Friday, May 10, 2024
Home » தமிழ்நாட்டையும், திமுகவையும் குறிவைப்பது ஏன்?.. அமைச்சர்கள் போல பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? :அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டையும், திமுகவையும் குறிவைப்பது ஏன்?.. அமைச்சர்கள் போல பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? :அமைச்சர் எ.வ.வேலு

by Porselvi

சென்னை : மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? அரைவேக்காடுகள் – அமைச்சர்கள் போல பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? என அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்திருக்கிறது என்பதிலிருந்தே இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக உள்ள மணிப்பூர் என்ற மாநிலம் திட்டமிட்ட கலவரத்தால் பற்றி எரிவதும், குறிப்பிட்ட இனத்திற்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் நடைபெறுவதும் உலக அரங்கில் இந்தியாவிற்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து வருகின்றன.

மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறது. இது பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், ஆளுந்தரப்பைச் சேர்ந்த அத்தனை பேரும் தி.மு.க.வையும் தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி, மணிப்பூரில் தங்கள் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள், தி.மு.க.வின் மக்களவை உறுப்பினரும், தி.மு. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசாவைப் பார்த்துச் சிறைக்கு அனுப்புவோம் என்ற ரீதியில் பேசினார். “என்னைச் சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுவதா? நீதித்துறை உங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று ஆ.இராசா கேட்டதும் அமைச்சரிடம் பதில் இல்லை. அதுமட்டுமல்ல, “இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?” என்றும் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மணிப்பூர் பற்றி பதில் சொல்லத் திறனின்றி தமிழ்நாட்டையும் தி.மு.க.வையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது, யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.

அண்மையில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வில், திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையை எடுத்துக்கூறி, அந்த வழியில்தான் திராவிட மாடல் அரசை தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை எடுத்துக்கூறி உரையாற்றினேன்.

முன்பு இருந்த நிலை என்ன, இப்போதுள்ள நிலை என்ன என்பதை விளக்கும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிடநாடாக்க முடியுமா என்று யோசிப்போம்” என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை முன்வைத்ததும், அது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களைவில் I belong to the Dravidian Stock என்று முழங்கியதும் வரலாறல்லவா. பின்னர், இந்தியா மீது சீனா போர் தொடுத்த காலத்தில், வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று அண்ணா அவர்கள் இந்தியாவின் நலன் கருதி எடுத்துரைத்ததும், பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்கொண்டு இயக்கத்தைக் காப்பாற்றும் விதமாக திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதும், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் வரலாற்று உண்மைகள் அல்லவா!

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற அண்ணாவின் முழக்கம் உண்மையாக இருந்தது. அதனால்தான் மாநில சுயாட்சியைக் கோரினோம். மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதன் காரணமாக, அன்றைக்கு இருந்த நிலைமை மாறி, திராவிட நாடு என்ற சிந்தனையைக் கைவிட்டு, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. ஒன்றுபட்ட – ஒருமைப்பாடு கொண்ட – பன்முகத்தன்மையுடன் மாநில உரிமைகளை மதிக்கும் இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையிலும் தொடர்ந்து பாடுபடுகிறோம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் துணை நின்று மீட்டெடுத்த இயக்கம் தி.மு.க. என்பதை நாடறியும்.

இதைத்தான் அந்த நிகழ்வில், “ஏதோ தூரத்தில் இருக்கிற ஊர் இந்தியா என்ற நிலைமையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய நிலைமை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழனுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கிறது” என்று எடுத்துரைத்தேன்.இந்தியாவைக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது என்பது எப்படி தவறான கருத்தாக இருக்க முடியும்? ஒரு வேளை அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத ஒன்றிய பா.ஜ.க அரசு, நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களும் அதை செய்யக்கூடாது என நினைக்கிறதா?

நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும் வேதனையும் படுகிறேன்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகம். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், அதுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களை எல்லாம் இணைக்கின்ற, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற கட்சி என்ற பயம்தான் பிரதமரையும் அமைச்சர்களையும் இப்படிப் பதற்றத்துடன் பேச வைத்திருக்கிறது.கழகத் தலைவர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள உங்களில் ஒருவன் மடலில் குறிப்பிட்டிருப்பதுபோல, நாங்கள் கலைஞரின் வார்ப்புகள். அவதூறுகள், மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். உண்மையை உரக்கச் சொல்வோம். கழகத் தலைவர் ஆணைக்கேற்பச் செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்வோம்,”இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi