Sunday, May 12, 2024
Home » “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-யை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-யை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

by Francis

சென்னை: சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலாதலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-யை வெளியிட்டார். சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

”தமிழ்நாடு சுற்றுலா கொள்கை” – 2023ன் சிறப்பம்சங்கள் தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது. முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி: அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்: தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள் முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஊக்கத்தொகை
வகை A திட்டப்பணிகள் (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) 25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். பெண்கள் எஸ்சி எஸ்டி திருநங்கைகள் மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். குறு சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும். வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) 5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.

20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும். நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும். வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.

ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

14 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi