டெல்லி: ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பரம எதிரியான பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி தனது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை பிரகாசமாக தொடங்கியுள்ளது. இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பை புள்ளிபட்டியலில் முதலிடத்தில் அமைந்துள்ளது.
சொந்த மண்ணில் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தத்தை தரும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது. சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா கடைசியாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்தியா வெற்றி பெற்று உலகக்கோப்பையை முத்தமிட்டதையடுத்து மூன்றாவது கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.
இந்திய அணி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளதாவது; “நான் தொடக்கத்தில் இருந்தே கூறினேன், அவர்கள் தோற்கடிக்கக்கூடிய அணியாக இருப்பார்கள் என்று. அவர்கள் மிகவும் திறமையான அணியைப் பெற்றுள்ளனர். அவர்களின் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு மற்றும் அவர்களின் டாப்-ஆர்டர், மிடில்-ஆர்டர் பேட்டிங் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளனர்” என கூறினார்.