சென்னை: தமிழ்நாடு அரசு ‘முதலீட்டு ஊக்குவிப்பு விருது’ பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: புதுப்பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு ‘முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023’-ஐப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு என் பாராட்டுகள். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமையான எதிர்காலத்துக்கான நமது திராவிட மாடல் அரசின் உறுதியான ஈடுபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. இந்தப் பெருமைமிகு மைல்கல்லை அடைந்ததற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஐ.ஏ.எஸ் மற்றும் கடுமையாக உழைத்து வரும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.