Friday, May 17, 2024
Home » மசாலாக்களின் மறுபக்கம்…

மசாலாக்களின் மறுபக்கம்…

by Nithya
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

அகத்தை சீராக்கும் சீரகம்!

தெற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட சீரகம், பழங்காலத்திலிருந்தே மருந்தாகவும், மசாலாப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Apiceae என்னும் தாவரக்குடும்பத்தைச் சார்ந்த சீரகம் (cuminum cyminum) 30 – 50 செ.மீ. உயரம் வளரக்கூடிய தாவரத்தின் உலர்த்தப்பட்ட விதைகள்.

தென்தமிழகத்து மக்களின் தினசரி உணவுகளான சாம்பார், ரசம், குழம்பு, கூட்டு போன்றவற்றிலும் மசாலாப் பொடி வகைகளிலும் சேர்க்கப்படும் சீரகத்தில், கார்போஹைடிரேட், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, பி வைட்டமின்கள் இருக்கின்றன. சீரகத்தில் இருக்கும் முக்கியமான வேதிப்பொருட்கள் cuminaldehyde, cymene, terpenoids, pyrazines, safranal, beta pinene போன்றவை. இவற்றுள் cuminaldehyde என்ற நுண்பொருள்தான், அதற்கான தனிப்பட்ட நறுமணத்தைக் கொடுக்கிறது. சீரகத்தில் இருக்கும் எண்ணெய் அழகு சாதனப்பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தின் நன்மைகள்

பொதுவான பயன்பாட்டில் இருக்கும் மஞ்சள் கலந்த பழுப்புநிற சீரகம், கருஞ்சீரகம், கசப்புச் சீரகம் என்று சீரகத்தில் சில வகைகள் உள்ளன. மலச்சிக்கல், அதனால் ஏற்படும் மூலநோய் மற்றும் சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் பகுதிகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிற்கு நிவாரணமாக சீரகம் பயன்படுகிறது. காரணம், சீரகத்தில் இருக்கும் நார்ச்சத்தும், தொற்றினை சரிசெய்யும் மருத்துவக்குணமும், மலம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மையும் ஒன்று சேர்ந்து, நல்லதொரு மலமிளக்கியாகச் செயல்பட்டு, இவ்வாறான பிரச்னைகளுக்கு நன்மையளிக்கிறது.

சீரகத்திலிருந்து பெறப்படும் cumanaldeyde என்னும் வேதிப்பொருள், சாப்பிட்டவுடன் உடனடியாக, அனைத்து உமிழ்நீர் சுரப்பிகளையும் தூண்டுவதன் மூலம் செரிமானத்தைத் துரிதமாக்குகிறது. அதிலிருக்கும்; Thymol என்னும் பொருள், உணவு செரிமானத்திற்குத் தேவையான பித்தநீர், நொதிகள், அமிலங்கள் போன்றவற்றையும் தூண்டி, செரிமானத்தை எளிதாக்குகிறது. விக்கல், ஏப்பம் முதல்கொண்டு பெரும்பான்மையான செரிமான மண்டல சிக்கல்களுக்குக் கை வைத்தியமாகவோ, உணவின் வழியாகவோ நிவாரணமளிக்கிறது என்பதாலேயே,

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே!
என்று சீரகத்தின் மருத்துவ நன்மைகளைப் பாடி இருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

சீரகப்பொடியாக இருப்பின் ஒருநாளைக்கு 1.5 கிராம் முதல் 3 கிராம் வரையிலும், சீரக எண்ணெயாக இருந்தால் 25.75 மி.கிராம் அளவிலும் சாப்பிடலாம் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீரகத்தை அதிகம் பயன்படுத்தினால் என்னவாகும்?

சீரகத்தை அதிக அளவில் சாப்பிடும்போது, மாதவிடாய் போக்கு அதிகமாகும் எனவும், பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு குறையும் என்றும் ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் அளவைக் குறைத்து, ஆண்மைத் தன்மையையும் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வாயு உற்பத்தியாவதைத் தடுப்பது அல்லது உற்பத்தியான வாயுவை வாய் வழியாக ஏப்பமாக வெளியேற்றுவது என்று இரண்டு பணிகளை சீரகம் செய்கிறது. எனவே, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் நிலையில், அதிகப்படியான, தொடர்ச்சியான ஏப்பமும், அபான வாயு வெளியேற்றமும் இருக்கும். பொதுஇடங்களில் அல்லது பணிபுரியும் இடங்களில் இந்நிலை சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல், சீரகத்தில் narcotic என்னும் போதை ஏற்படுத்தும் தன்மையும் இருப்பதால், அளவுக்கு அதிகமானால், மனக்குழப்பம், நடுக்கம், கவனச்சிதறல், தூக்கமின்மை போன்றவையும் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எளிதில் ஆவியாகக்கூடியது என்பதால், கல்லீரலைப் பாதிக்கும் நிலை இருக்கிறது. இதனால், சீரகமாகவோ அல்லது எண்ணெயாகவோ அதிகம் சாப்பிடக்கூடாது.

சீரகத்துடன் கலப்படம் செய்யப்படும் பொருட்கள்

அதிக அளவில் கலப்படம் செய்யப்படும் பொருட்களில் சீரகம் முதலிடத்தைப் பிடிக்கிறது. சீரகத்தின் தோற்றத்தினை ஒத்திருக்கும் தீவனப் புல்லின் விதையே பெரும்பாலும், கறுப்பு நிறமேற்றப்பட்டு சீரகம் மட்டுமல்லாமல், சீரகத் தூளுடனும் கலப்படம் செய்யப்படுகிறது. நெல் உமி, களிமண் துகள்கள் போன்றவையும் உள்ளடங்கும். சீரகத்தூளை தண்ணீரில் கரைத்தால், கலப்படப் பொருட்கள் நீரில் மிதக்கும் என்பதே கலப்படத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனை. சமீபத்தில், புதுடில்லியில், போலியான கலப்பட சீரகம் தயாரிக்கும் ஒரு போலித் தொழிற்சாலையே உணவு பாதுகாப்புத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20000 கிலோ போலி சீரகப்பொடி, கல் துகள்கள், புல் விதை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

சீரகத்தைப் பாதுகாக்கும் முறை

பொதுவாகவே சீரகம் ஈரப்பதம் இல்லாமல் உலர்நிலையில்தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவ்வப்போது வெயிலில் உலர்த்தி, ஈரப்பதம் சேராமல் இந்த உலர்நிலையை முறையாகப் பராமரித்தால், 2 முதல் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். ஒருவேளை ஈரப்பதம் சேர்ந்துவிட்டால், ரைசோபஸ் அல்லது அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை ஏற்பட்டு, ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக்கொண்டு, நிறம் மற்றும் மணம் மாறிவிடுவதுடன், சீரகத்தின் தரமும் குறைந்து, அதற்கே உரித்தான உணவு மற்றும் மருத்துவக் குணங்களும் குறைந்துவிடும்.

You may also like

Leave a Comment

17 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi