Sunday, September 1, 2024
Home » திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சேர்ந்திருக்கிறதா என அறிய நீங்கள் நலமா? புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்குகிறார்

திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சேர்ந்திருக்கிறதா என அறிய நீங்கள் நலமா? புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்குகிறார்

by MuthuKumar

மயிலாடுதுறை: திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சேர்ந்திருக்கிறதா என அறிய ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை (6ம் தேதி) தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம் முதல்வர், அமைச்சர்கள், கலெக்டர்கள் மக்களை தொலைபேசியில் அழைத்து திட்டங்களின் பலன்களை அடைந்து உள்ளார்களா என கருத்து கேட்பார்கள்.

மயிலாடுதுறை மன்னம்பந்தலில், புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி உட்பட ₹423 கோடியில் 71 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, ₹88 கோடியில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, ₹143.46 கோடியில் 12,653 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதுமாவட்டமாக உதயமான இந்த மயிலாடுதுறைக்கு, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைப்பதில் கூடுதல் பெருமை. புது மாவட்டங்கள் அறிவிப்பது பெரிது இல்லை, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் மிகமிக முக்கியம். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டவை.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து, திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு 7 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயலாக்கத்திற்கு வருகிறது என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து, இன்னும் ஒரு மிக முக்கியமான திட்டத்தையும் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். “நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” என்று இதற்குப்பெயர். கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிய வந்தது. அதை எளிமையாக்குவதுதான் இந்த புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை. காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். அதை கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது. முதல்கட்டமாக, 75 லட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள். இந்த விழாவில் இன்னும் சில அறிவுப்புகளை வெளியிடுவதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய்மார்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இன்று நம் தமிழ்நாட்டில், ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ‘‘விடியல் பயணத் திட்டம்’’ மூலம் 445 கோடி முறை பயணித்து மாதந்தோறும் 888 ரூபாய் வரை நமது சகோதரிகள் சேமிக்கிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிட்டு, வளமான தலைமுறையாய் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ‘‘புதுமைப்பெண்’’ திட்டம் மூலமாக 4லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் போய் சேருகிறது. இரண்டே ஆண்டுகளில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் மூலமாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள். 2 லட்சம் உழவர்கள் புதிய இலவச மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோரும், 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். ‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலம் 2 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். “முதல்வரின் முகவரி திட்டம்” மூலம் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. வேளாண் பெருங்குடி மக்கள் நிறைந்த இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில், 2021 முதல் 2024 வரை பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 614 ஹெக்டேர் நிலங்களுக்கு 96 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 400 உழவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். ‘‘மக்களைத் தேடி மருத்துவம்’’ திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இப்படி, தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பமும் பயனடைகின்ற வகையில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனச்சாட்சியாக செயல்படுகிறது, நம்முடைய திராவிட மாடல் அரசு. இந்த திட்டங்களுடைய பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்குப் போய் சேர்ந்திருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு, ஒரு புது திட்டத்தை வருகின்ற 6ம் தேதி (நாளை) சென்னையில் தொடங்கி வைக்கப்போகிறேன்.

அந்த திட்டத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘நீங்கள் நலமா?’ இந்த நீங்கள் நலமா திட்டத்தின் மூலம், முதலமைச்சரான நான் உட்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கருத்து கேட்கப்போகிறோம். உங்கள் கருத்து அடிப்படையில், நம்முடைய அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். முதற்கட்டமாக, நலத்திட்டங்கள் பற்றியும் அடுத்த கட்டமாக, அரசுத் துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் பற்றியும் கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படி ஒவ்வொரு நாளும், மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறோம். அதுவும் எந்த சூழ்நிலையில்? நிதி நெருக்கடி அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையிலும், எந்த மக்கள்நலப்பணிகளையும், திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை. ஏனென்றால், மக்கள் தொண்டு ஒன்றுதான் நம்முடைய ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ஒரு ‘டெல்டாகாரன்’ என்ற உணர்வுடன் இந்த விழாவில் நான் திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்! நிற்பார்கள்! நிற்பார்கள்! என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் நேற்று மதியம் 1.50 மணியளவில் புறப்பட்டு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு வந்தார்.

மயில் கேடயம் பரிசு
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மயில் உருவம் பொறித்த கேடயம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முதல்வருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த போட்டோவை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டினார்
சீர்காழி அருகே மேலையூரில் ஏராளமானோர் முதல்வரை வரவேற்றனர். அப்போது மணிகண்டன்- ஆர்த்தி தம்பதி, தங்களது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டனர். முதல்வர் அந்த குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டினார்.

கலெக்டரை இருக்கையில் அமரவைத்த முதல்வர்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர், கலெக்டர் அறைக்கு சென்று அவரது சேரில் உட்கார்ந்தார். பின்னர் அந்த சேரில் கலெக்டர் மகாபாரதியை உட்கார வைத்தார்.

பதவி நாற்காலியை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் மோடி: முதல்வர் கடும் தாக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இப்போது, தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி இருக்கிறார், நம்முடைய பாரதப் பிரதமர். வரட்டும். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கின்ற மிக மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டு வரட்டும். அப்படி இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும், ஓட்டும் மட்டும் போதும் என்று வருகிறார்கள் நாம் கேட்பது என்ன? சமீபத்தில், இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ₹37 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வந்தாரா? இல்லை ஒரு ரூபாய் கூட, ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்கு மட்டும் ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவர்களை பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்று அழுத்தந்திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.

மக்களிடம் மனுக்களை பெற்றார்
திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நேற்று முதல்வர் மயிலாடுதுறை புறப்பட்டார். அப்போது வீடு முன்பிருந்து 100 மீட்டர் தூரத்துக்கு ஏராளமானோர் திரண்டு கையசைத்து முதல்வரை அனுப்பி வைத்தனர். இதில் சிலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். காரில் இருந்தபடியே முதல்வர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

twenty + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi