Thursday, May 16, 2024
Home » கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம், குடிசைகள் இல்லா தமிழ்நாடு : தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!

கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம், குடிசைகள் இல்லா தமிழ்நாடு : தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முதல்முறையாக இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையில்,

“இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது.

“100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு பேரவையில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் மக்கள் நலத்திட்டங்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.வெறும் புள்ளிவிவரமாக இல்லாமல் கடைக்கோடி தமிழர்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக பட்ஜெட் இருக்கும்.

“தமிழ்நாடு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 தலைப்புகளில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்த 7 இலக்குகளை முன்வைத்தே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

“சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.தமிழ்நாட்டு இலக்கிய படைப்புகளை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

“செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை நவீனப்படுத்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

“கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். ரூ.65 லட்சத்தில் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் .

கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

“2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். இந்த திட்டம் ரூ. 3,500 கோடியில் செயல்படுத்தப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

“₹356 கோடியில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். ₹500 கோடியில் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்யப்படும்.

“தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி அளிக்கிறோம்.

“சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியை அடுத்துள்ள விரிவாக்க பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்

“100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ. 3300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்

“சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஆர்.கே. சாலை, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை உள்ளிட்டவை ரூ. 300 கோடியில் அகலப்படுதப்படும்.

“சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த ‘வட சென்னை வளர்ச்சி திட்டம்’ ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்

“பூவிருந்தவல்லி அருகே அரசு தனியார் பங்களிப்புடன் புதிய, நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும்.
நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்படும்:

“ரூ. 1500 கோடியில் அடையாறை மீட்டெடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை சீரமைக்கப்படும்

“வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் வகுக்கப்படும். கோவையில் நதிகளை சீரமைக்க ரூ. 5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்

“சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

“மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் நிறைவடையும்.

“ரூ. 7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

“நாமக்கல்லுக்கு ரூ. 350 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ. 565 கோடி, பெரம்பலூருக்கு ரூ. 366 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன் பெற மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

18 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi