Saturday, May 4, 2024
Home » தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by Lavanya

சென்னை: தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, காலநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் எழுதிய கடிதத்தில்,” தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.எனவே, தொலைநோக்கு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை (Heat Waves) வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு (Urban Heat Islands) பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ (Wet-Bulb Temperature) பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலை சமாளிப்பதற்காகவும், அதிவெப்பத்தை எதிர்கொள்வதற்காகவும் மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும், ஒவ்வொரு மாநகரம் மற்றும் ஒவ்வொரு நகருக்காகவும், வெப்பத் தணிப்பு செயல் திட்டங்களை (Heat Action Plans) உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமாகவும், மக்கள் பங்கேற்புடனும், போதுமான நிதி ஆதாரத்துடனும் இதனை போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

புவிவெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் ஒரு பகுதியாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக, வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 23 இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு வகைப்படுத்தப் பட்டுள்ளது. புவிவெப்பம் தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. கடந்த 1,25,000 ஆண்டுகளில் இல்லாத மிக அதிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மார்ச் மாதமாக 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்தில் புவிமேற்பரப்பு சராசரி வெப்பநிலை 14.14 டிகிரி செல்சியசாக இருந்தது.

அதிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் (Heat Stroke) மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும். சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சுவாச நோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு குறைபாடு உடையவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும் என மதிப்பிடுகிறார்கள். அதிக வெப்பத்தால் உணவு உற்பத்தியில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படும். மரங்கள், காடுகள், வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்புகள் நேரும். விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். இவ்வாறாக, ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் வெப்பத்தால் பாதிப்படையக் கூடும்.

எனவே, தமிழ்நாட்டினை அதிவெப்பத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் தொடங்க வேண்டும்.தமிழ்நாடு அரசு தமிழக நகரங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் வெப்பத் தணிப்பு செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை செயல்படுத்துவதில் அகில இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அகமதாபாத் நகர வெப்பத் தணிப்பு செயல் திட்டம் (Ahmedabad Heat Action Plan) 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை செயல்திட்டம் (Heat Wave Action Plan) 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த செயல்திட்டம் முழுமையானதாகவும் இல்லை. செயலாக்கப்படவும் இல்லை. தமிழ்நாடு முழுமைக்கும் மற்றும் ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு நகருக்குமான வெப்பத் தணிப்பு செயல்திட்டங்கள் உடனடியாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். பரவலாக்கப்பட்ட வடிவிலும், மக்கள் பங்கேற்புடனும், காலநிலை தகவமைப்பை (Adaptation) முன்னிலைப்படுத்தியும், அனைத்து துறையினரையும் உள்ளடக்கியும் இத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை (Accountability) விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment

15 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi