீடு அமைந்தால் உடனே வாங்குங்கள். தீரர் சத்தியமூர்த்தி நகர், காந்தி நகர் என்றெல்லாம் இருக்க வேண்டும். ‘‘இந்த வீட்டுத் திண்ணைலதான் காந்தி சென்னை வரும்போது உட்கார்ந்திருந்தாராம்’’ என்று தேடிப்பிடித்து வாங்குவோரும் உங்களில் உண்டு. எல்லா வகை மண்ணுமே ராசியாக இருக்கும். ஆனால் உங்களுக்கு வீடு பற்றிய ஆசைகள் மத்திம வயதில்தான் நிறைவேறும். ராசிநாதனான சனி, நட்சத்திர நாயகனான செவ்வாய்க்கும் பகை என்பதால் பூர்வீகச் சொத்து, வீடுகள் ஏனோ நிலைப்பதில்லை. அஸ்வினி, ரோகிணி, பூசம், சுவாதி, அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவரே மேஷச் செவ்வாய் ஆகும். மேலும் ராசியாதிபதியான சனி, செவ்வாய்க்கு பகைவராக இருக்கிறார். செவ்வாய்க்கு அதிபதியாக முருகக் கடவுள் வருகிறார். சனி கடலுக்கு உரியதைப் போல, சிறு குன்றுகளுக்கும் உரியவராவார். குன்றுகளுக்கு மேல் இருக்கும் முருகனை தரிசிக்கும்போது சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அந்தத் தலம் விளங்கும். அப்படிப்பட்ட தலமே சிவன்மலை ஆகும். இத்தலத்தில் மலை மீது முருகன் வீற்றிருக்கிறார். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட தொன்மையான ஆலயமாகும். மக்களின் குறை தீர்க்கும் கடவுளாக இவர் வணங்கப்படுகிறார். வள்ளி, தெய்வானை சமேத முருகனை வணங்கி வாருங்கள். வெற்றியை உங்களின் நிரந்தர சொத்தாக மாற்றுங்கள். கோவையிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், காங்கேயத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.