சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் வருடந்தோறும் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா கடந்த 8ம் தேதி காலை 9.40 மணிக்கு கொடிமர பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்மாள், பெருமாள் ஆகியோர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்து வருகிறது. 9ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகா விஷ்ணு, அம்பாள் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து காலை 8.30 மணியளவில் விநாயகர் தேரில் விநாயகரும், அம்மன் தேரில் சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாளும், சப்பர தேரில் அம்மனும் அமரவைக்கப்பட்டு தேரை வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை இந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரதவீதி வழியாக பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தின்போது வெயிலே இல்லாமல் மேகமூட்டத்துடன் குளு குளு சூழல் நிலவியது.
இந்த தேரோட்டத்தில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ராஜேஷ், சுந்தரி, கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் பேரூர் திமுக செயலாளர் சுதை சுந்தர், கோயில் பணியாளர்கள் உள்பட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, 12 மணிக்கு சப்தவர்ணகாட்சியும் நடக்கிறது. 10ம் திருவிழாவான நாளை காலை 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகமும், இரவு 8.30க்கு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை அலங்கரிக்க செய்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தை 3 முறை வலம்வரும் தெப்பத்திருவிழா நடக்கிறது. இரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடக்கிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவடையும்.