Friday, May 17, 2024
Home » தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலய புரட்சி: திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்.!

தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலய புரட்சி: திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்.!

by Mahaprabhu

சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள் அதிக இடம் பெற்றுள்ளனர். 38 மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள். உள்துறை, வீட்டுவசதித்துறை, ஆதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டேரர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் செயலாளர்கள் பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதலான பதவிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர். தமிழ்நாடு அரசு அலுவலகத்திற்குள் நுழைகிறோம். பெண்கள் அதிக அளவில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். பார்க்கிறோம். ஓர் அரசுப் பள்ளிக் கூடத்தில் சென்று பார்க்கிறோம். பெண்கள் பலர் ஆசிரியைகளாக மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகளுக்குள் சென்று பார்த்தால், அங்கும் பெண்களே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். ஆண் ஆசிரியர்கள் ஒரு சிலர் தான் இருப்பர். மருத்துவமனைகளுக்குள் சென்றால் ஆண் மருத்துவர்களுக்கு இணையாகப் பெண் மருத்துவர்கள் உள்ளனர்.

நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தால் அங்கும் பெண்கள் பலர் நீதிபதிகளாக திகழ்வதைக் காண முடியும். தாசில்தார் அலுவலகங்கள், பி.டி.ஓ. அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் துறை அலுவலகங்கள், பொதுப்பணித் துறையின் பொறியாளர் அலுவலங்கள் என எங்கு பார்த்தாலும் பெண் அலுவலர்கள் அதிகமாகப் பணிபுரிகிறார்உள்ளாட்சி நிறுவனங்களைக் கவனித்தால், ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், மேயர்கள் என எங்கும் பெண்கள் அமர்ந்து ஜனநாயகக் கடமையாற்றுவதைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஏறத்தாழ 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் திகழ்ந்து வரும் அதிசயங்கள். ஆம். 1989ல் கலைஞர் ஓர் ஆயுதத்தைக் கையில் எடுத்தார். இட ஒதுக்கீடு என்ற ஆயுதம் தான் அது. திமுக தேர்தலில் வென்றால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என 1989ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். மக்கள் மகத்தான ஆதரவு தந்தனர். திமுக வெற்றி பெற்று 27.1.1989 அன்று ஆட்சி அமைத்த கலைஞர் முதல்வரானார். முதல், மந்திரி சபை கூட்டத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட முடிவெடுக்கப்பட்டது. 3.6.1989ல் கலைஞர் பிறந்த நாளில், அரசாணை வெளியிடப்பட்டு, பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணிகளில் வழங்கும் பணி தொடங்கியது.

அதனால் தான், எல்லா அலுவலகங்களிலும் மகளிர் 100க்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பணிபுரிந்து வருகிறார்கள். தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த மாற்றத்தைத் செய்தது திமுக அல்லவா. அதே போல, கலைஞர் 1996 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். சொன்னதைச் செய்யும் திமுக என்று மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எனவே, திமுகவுக்கு வாக்களித்தனர். திமுக வென்றது. கலைஞர் நான்காவது முறையாக முதல்வர் ஆனார். 1996 அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். அந்தத் தேர்தலில் வென்ற 1 லட்சத்து 16 ஆயிரத்து 747 மக்கள் பிரதிநிதிகளில் 44,143 பெண்கள் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர்கள் வரை பொறுப்பேற்ற ஒரு மாபெரும் ஜனநாயகப் புரட்சி தமிழ்நாட்டில் அரங்கேறியது. இவை மட்டுமல்ல, இந்த தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தகுதியில் பணியாற்றும் அலுவலர்களில்கூட பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். கலைஞர் 1989ல் அரசுப் பணிகளில் மகளிர்க்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், தமிழ்நாட்டில் வேறு ஒரு மாபெரும் புரட்சியும் நடைபெற்றுள்ளது.

எல்லா அரசு அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர். குரூப்-1 பணிகள் மூலம் அரசுப் பணிகளில் சேரும் அற்புத வாய்ப்பு கிடைத்த மகளிர் பலர் சில ஆண்டுகளில் மாநில அரசினால் பரிந்துரைக்கப்பட்டு ஒன்றியப் பணியாளர் தேர்வாணைக் குழுமத்தின் வாயிலாக ஐ.ஏ.எஸ். ஆகிறார்கள். அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெண்கள் மட்டும் 96 பேர். தமிழ்நாட்டில் உள்ள உள்துறை செயலாளராக வீற்றிருப்பவர் ஒரு பெண்தான், இது தவிர காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வீட்டு வசதித் துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, முதல்வரின் செயலாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத் துறைகளின் செயலாளர்களாக பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.

38 மாவட்ட ஆட்சியர்களில் 17 பேர் கலெக்டர்களாக வீற்றிருந்து மாவட்ட நிர்வாகங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வீற்றிருப்பவரும் ஒரு பெண் தான். மகளிர்க்கு கலைஞர் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் தான் இந்த வாய்ப்பு பெண்குலத்திற்குக் கிடைத்துள்ளது. வேறு மாநிலங்களில் இதுபோல மகளிர்க்கு அரசு வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கலைஞர் நடைமுறைப்படுத்திய இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சலுகையை தற்போது தான் சில மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு அதிக எண்ணிக்கையில் மகளிர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பெற்றுள்ளது கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி. மாபெரும் புரட்சி தானே. இப்படி மகளிர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடுகள் மூலம் கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதல்வர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். 2021 தேர்தல் அறிக்கையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிப் பெண்குலம் போற்றுகிறார்கள். கல்லூரி மாணவிகள் 4 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறார். சொன்னதைச் செய்யும் தத்துவத்தைக் கொண்டுள்ள திமுக இந்த வாக்குறுதியையும் நிச்சயமாக நிறைவேற்றும் பெண்கள் பலர் எம்.எல்.ஏ.க்களாகவும், எம்.பி.க்களாகவும், வீற்றிருந்து பணியாற்றும் அருமையான காலம் அமையும்.ஆனால், பா.ஜ. ஆட்சியில் இட ஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

கலைஞர் 1990ல் அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் மூலமாக ஒன்றிய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடுகள் வழங்கிட ஆவன செய்தார். ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பாஜ ஒன்றிய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவித அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். 27 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனியும் பாஜ ஆட்சி தொடர்ந்தால் இட ஒதுக்கீடுகள் ஒன்றிய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பா.ஜ.க. ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும். மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம்.

You may also like

Leave a Comment

thirteen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi